A.N.ராகுல்
தண்ணீர் பாட்டில் என்றாலே நமக்கெல்லாம் நினைவில் வருவது பிளாஸ்டிக் பாட்டில்கள்தான். அவைகளை பயன்படுத்துவதற்கு சில வழிமுறைகள் மற்றும் காலாவதியாகும் நேரம் இருக்கிறது. காரணம் அது நம் ஆரோக்கியத்திற்கு சில நேரங்களில் தீங்கு விளைவிக்கும். பிளாஸ்டிற்கு மாற்றாக என்னென்ன பாட்டில் வகைகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கண்ணாடி பாட்டில்கள்: கண்ணாடி தண்ணீர் பாட்டில்கள் ஒரு சிறந்த தேர்வாகும். நச்சுத்தன்மையற்றவை. தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளியேறாது. சுத்தம் செய்ய எளிதானவை. இருப்பினும், அவற்றை கையாளுவதில் கவனம் தேவை.
ஸ்டைன்லெஸ்ஸ்டீல் (Stainless steel): துருப்பிடிக்காத ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள் நீடித்தவை. அரிப்பை எதிர்க்கும். தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றாது. ISO குறிப்பிட்டுள்ள நல்ல ஸ்டீல் பாட்டில்களை பார்த்து வாங்குவது நல்லது.
BPA-இல்லாத பிளாஸ்டிக் : சில உயர்தர பிளாஸ்டிக் பாட்டில்கள் BPA(bisphenol A) இல்லாத பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை பயன்பாட்டிற்கு பாதுகாப்பானவை.
அலுமினியம்: இலகுரக மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை. அவை தண்ணீரில் அலுமினியம் கசிவதைத் தடுக்க ஒரு கோட்டிங் லைனிங் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே லைனிங் தரம் குறிப்பிட்டுள்ள பாட்டில்களைப் பார்த்து வாங்குங்கள்.
செம்பு(Copper): செம்பு பாட்டில்களில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, அவை ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது. இருப்பினும், அவை கறைபடுவதைத் தடுக்க கவனமான சுத்தம்தேவை.
சிலிகான்: சிலிகான் தண்ணீர் பாட்டில்கள் நெகிழ்வானவை. எடுத்துச் செல்ல எளிதானவை. பயன்பாட்டிற்கு பாதுகாப்பானவை. ஆனால் சில நேரங்களில் முந்தைய பானங்களில் இருந்து சுவைகளை தக்கவைத்துக்கொள்ளும்.
டைட்டானியம்: டைட்டானியம் பாட்டில்கள் இலகுரக, நீடித்த மற்றும் அரிப்பை எதிர்க்கும் தன்மை கொண்டவை. அவை தண்ணீரின் சுவையில் எந்தமாற்றமும் செய்வதில்லை. இருப்பினும், அவை விலை உயர்ந்ததாக இருக்கும்.
மூங்கில்: மூங்கில் தண்ணீர் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானது. மக்கும் தன்மை கொண்டவை. தண்ணீரைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவை பெரும்பாலும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி உட்புறத்தைக் கொண்டுள்ளன.
பயோபிளாஸ்டிக்ஸ்: சில தண்ணீர் பாட்டில்கள் biodegradable plastics முற்றிலும் மக்கும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றை வாங்கு முன் "Compostable" அல்லது "Biodegradable" போன்ற சான்றிதழ்களைத் தேடுங்கள்.
பீங்கான்: பீங்கான் தண்ணீர் பாட்டில்கள் ஸ்டைலானவை. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இரசாயனங்களை கசிவு செய்யாது. அவை தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்ககும். ஆனால் கனமாகவும் உடையக்கூடியதாகவும் இருக்கும்.
PET பிளாஸ்டிக்: பாலி எதிலீன் டெரெப்தாலேட் (Polyethylene terephthalate) (PET) பாட்டில்கள் பொதுவாக ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள். அவை இலகுரக மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவையாக இருந்தாலும், இரசாயனக்கசிவு ஏற்படுவதால், மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.