கவிதா பக்கிள்
1982-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந் தேதி உலகம் முழுவதும் உலக இசை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியத் திரைப்படங்களில் பாடல்களின்பங்கும், அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும் இன்றியமையாதது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் குறித்துப் பார்ப்போம்.
கே.வி.மகாதேவன்: 1942-ல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த கே.வி.மகாதேவன் 1993-ல் முருகனே என்ற படத்துடன் தன் இசைப்பயணத்தை நிறுத்திக்கொண்டார். இவர் கந்தன் கருணை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான முதல் தேசிய திரைப்பட விருதைப் பெற்றவர்.
எம் எஸ் விஸ்வநாதன்-ராமமூர்த்தி: தமிழ் சினிமாவில் 1952-ல் இசையால் ஆட்சி செய்தவர்கள் எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி. எம்.எஸ்.விஸ்வநாதன் 15 வயதிலேயே மூன்று இசைக்கருவிகளை இசைக்கும் திறனைப் பெற்றிருந்தார். தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர்களுக்கு ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று பட்டத்தை சிவாஜி கணேசனும், இருவருக்கும் தனித்தனியாக ‘திரையிசை சக்கரவர்த்தி’ என்று பட்டத்தை முதல்வர் ஜெயலலிதாவும் வழங்கினார்கள்.
சங்கர் - கணேஷ்: 1967-ல் மகராசி படத்தின் வாயிலாக திரைப்பயணத்தை தொடங்கிய இவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தனர். சினிமா துறையில் நுழைய கவியரசு கண்ணதாசன் அடையாளம் காட்ட, தேவரின் உதவியால் சினிமாவில் பெரும் புகழ் பெற்ற காரணத்தால், திரைப்படங்களில் தங்கள் பெயர் டைட்டிலில் வரும் போது ‘கவிஞர் வழங்கிய தேவரின்’ சங்கர் கணேஷ் என்ற பெயரைப் பயன்படுத்தினர்.
இளையராஜா: அன்னக்கிளி மூலம் திரையுலகில் நுழைந்த இளையராஜா இன்று வரை கிட்டதட்ட 49 ஆண்டுகளாக திரைத்துறையை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இளையராஜா, ஆரம்பத்தில் விலையுயர்ந்த உடைகளை அணிவாராம். முரட்டு காளை ரீலிஸின் போது ரஜினிகாந்த்துக்கு இணையாக இளையராஜாவுக்கும் பெரிய கட்அவுட் வைத்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரபோஸ்: 1977 முதல் 90களின் ஆரம்பம் வரை இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சந்திரபோஸ் இசையமைத்த 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்' என்ற இந்த பாடல் எத்தனையோ தமிழர்களை சபரிமலை நோக்கி நடக்க வைத்தது என்பது சரித்திரம்..!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்: எஸ்.பி.பி 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை செய்துள்ளார். தொடர்ந்து ஒரு நாளைக்கு 16-17 பாடல்களைப் பல்வேறு மொழிகளில் பாடும் திறமை வாய்ந்த இவர், சில நாட்கள் தொடர்ந்து 17 மணிநேரம் கூட பாடுவாராம். ஒருமுறை கன்னட இசையமைப்பாளர் உபேந்திரகுமாருக்கு 12 மணிநேர இடைவெளியில் 21 பாடல்களை பாடி கொடுத்துள்ளார்.
எஸ்.ஏ.ராஜ்குமார்: எஸ்.ஏ.ராஜ்குமார் சின்னப்பூவே மெல்லப் பேசு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். "முதல் பாடல்" என்ற திரைப்படத்தை தயாரித்துள்ள எஸ்.ஏ.ராஜ்குமார் ஒரு வழிப்பாதை போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் இசையமைத்த பல காதல் மெலடி பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
தேவா: தேனிசை தென்றல் தேவா ஒரு காலத்தில் இசைஞானி இளையராஜாவையும், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானையும் கலந்த கலவையாக இருந்தவர். கானா பாடல்களுக்கு பெயர் பெற்ற இவரின் கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். தேவா பல கானா பாடல்களை எழுதியும், அப்பாடல்களை தானே பாடியும் உள்ளார்.
வித்யாசாகர்: இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான வித்யாசாகர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். தனது வித்தியாசமான இசையால் வித்யாசாகர் பலரை வசியப்படுத்தி வைத்திருந்தார் என்றால் மறுக்கமுடியாது.
ஏ.ஆர்.ரகுமான்: இப்ப இருக்கிற நிறைய இளைஞர்களுக்கு ரகுமான்தான் வாத்தியார். மணிரத்னம் மீதான மரியாதை காரணமாக அவர் எந்த நொடி நினைத்தாலும் ரகுமானைச் சந்திக்க முடியும். தனிமை விரும்பி, குறைவாக பேசும் இவர் நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் நிறைய பேசுவாராம். ரகுமான் வீட்டில் இருக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வீடியோ கேமை குழந்தைகளுடன் விளையாடுவாராம்.
யுவன் சங்கர் ராஜா: இளையராஜாவின் மகனான இவர் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ஆவார். யுவன் படத்திற்கு இசையமைக்கும்போது இவருடைய வயது 16. இவர் தமிழ்த் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் "ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலபடுத்தியவர்.
பரத்வாஜ்: இவர் தனது 17-வது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர். பரத்வாஜ் இசையமைக்க வரும்முன் சி.ஏ பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ்: ஹாரிஸ் ஜெயராஜ், திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பாளராக இருந்து இசையமைப்பாளராக உயர்ந்தார். ஆறு வயதில் கர்நாடக இசையில் பயிற்சி பெறத் தொடங்கினார். இசை அமைப்பதற்கு முன்பு, அவர் பல இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களில் கிட்டார் வாசித்துள்ளார். இவரது இசையில் மேற்கத்திய மற்றும் இந்திய இசைக்கருவிகள் இரண்டையும் கேட்கலாம். கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
டி.இமான்: திரைப்பட இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அறியப்படும் டி.இமான் 2001-ம் ஆண்டு தமிழன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2023-ல் ஒரு திரைப்பட நடிகர் பிரபுவின் இறுதிச் சடங்குகளை, உறவினர்கள் செய்ய முன்வராதபோது, டி.இமான் ஒரு சகோதரர் போல் முன்வந்து செய்தது அவரது மனிதநேயத்தை காட்டியது. சமீபத்தில் இவர் தனது உடலை தானம் செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
தேவி ஸ்ரீ பிரசாத்: ரசிகர்களால் டிஎஸ்பி என்று அழைக்கப்படும் தேவிஸ்ரீ பிரசாத் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஏராளமான எனர்ஜிட்டிக்கான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். 46 வயதானாலும் இன்னும் சிங்கிலாகவே வலம் வரும் இவர் இசையமைப்பது மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர் எனவும் திகழ்ந்து வருகிறார்.
தமன்: தமன் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன், "பாய்ஸ்" திரைப்படத்தில் நடிகராக நடித்திருந்தார். இசையமைப்பாளர், நடிகர், ரியாலிட்டி ஷோவின் நடுவர் என அடுத்தடுத்து பிசியாக வலம் வரும் தமன், 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ளார். இசையமைப்பாளர் தமனின் மனைவி ஸ்ரீவர்தினி ஒரு பாடகி என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘கண்ணாலே மிய்யா மிய்யா’ சிறுத்தை படத்தில் ‘ஆராரோ ஆரிராரோ’ போன்ற பாடல்களை ஸ்ரீவர்தினி பாடியுள்ளார்.