கிரி கணபதி
உடலின் கட்டுமானத்திற்குப் புரதம் மிக அவசியம். தினமும் போதிய அளவு புரதம் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் பலவிதமான ஆரோக்கியச் சீர்கேடுகளைச் சந்திக்க நேரிடும்.
1. உடலுக்குப் போதிய புரதம் கிடைக்காதபோது, அது தன் தேவையைத் தசைகளில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதனால் தசைகள் கரைந்து உடல் பலவீனம் அடையும்.
2. சிறிய வேலை செய்தாலும் அதிகக் களைப்பு ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்காது என்பதால், எப்போதும் மந்தமாகவும், தூக்கம் வருவது போலவும் இருக்கும்.
3. தலைமுடி மற்றும் நகங்கள் Keratin என்ற புரதத்தால் ஆனவை. உணவில் புரதம் குறைந்தால் முடி வேர் பலமிழந்து அதிகமாகக் கொட்டும்; நகங்கள் உடையும்.
4. புரதம் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும், இது பசியைக் கட்டுப்படுத்தும். புரதம் குறைந்த உணவைச் சாப்பிட்டால் உடனே பசி எடுக்கும், இதனால் அதிகம் சாப்பிட நேரிடும்.
5. ரத்தத்தில் Albumin எனும் புரதம் குறைந்தால், உடலில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் பாதம் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
6. நோய்களை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் புரதத்தால் ஆனவை. புரதக் குறைபாடு இருந்தால், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் அடிக்கடித் தாக்கும்.
7. உடலில் காயம் ஏற்பட்டால், புதிய செல்களை உருவாக்கி அதைச் சரிசெய்யப் புரதம் அவசியம். புரதம் இல்லை என்றால், சிறிய காயங்கள் ஆறுவதற்குக் கூட அதிக நாட்கள் ஆகும்.
8. கல்லீரலில் உள்ள கொழுப்பை வெளியேற்றப் புரதம் உதவுகிறது. இது குறையும்போது கல்லீரலிலேயே கொழுப்பு தேங்கி, Fatty Liver பிரச்சனை ஏற்படலாம்.
9. எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் மட்டும் போதாது, கொலாஜன் புரதமும் தேவை. புரதக் குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் எளிதில் உடையும் அபாயம் அதிகரிக்கும்.
10. மூளைச் செயல்பாட்டிற்குத் தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்காததால், மனக்குழப்பம், கவனம் சிதறல் மற்றும் அதிகக் கோபம் ஏற்படும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் புரதம் மிக அவசியம். பருப்பு வகைகள், முட்டை, மீன், பன்னீர் போன்ற புரதம் நிறைந்த உணவுகளைத் தினமும் நம் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வோம்.