ஆர்.பிரசன்னா
பூசணி விதைகளில் பாஸ்பரஸ், மாங்கனீசு , துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற பிற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் கே, பி ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
ஆய்வுகளின் படி, பூசணி விதைகளில் உள்ள கொழுப்புகள் பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆகும். இவை உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதுடன், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
இவை உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
பூசணி விதைகளை உட்கொள்வது பெண்களின் கூந்தலை மிருதுவாகவும் வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. அது மட்டுமின்றி, சருமத்தை மென்மையாகவும், சுருக்கம் இல்லாததாகவும் மாற்ற உதவுகிறது.
பூசணி விதைகளில் அடங்கியுள்ள மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்கள், எலும்புகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகின்றன.
பூசணி விதைகள், மாதவிடாய் நின்ற பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவுகிறது.
இந்த விதைகளில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம், தூக்கமின்மையால் அவதிப் படுபவர்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்க வல்லது இந்த விதைகள்.
இவ்விதைகளில் அதிகளவில் அடங்கியுள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் இவை உதவுகின்றன.
பூசணி விதைகளில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அளவுகள் அதிகம் உள்ளன. இது பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்ட உதவுகிறது. கருவுறுதலை அதிகரிக்கும்.
பூசணி விதைகளை தொடர்ந்து உட்கொண்டு வருவது, கண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.