கே.எஸ்.கிருஷ்ணவேனி
ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கு மல்லி காபி செய்வதும் சுலபம். அதன் ஆரோக்கிய நன்மைகளும் அதிகம்.
அந்த காலத்தில் வறட்டு காப்பியும் (பால் சேர்க்காத), சுக்கு மல்லி காப்பியும் குளிர் மற்றும் மழை காலங்களில் பிரபலமானவை. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கிய பானம் இது.
ஜலதோஷத்திற்கு நல்லது. மழைக்காலத்தில் உண்டாகும் தொண்டை தொற்று மற்றும் காய்ச்சலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக் கூடியது.
இஞ்சியில் ஜிஞ்சரால் எனப்படும் அலர்ஜி எதிர்ப்பு பண்பு உள்ளது. இவை உடலை சூடாக வைத்திருக்க உதவும் மழை மற்றும் குளிர்காலத்தில் சளி வராமல் தடுக்கும். சூடான சுக்கு மல்லி காபி இருமல் மற்றும் சளிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் சுக்கு மல்லி காபி பருக உடல் எடை குறைவதை கண்கூடாக காணலாம்.
தனியா எனப்படும் மல்லி பித்தத்திற்கு மிகவும் நல்லது. தலைசுற்றல், குமட்டல், வாந்தி வருவது போன்ற உணர்வுகளுக்கு தனியா சிறந்த நிவாரணம் அளிக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது சுக்கு காபி.
சுக்கு மல்லி பவுடரில் தனியா, சுக்கு, மிளகு, மஞ்சள், ஜாதிக்காய், வெந்தயம், அதிமதுரம், அஸ்வகந்தா மற்றும் பனைவெல்லம் சேர்க்கப்பட்டுள்ளதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் மார்னிங் சிக்னஸ் எனப்படும் தலைசுற்றல் வாந்திக்கும் பெரிதும் உதவுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் மல்லி மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது. மாதவிடாய் சுழற்சியை மட்டுமல்லாமல் ஹார்மோன்களின் சமநிலைக்கும் உதவுகிறது.
சுக்கு மல்லி காபி வயிற்று வலி, அஜீரணம், சளி, தொண்டை வலி, தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி குடிப்பதை விட இந்த சுக்கு மல்லி காபி சிறந்தது. இது ரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்க உதவும் ரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இரத்த சோகை உள்ளவர்களுக்கு சுக்கு மல்லி காபி மிகவும் பலன் தரக்கூடியது. இதில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம் ரத்த சோகை அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.
பசி உணர்வை தூண்டும். வாயுத் தொல்லையை போக்கும். வயிற்றுப் பொருமல் பிரச்சனைக்கு நல்லது.
யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது: நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் தினம் எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். செரிமான கோளாறு இருப்பவர்கள் தினமும் பருகக்கூடாது.
ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி அருந்தக்கூடாது. அறுவை சிகிச்சைக்கு முன்பு இதை எடுத்துக் கொள்வது உசிதமல்ல.