இரவிசிவன்
தமிழ் மொழியில் 'சுண்டு' என்றால் சிறியது. இதன் காரணமாகவே காய்கறிகளில் மிகச்சிறிய காய்க்கு சுண்டைக்காய் என்று பெயர் வந்தது. சுண்டைக்காய் = சிறிய காய்.
மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்று சொல்வது சுண்டைக்காய்க்கு மிகவும் பொருத்தமானது என்றால் மிகையில்லை. ஏனெனில், அளவில் சிறியதாக இருந்தாலும் அது தரும் நன்மைகள் ஏராளமானவை, தனித்துவமானவை.
பால்சுண்டை, காட்டுச் சுண்டை, நஞ்சுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற பலவகையில் கிடைக்கும். சுண்டைக்காயில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்கள் மிகுதியாக உள்ளதால் சுண்டைக்காயை ஊட்டச்சத்துக்களின் சேமிப்பு கிடங்கு, ஆற்றல் மையம் என்று தமிழ் மருத்துவம் புகழ்கிறது.
சுண்டைக்காய் ஒரு மிகச்சிறந்த நுண்ணுயிர்க்கொல்லி (Anti-microbial) என்றும் இதிலுள்ள வேதிப்பொருள்கள் சில வகையான வைரஸ்களுக்கு எதிராகச் செயல்பட உதவுகிறது என்றும் ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
வயிற்றில் இருக்கும் கிருமிகளை, குடற்புழுக்களை அழித்து செரிமானப் பகுதியை சுத்தம் செய்ய, சுண்டையைவிட சிறந்த உணவு இல்லை.
அதிக அமிலச் சுரப்புகளிலிருந்து வயிற்றுத்தசைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் திரவத்தை சுரக்கச் செய்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் இதன் இலைச் சாறு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பசியைத் தூண்டி பசியின்மையைப் போக்குவதில் சுண்டைக்காய் சிறப்பாக செயலாற்றுவதால் பசியைத் தூண்டுவதற்காகப் பயன்படும் சித்த மருந்துகளில் சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது. பசியின்மை, செரிமானமின்மை, வயிற்று மந்தம் போன்ற வயிற்றுக்கோளாறுகளை அறவே நீக்குகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைகளிடமிருந்து உங்களை காக்கிறது. மலச்சிக்கல்தான் மூலநோய்க்கு முக்கிய காரணம். சுண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் மூலத்தால் ஏற்படும் வலி, வயிற்றுக் கடுப்பு, மூலச்சூடு ஆகியவை முற்றிலும் குறையும்.
கால்சியம் சத்து அதிகமாக கிடைப்பதால் எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழப்பு ஆகியவற்றைத் தடுப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது.
கபம் எனப்படும் நெஞ்சு சளியை அறவே நீக்கும் ஆற்றலும் சுண்டைக்காய்க்கு உண்டு. பிஞ்சு சுண்டைக்காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நோய் நீக்கும் வற்றல் வகையில் எப்போதுமே முதல் பரிசு சுண்டை வற்றலுக்குத் தான். உலர்ந்த சுண்டைக்காய்களை உப்புச் சேர்த்த தயிரில் ஊறவைத்து வெயிலில் காய வைத்து, வற்றலாகச் செய்து, தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரிமானம் சார்ந்த அறிகுறிகளைக் குணமாக்கும்.
கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலை நன்றாகப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிடலாம். சில நேரங்களில் சோர்வாக இருக்கும் மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் சுண்டை வற்றல் உதவுகிறது.
சுண்டைக்காயை வற்றலாக சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடுவதால் முழுமையான நன்மைகளைப் பெற முடியும். சுண்டைக்காயை வைத்து துவையல், சாம்பார், காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாகவும் இருக்கும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை, இவற்றை மிதமாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, ஐந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்தினால் எந்தவித நோய்களும் நம்மை அண்டாது!
இத்துணூண்டு சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா என்று தெரிந்த பிறகும் 'சுண்டைக்காய்' என இனியும் ஏளனமாகச் சொல்வது சரியாகுமா?