மகாலெட்சுமி சுப்ரமணியன்
'பறவை ஏறும் பரம புருடா' என கருடனைச் சொல்வர். பெருமாள் உற்சவங்களில் கருட சேவை விசேஷமானது. கருடனை தரிசிக்க பாவங்கள் நீங்கும். மங்கலங்கள் சேரும். கருடன், விஷ்ணுப் ப்ரியன், சுபர்ணன், பெரிய திருவடி, தெய்வப்புள் என பல திருநாமங்களால் வணங்கப்படுகிறார்.
கருட பஞ்சமி நாளில் கருட பகவானை வணங்குவதால் பகைமை உணர்வு நீங்கும். கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும். செல்வம் செழிக்கும். நினைவாற்றல், வாக்கு வன்மை கூடும். மன வியாதி, இதய நோய், விஷ நோய்கள் குணமாகும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். கருடனை வழிபடுவோம். நலம் பல பெறுவோம்.
சில விசேஷ கருடன் சன்னதிகள் கீழே...
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் பாம்பு, அமிர்த கலசத்துடன் கருடனை தரிசிக்கலாம்.
திருப்பதி மலையிலுள்ள சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்தவர் கருடனே.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த அரியக்குடி ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் கருடனுக்கு தேங்காயை சிதறு காயாக உடைத்தால் தடைகள் நீங்கும்.
கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி கோயிலில் சங்கு, சக்கரத்துடன் கருடாழ்வாரை தரிசிக்கலாம்.
கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் மூலவராக இருக்கும் கல் கருடனே வீதியிலும் உலா வருகிறார்.
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் ஏழடி உயர கருடன் நின்ற கோலத்தில் பாம்பை அணிந்த நிலையில் இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தன்று ஒன்பது கருட சேவை நடக்கும்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடியில் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் கருடன் காட்சி தருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னார், ஆண்டாளுடன் கருடாழ்வாரும் கருவறையில் இருக்கிறார். இத்தலத்தில் ரங்கமன்னாரின் மாமனாராக இருப்பவர் கருடனே.