கோவீ.ராஜேந்திரன்
தந்தை பெரியாரிடம் (Periyar) கேட்கப்பட்ட சில கேள்விகளும், நம் சிந்தனையைத் தூண்டும் அவர்தம் பதில்களும்...
ஐயா, அதிக துன்பம் தரக் கூடிய சொல் எது?
என்னைப் போலித்தனமாகப் புகழ்வது எனக்குத் துன்பம் தரக் கூடியதாகும்.
பொது நலம் என்றால் என்ன?
மழை பெய்கிறதே! அது பொது நலம்!
சுயநலம் என்றால் என்ன?
மழை பெய்யும் போது நீ குடை பிடிக்கிறாய் பார் அது சுயநலம்.
95 வயது வரை வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும்.
இந்த வயதிலும் பல மைல்கள் பயணிக்கிறீர்களே?
வயதுக்கும் பயணத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை பொறுத்தவரையில் சும்மா இருக்க முடியாது. சுற்றுப்பயணம் செய்தால் நன்றாக இருக்கிறது.
ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறீர்கள்?
சாதாரணமாக எட்டு, ஒன்பது மணிக்கு தூங்குவேன். பொதுக்கூட்டம் இருந்தால் 11 மணி 12 மணிக்கு தூங்குவேன்.
கிளர்ச்சி, போராட்டங்களில் ஏன் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள்?
நான் என்ன சொல்கிறேனோ அதை நானே முன்னின்று செய்தால் தானே நல்லது. ஒதுங்கிக் கொள்வது எனக்குப் பிடிக்காது.
ஏன் தங்களுடைய சுய சரிதையை எழுதக் கூடாது?
உண்மைகளை எழுதினால் எனது குறைகளையும் சொல்ல வேண்டும், அது எனக்கு மனவேதனை தரும். புகழ்ச்சியாக எழுதினால் மற்றவர்களுக்கு வருத்தமாக இருக்கும். அதனால்தான் நான் என் சுயசரிதையை எழுதவில்லை.
பெரியார் அவர்கள் அதிகமான மை கொள்ளக் கூடிய பெரிய பேனாவால் தான் எழுதுவார். சிறிய பேனாவைத் தொடமாட்டார். அவர் எழுதும் போது, ஆங்கிலத்தில் எழுதுவது போல எழுத்துக்களை எல்லாம் ஒன்றாக இணைத்து இணைத்துத்தான் எழுதுவார்.