தேனி மு.சுப்பிரமணி
உலகெங்கும் ஜூலை 16 ஆம் நாளை, பாம்புகள் நாளாகக் கொண்டாடுகின்றனர். பாம்புகள் நச்சுடையவை என்று சொல்லப்பட்டாலும், பாம்புகள் இயற்கையின் சமநிலையைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்குக் கால்கள் இல்லை, எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகர வல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை.
பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் வரை உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் மட்டும் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை.
நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும், உணவுக்காகவும் நஞ்சைப் பயன்படுத்துகின்றன. இரைகளைப் பற்களால் கவ்விக் கடிக்கும்போது, பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொல்கிறது.
ஒரு சில நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை.
வேறு சில பாம்புகளின் நஞ்சு ரத்தக் குழாய்களையும் ரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும்.
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், விரியன்கள் போன்ற சில பாம்புகள் குட்டி போடுகின்றன. மண்பாம்புகளின் கரு முட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது.
ரீனல் பாம்புகள் தரையில் இலைகளைக் கூடாகக் கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டுப் பாம்பு மட்டும் ஆணில்லாமல் தானாகவே கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு என்பது மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. பாம்பிற்கு 200 முதல் 400 (அல்லது அதற்கு மேற்பட்ட) முதுகெலும்புகள் உள்ளன.
பாம்பின் நன்கு விரியக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை உட்கொள்ள உதவுகின்றன.
பாம்புகளின் நுரையீரல்களில் வலது பக்கம் மட்டுமே வேலை செய்கிறது. பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை, இவை தங்கள் தோலை உரித்துப் புதுப்பித்துக்கொள்கின்றன.
அனைத்து வகையான பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக்கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின் முட்டைகள், மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை உணவாகக்கொள்கின்றன.
சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொல்கின்றன. சில பாம்புகள் இரையைச் சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.
பார்படாஸ் திரட் என்ற பாம்பு உலகிலேயே மிகச்சிறியது. 10 செ.மீ அளவில்தான் இருக்கும். ரெட்டிகுலேட்டடு பைத்தான் என அறியப்படும் ராஜ மலைப்பாம்புதான் உலகிலேயே மிக நீளாமானது. 30 அடி நீளம் வரை வளரும்.
தென் அமெரிக்காவில் உள்ள பச்சை அனகோண்டா, உலகிலேயே மிகப்பெரிய பாம்பு. 100 கிலோ வரை எடை இருக்கும்.
கூடுகட்டி முட்டையிட்டு அடை காப்பது ராஜநாகம் மட்டுமே. இவை மூங்கில், ஈத்தல் புற்களைக்கொண்டு கூடுகள் அமைக்கும். இனப்பெருக்கக் காலத்தில் ஆக்ரோஷமாக காணப்படும். இதன் உணவு பாம்புகள் மட்டுமே. சாரைப்பாம்பை விரும்பி உண்ணும்.
மக்களிடம் பாம்புகள் குறித்து பல தவறான, மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பாம்புகள் குறித்த சில மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, எச்சரிக்கை உணர்வுகளுடன் இருப்பது நல்லது. இதைத்தான் பாம்புகள் நாள் நமக்கு உணர்த்துகிறது.