கிரி கணபதி
சமையல் எண்ணெய் இல்லாமல் நம்மால் சுவையான உணவை கற்பனை கூட செய்ய முடியாது. ஆனால், தினமும் நாம் பயன்படுத்தும் எண்ணெய் குறித்து நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கிய உண்மைகள் உள்ளன.
1. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 டீஸ்பூன் எண்ணெய் மட்டுமே போதுமானது. அதற்கு மேல் பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற கொழுப்பு வேகமாக சேர ஆரம்பிக்கும்.
2. தினமும் ஒரே வகையான எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது உடலுக்கு நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது பல வகையான சத்துக்களைத் தரும்.
3. ரீஃபைண்ட் ஆயில்கள் அதிக ரசாயனங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுவதால் அதன் இயற்கையான சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. அதற்கு பதிலாக செக்கில் ஆட்டிய பாரம்பரிய எண்ணெய்களைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமானது.
4. ஒருமுறை பொரித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவது மிகப்பெரிய தவறாகும். இப்படிச் செய்தால் அதில் புற்றுநோயை உருவாக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் உருவாகிவிடும்.
5. எண்ணெயை அடுப்பில் வைத்து அதிக புகை வரும் அளவுக்குக் கடுமையாக காய்ச்சக் கூடாது. அப்படிச் செய்தால் எண்ணெயின் சத்துக்கள் முழுமையாக அழிந்து கெட்ட கொழுப்பாக மாறிவிடும்.
6. எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களை உறிஞ்ச ஆரோக்கியமான கொழுப்பு மிகவும் அவசியமாகும்.
7. ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது என்றாலும், அதை அதிக வெப்பத்தில் பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது. அதை லேசான சூட்டில் சமைக்கவோ அல்லது நேரடியாக சாலட்டுகளிலோ மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
8. சுத்தமான பசு நெய்யை அளவோடு உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இது செரிமானத்தை எளிதாக்குவதுடன், உடலுக்கும் எலும்புகளுக்கும் சிறப்பான வலிமையைத் தருகிறது.
9. அதிகப்படியான எண்ணெய் நுகர்வு ரத்தக் குழாய்களில் மோசமான அடைப்பை ஏற்படுத்தும். இதுவே நாளடைவில் மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
10. எண்ணெயை எப்போதுமே நேரடி சூரிய ஒளி படாத, சற்று இருட்டான குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். நீண்ட நாட்கள் காற்றோட்டமாகத் திறந்தே வைத்திருந்தால், அவை எளிதில் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
எண்ணெய், உடலுக்கு எந்த வகையிலும் எதிரியல்ல; ஆனால் அதன் அளவும் தரமும்தான் நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுத்து அளவோடு பயன்படுத்தி, எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வோம்.