பொ.பாலாஜிகணேஷ்
கொங்கு மண்டலம் எனப்படும் கோயம்புத்தூரில் உள்ள சிறப்பு வாய்ந்த 10 கோயில்களும் அதன் சிறப்புகளும்
மருதமலை முருகன் கோயில்:
திருமணம் மற்றும் பிள்ளைவரம் வேண்டி புனித கயிறு மற்றும் தொட்டில்களை பக்தர்கள் கட்டுகின்றனர். இங்கிருக்கும் பாம்பாட்டி சித்தரின் சன்னிதியில் தரப்படும் விபூதி பல நோய்களை போக்கும் தன்மைகொண்டது. மலை அடிவாரத்தில் இருந்து மலைமீது உள்ள கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி இருக்கிறது. தனி வானங்களிலும் செல்லலாம்.
தென்னாட்டுக் காசி - அவினாசி லிங்கேஸ்வரர்:
தென்னாட்டுக் காசி என்ற அழைக்கப்படுகிறது. ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது என்று பொருள். ‘அவிநாசி’ என்றால் அழிவு இல்லாதது. அதன்படி அழிவு இல்லாத திருக்கோயிலாக இந்த அவினாசி கோயில் கருதப்படுகிறது.
ஈச்சனாரி விநாயகர் கோயில்:
தெய்வீகம் ததும்பும் ஈச்சனாரி விநாயகர் ஆலயம் கோவை - பொள்ளாட்சி பிரதான சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது. ஈச்சனாரி விநாயகரை வழிபட்டால் வேலைகளில் உள்ள தடைகள், தாமதங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும் என்பது நம்பிக்கை.
காரமடை ரெங்கநாதர் கோயில்:
கோவை மாவட்ட வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில். இங்கே லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். கொங்கு மண்டலத்தின் செல்வ வளத்துக்கு காமதேனுவாக அமைந்த தலம் இந்தத் தலம்.
பேரூர் பட்டீஸ்வரம்:
மிகப் பழமையான கோயில். சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள பட்டீஸ்வரர் சிவ லிங்கத்தின் தலையில் காமதேனு கன்றின் குளம்படி தழும்பு இருப்பதை இன்றும் காணலாம்.
மாசாணியம்மன் கோயில்:
கோவை பொள்ளாச்சியில் மலைகள் சூழ அமைந்துள்ளது மனக்குறைகளை தீர்க்கும் மாசாணியம்மன் ஆலயம். எல்லா கோயிலிலும் நின்ற நிலை அல்லது அமர்ந்த நிலையில் அம்மனை பார்த்திருப்போம். ஆனால் இந்த மாசாணியம்மன் கோவிலில் 17 அடி சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.
கொங்கு நாட்டு திருப்பதி:
கொங்கு நாட்டின் புகழுக்குரிய புனிதத் தலம் நைனார்க்குன்று (கொங்கு திருப்பதி). புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் பக்திப் பெருக்குடன் வழிபடுவர்.
தண்டுமாரியம்மன் கோயில்:
வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார் தண்டு மாரியம்மன். மைசூர் மன்னன் திப்பு சுல்தான் ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்க்க படை திரட்டினார். தனது படைகளுடன் கோவை கோட்டைக்குள் முகாமிட்டிருந்தபோது தண்டுமாரி அம்மன் தனது இருப்பிடத்தை உணர்த்தியதாக சொல்லப்படுகிறது.
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்:
வெள்ளியங்கிரி மலை, மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோயில்கள் சுமார் 3000 ஆண்டு பழமையான கோயில்களாக கருதப்படுகின்றன. இகே இருக்கும் சிவபெருமான் ‘வெள்ளியங்கிரி ஆண்டவர்’ என்றும் அம்பாள் ‘மனோன்மணி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சங்கமேஸ்வரர் கோயில்:
சோழர்களால் கட்டப்பட்டது. கோட்டை ஈஸ்வரன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சங்கமேஸ்வரர் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. தாயார் அகிலாண்டேஸ்வரி.