மகாலெட்சுமி சுப்ரமணியன்
நவராத்திரி விழாவை இந்திரன் அனுஷ்டித்து விருத்திராசுரனை அழித்தான் என்கிறது புராணம்.
பங்குனி அமாவாசைக்கு பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசியில் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மஹா வாராஹி நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் சிறப்பாக சொல்லப்படுகின்றன.
காளியை மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடும் மேற்கு வங்கத்தினரை சக்தி வணக்கக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
கொல்லூர் செல்லும் வழியில் கட்டீல் வனதுர்க்கை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த துர்க்கை மிகவும் உக்கிரமானவள் என்பதால் அம்பிகையின் வெப்பத்தை தணிக்க நிமிஷத்துக்கு நிமிஷம் இளநீர் அபிஷேகம் செய்வர்.
கேரளாவில் செடிகள் புதராக மண்டியிருக்கும் பனச்சிக்காடு சரஸ்வதி கோயிலில் பள்ளத்தையே சரஸ்வதி தேவியாக வழிபடுகிறார்கள்.
உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை உடுத்தி சிறப்பு பூஜை செய்கிறார்கள். இது மைசூர் மகாராஜாவின் கைங்கர்யம்.
ஆலயம், மடம், தியான பீடம், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, அலுவலகங்களில் அனைவரின் நலனுக்காக பிரஜாபிரதிஷ்டை எனும் முறைப்படி க்ஷீசக்கரம் அமைத்தால், ஒற்றுமை தழைக்கும், வளங்கள் சேரும், அமைதி நிலவும்.
பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என பலவகைப்பட்ட நவராத்திரிகள் உள்ளன.
இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ள அம்மனை ஊத்துக்கோட்டை சுருட்டபள்ளி நீலகண்டேஸ்வரர் கோவிலில் மட்டுமே காணலாம்.
குடந்தை திருநீலக்குடியில் அநூபமஸ்தனி, பத்ராபீஷ்டப்ரதாயினி என்ற பெயர்களில் இரண்டு அம்மன் சந்ததிகள் உள்ளன.
மிக குறைந்த உயரமுள்ள அம்மன் திருவண்ணாமலையில் அருளும் உண்ணாமுலை அம்மன்.
அம்மன் படுத்த கோலத்தில் பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் ஆக காணலாம்.
காயத்ரி தேவிக்கு மாடம்பாக்கம் யஷ்வந்த் நகரில் கோவில் உள்ளது.
ஷோடச லட்சுமிகளையந்திர ரூபமாக சேலையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காணலாம்.
வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் அம்மனை திருமீயச்சூரில் லலிதா பரமேஸ்வரியாக தரிசிக்கலாம்.
கர்நாடகா மாநிலத்தில் தார்வார் அருகே சௌதத்தி என்கிற குன்றில் அம்மனை ரேணுகாதேவி என்ற நாமத்தில் கழுத்து வரையிலான வடிவில் காணலாம்.
கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி சமயத்தில் மட்டும் திறக்கப்படும் வாசல் ஒன்று உள்ளது. அதற்கு நவராத்திரி வாசல் எனப் பெயர்.