கே.எஸ்.கிருஷ்ணவேனி
நடிகை வித்யா பாலனின் புதிய டயட் இப்பொழுது அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதைப்பற்றிய தேடலில் பலரும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பாலிவுட் நடிகை வித்யா பாலன் குறிப்பிட்ட நோ ரா ஃபுட்(No raw food) உணவு முறை இப்போது அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.
பச்சை காய்கறிகள், பால் பொருட்கள், பழங்களை தவிர்த்து சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடும் உணவு முறைக்கு No raw food என்று பெயர். இந்த டயட்டை தீவிரமாக பின்பற்றுபவர்கள் பழங்களையும் சாப்பிட மாட்டார்கள்.
சமைக்காமல் நேரடியாக உணவுகள் எடுத்துக் கொள்ளும் பொழுது விட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் முழுமையாக உடலுக்குக் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
காய்கறிகளை சமைத்து உண்பது ஆபத்தானதாகவும், அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும் என்றும் நம்பப்படுவதால் ஃப்ரூட் சாலட் போல பச்சை காய்கறி சாலட் உண்ணும் கலாச்சாரமும் பெருகி வருகிறது.
ஆனால் சமைக்காமல் உண்ணும் பொழுது என்னென்ன பாதிப்புகள் வரும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பழங்கள், கடலைகள் போன்றவற்றை வேண்டுமானால் சமைக்காமல் சாப்பிடலாம்.
காய்கறிகளை சமைக்காமல் உண்ணும் பொழுது உணவுக் குழாய் மற்றும் மலக்குழாயில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மழைக்காலங்களிலும், குளிர் காலங்களிலும் செரிமான தன்மை குறைந்திருக்கும். இந்நிலையில் சமைக்காத உணவுகளை எடுத்துக் கொள்ள செரிமான பிரச்சனை உண்டாகி உடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
மழைக்காலங்களில் காய்கறிகளில் அதிகப்படியான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதனை கொதிக்கும் நீரில் சமைக்கும் பொழுது பாக்டீரியாக்களை அழிக்க முடியும். நேரடியாக காய்கறிகளை சாலட்டாக செய்து உண்ணும் பொழுது அந்த பாக்டீரியாக்கள் நம் உடலில் சென்று விடக்கூடிய அபாயம் உள்ளது.
சமைக்கப்படும் உணவானது எளிதில் செரிமானம் ஆவதும், காய்கறிகளை தண்ணீர் சேர்த்து சமைப்பதால் கூடுதலான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. சமைக்கப்பட்டு உண்ணப்படும் உணவுகள் ரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதற்கும், செரிமானம் எளிதாக நடைபெறவும் உதவுகிறது.
சிலர் பால் மற்றும் முட்டையினை நேரடியாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். பாலில் உள்ள லிஸ்டேரியா, பாக்டீரியா போன்றவை நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பாலினை காய்சாமல் குடிப்பது தவறு.
முட்டையில் இருக்கும் சல்மோனெல்லா பாக்டீரியா உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். எனவே முட்டையை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
முறையாக சமைக்காத உணவுகள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். சிலர் சமைத்த உணவுகளுடன் சமைக்காத உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இதுவும் முற்றிலும் தவறு. சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை நம் உடல் வித்தியாசமாக ஜீரணிக்கின்றன.
எனவே சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகளை கலப்பது செரிமான பிரச்சனையை உண்டு பண்ணுவதுடன் வாயு, அஜீரணம், ஏப்பம் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
நம்மை சுறுசுறுப்பாகவும், உயிர்ப்புடனும் இருக்கச் செய்யும் சமைத்த உணவுகளை நம் வயதிற்கும், செய்யும் செயல்களுக்கும் ஏற்ற அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.