அழகுக்கு அழகு சேர்க்க 8 எளிய டிப்ஸ்!

சேலம் சுபா

கொதிக்கும் நீரில் இருந்து வெளிவரும் ஆவி முகம் முழுவதும் படும்படி ஒன்றிரண்டு நிமிடங்கள் காட்டுங்கள். பின் சுத்தமான துணியால் அழுந்தத் துடையுங்கள். எண்ணெய் வழிவதைத் தடுக்கும் எளிய ஸ்டீம்பாத் இது.

வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு  ஐந்து நிமிடங்கள் கைகளை மூழ்கும்படி வைத்திருங்கள். ஒரு கையால் மறு கையை நீவி மசாஜ் செய்யவும். நகக்கண்களில் உள்ள இரத்த ஓட்டம் சீராகி நகங்கள் பலம் பெறும்.

இரவு படுக்கச் செல்லும் முன் தாங்கும் அளவு உள்ள சுடுநீரில் கல்லுப்பு சிறிது கலந்து அதில் சில நிமிடங்கள் காலை வைத்து மசாஜ் செய்து எடுத்தால் கால் வலி சொல்லாமல் கொள்ளாமல் பறந்து விடும்.

உதடு கருமை நீங்க இரவு சில சொட்டுகள் தூய தேங்காய் எண்ணையை உதடுகளின் மேல் தடவி நன்கு மசாஜ் செய்து அப்படியே உறங்கிவிட வேண்டும். பகலில் அவ்வப்போது பீட்ரூட் சாறு எடுத்து உதடுகளின் மேல் பூசி கழுவ வேண்டும்.

கண்கள் பொலிவுற கண்களின் மீது வட்ட வடிவத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து ரிலாக்ஸாக கண்களை மூடி சிறிது நேரம் படுத்துப் பாருங்கள். மனதுடன் கண்களும் புத்துணர்ச்சி பெறும்.

அக்குள் மற்றும் மறைவு இடங்களில் வளரும் முடிகளை அகற்ற ஆலுவேரா ஜெல்லை தடவி விட்டுப் பின் ஷேவ் செய்து பாருங்கள். ஆலுவேராவின் நீர்ப்பசையால் வலியின்றி முடிகளை நீக்கலாம்.

தலைமுடிக்கு கெமிக்கல் கண்டிசனர் பயன்படுத்தாமல் இயற்கையான கண்டிசனரான தயிரைத் தடவிக் குளித்துப் பாருங்கள். பட்டுப்போன்ற முடிகளுடன் வளர்ச்சியும் அதிகமாகும்.

முகத்தில் வடியும் எண்ணெய் பிசுப்பை நீக்க தயிருடன் உருளை சாறு  மற்றும் முல்தானி மெட்டியைக் கலந்து பூசி சிறிது நேரம் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.