கண்மணி தங்கராஜ்
இந்தியாவில், பல்வேறு மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும், சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதும் கிரிக்கெட் வரலாற்றின் பல மறக்கமுடியாத வரலாற்று தருணங்களை கொண்டு இருக்கிறது.
பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஏ.சிதம்பரத்தின் நினைவாக இந்த மைதானத்திற்கு ‘எம்.ஏ. சிதம்பரம் மைதானம்’ எனப் பெயர் வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னதாக இது ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மைதானம்’ அல்லது ‘சேப்பாக் ஸ்டேடியம்’ போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது.
இந்திய நாட்டின் பத்தாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக இருப்பது இந்த ‘சேப்பாக் ஸ்டேடியம்’ தான். முதலாவதாக இருப்பது கொல்கத்தாவில் உள்ள ‘ஈடன் கார்டன்’ ஸ்டேடியம்.
1916 ஆம் ஆண்டு தான் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான விளையாட்டு மைதானங்களில், இன்னும் பயன்பாட்டில் இருப்பது. இது ஒன்று மட்டும் தான் என கூறப்படுகிறது.
1934 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் புகழ்பெற்ற ‘ரஞ்சிக் கோப்பை’ முதன் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற்றது.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை இந்த மைதானத்தில் தான் கொண்டாடியது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் உள்ள மற்ற எந்த மைதானத்தையும் விட சேப்பாக்கத்தில் தான் அதிக ரன்களை எடுத்துள்ளார். அதாவது ஒன்பது டெஸ்டில் 876 ரன்கள் எடுத்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு முதல் இந்த ஸ்டேடியத்தில் ஃப்ளட்லைட்கள் பொருத்தப்பட்டன.
விரேந்திர சேவாக் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்கள் எடுத்தது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான். இது டெஸ்ட் வரலாற்றில் அதிவேக டிரிபிள் செஞ்சுரி என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில், அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மைதானம் சென்னை சேப்பாக்கம் தான் என கூறப்படுகிறது.
இதே ஆட்டத்தில் தான், ராகுல் டிராவிட்டும் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.