மும்பை மீனலதா
கிறிஸ்துமஸ் என்றாலே சான்டாக்ளாஸ், கேக், மரம், விருந்து என பல நினைவுக்கு வந்தாலும், இப்பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது கிறிஸ்துமஸ் மரமாகும்.
பண்டைய காலத்தில், ப்ரொட்டஸ்டன்ட் கிறிஸ்துவ சீர்திருத்தவாதியான மார்டின் லூதர்தான் முதன் முதலாக மரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தாரெனக் கூறப்படுகிறது.
நாளடைவில், இதில் மாற்றம் ஏற்பட்டு மின்சார வண்ண விளக்குகள், மணிகள், சாக்லேட்கள் என பலவிதமான பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டன. மரத்தின் உச்சியில் நட்சத்திரம் அல்லது முக்கோணம் ஒன்றை வைத்துவிடுவது நிச்சயம் உண்டு.
ஜெர்மனியைச் சேர்ந்த புனித போனிபேஸ் என்பவர் மத போதனைகளைச் செய்கையில், அங்கிருந்த ஓக் மரத்தை மக்கள் வழிபடுவது கண்டு கோபமுற்றார். அவர் அதை வெட்டி வீழ்த்த, அதனடியிலிருந்து கிறிஸ்துமஸ் மரம் முளைத்து வளர்ந்தது. இதனால், ஜெர்மனி இதன் பிறப்பிடமென பலரால் கூறப்பட்டது. பின்னர் வீடுகளுக்குள்ளும் அனுமதிக்கப்பட்டது.
ஃபிரான்ஸ் இளவரசி ஹெலீனி, தனது திருமணத்திற்குப் பிறகு, ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை பாரீஸ் நகருக்கு கொண்டு வந்து விழா கொண்டாடியுள்ளார்.
இங்கிலாந்து அரசி விக்டோரியா, ஜெர்மன் நாட்டிற்கு அடிக்கடி பயணிக்கையில், அந்நாட்டு இளவரசர் ஆல்பர்ட் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார்.
ஆல்பர்ட், அலங்கரிக்கப்பட்ட ஒரு மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாட, கிறிஸ்துமஸ் மரம் இங்கிலாந்திற்குள்ளும் நுழைந்தது.
மரத்தின் உச்சியில் வைக்கப்படும் முக்கோண வடிவம், தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் முப்பரிமாணங்களைக் குறிப்பதாகும். கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பதன் மூலம், இயேசு உருவான நாளை நினைவு கூருகின்றனர்.
பசுமையான ஊசியிலையுடன் கூடிய கிறிஸ்துமஸ் மரத்தில், ஃபைன் அல்லது ஃபிர் தளிர்கள் இடம் பெற்றிருக்கும். வீட்டினுள்ளேயோ அல்லது வீட்டு முகப்பிலோ வைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். தற்சமயம் கிறிஸ்துமஸ் மரம் ஃபோட்டோ ஷூட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரங்கள் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும், கனடாவிலும் வளர்க்கப்படுகின்றன. இத்தொழிலில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வருடந்தோறும், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 4 கோடிக்கு மேல் விற்பனையாகிறது. பெரிய வியாபாரத்தளமாக கிறிஸ்துமஸ் மர விற்பனை செயல்பட்டு வருகிறது.
பிற மதத்தினர் கூட, தங்கள் குழந்தைகளின் வேண்டுகோளைத் தட்ட இயலாமல், அலங்கரிக்கப்பட்ட சிறிய கிறிஸ்துமஸ் மரத்தினை வாங்கி வீட்டு ஹாலில் வைக்கையில், குழந்தைகள் மகிழ்வடைகின்றனர்.