கிரி கணபதி
நூற்றுக்கணக்கான மைல் தூரம் பறந்தாலும் புறாக்கள் எப்படி கரெக்ட்டாக வழிதவறாமல் வீடு திரும்புகின்றன? கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மமாக இருந்த புறாக்களின் 'இன்-பில்ட் ஜி.பி.எஸ்' ரகசியத்தை இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
1. புறாக்கள் எப்படித் துல்லியமாக திசையைக் கண்டுபிடிக்கின்றன என்பது விஞ்ஞான உலகிற்குப் பிடிபடாத ஒரு மர்மமாகவே இருந்தது. தற்போது ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் விடையைக் கண்டுபிடித்துள்ளனர்.
2. புறாக்களின் இந்த திசைகாட்டும் கருவி அவற்றின் கண்களிலோ அல்லது மூக்கிலோ இல்லை. அது அவற்றின் உடலுக்குள் மறைந்திருக்கும் வேறு ஒரு உறுப்பில் மிக ரகசியமாகச் செயல்படுகிறது.
3. புறாக்களின் திசையறியும் ரகசியம் அவற்றின் கல்லீரலில் தான் ஒளிந்திருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். கல்லீரல்தான் அவற்றுக்கு ஒரு வலுவான காந்த சமிக்ஞையை வழங்கி சரியான திசையைக் காட்டுகிறது.
4. இவற்றின் கல்லீரலில் உள்ள சில பிரத்யேக நோய் எதிர்ப்புச் செல்கள் ரத்த சிவப்பணுக்களை உடைக்கின்றன. இதன் மூலம் கிடைக்கும் இரும்புச்சத்தை அந்த செல்கள் தங்களுக்குள்ளேயே பத்திரமாகச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
5.இந்த இரும்புச்சத்து நிறைந்த செல்கள் கல்லீரலில் உள்ள நரம்புப் பட்டைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளன. இதுவே பூமியின் காந்தப்புலத்தை ஈர்த்து 'காந்த உணர்வாக' மூளைக்குச் சிக்னலாக அனுப்புகிறது.
6. இந்த தியரியைச் சோதிக்க விஞ்ஞானிகள் சில புறாக்களின் உடலில் இருந்து அந்த குறிப்பிட்ட செல்களை மட்டும் தற்காலிகமாக நீக்கினர். அதன்பிறகு பறக்கவிடப்பட்ட அந்தப் புறாக்களால் தங்களது வழியை அறவே கண்டுபிடிக்க முடியவில்லை.
7. செல்களை நீக்கிய புறாக்கள் எப்போதுமே வழிதவறிப் போவதில்லை, மேகமூட்டமான நாட்களில் மட்டுமே அதிகம் திணறின. ஏனென்றால் புறாக்கள் காந்தப்புலத்தை மட்டுமின்றி சூரியனையும் தங்களது முக்கிய வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்றன.
8. உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்த அசாதாரண கண்டுபிடிப்பு புகழ்பெற்ற 'சயின்ஸ்' (Science) இதழில் வெளியாகியுள்ளது. இந்த விளக்கம் மிகவும் அறிவியல்பூர்வமாக இருப்பதாகப் பிற நாட்டு நிபுணர்களும் இதனை வியந்து பாராட்டியுள்ளனர்.
9. இந்த இயற்கையான 'காந்த ஜி.பி.எஸ்' தொழில்நுட்பம் புறாக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இது சுண்டெலிகள் மற்றும் பிற பறவைகளுக்கும் கூட பொருந்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
10. கல்லீரலைத் தவிர்த்து அவற்றின் மண்ணீரலிலும் இதேபோல இரும்புச்சத்து செல்கள் காணப்படுகின்றன. இது குறித்து விஞ்ஞானிகள் தற்போது மேலும் பல கட்ட ஆய்வுகளைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றனர்.
புறாக்களின் கல்லீரலுக்குள் இத்தனை பெரிய காந்த ஜி.பி.எஸ் மேப் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.