மகாலெட்சுமி சுப்ரமணியன்
எல்லா மாதங்களிலும் கிடைக்கும் ஆரஞ்சு பழம் சுவையோடு சத்துக்கள் நிறைந்த கனி. கெட்ட கொழுப்பைக் குறைத்தல், சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சினைகளை தவிர்க்க என ஏராளமான பலன்களை தருகிறது.
வைட்டமின் சி நிறைந்த இந்த பழத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சி சத்து நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் செல்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும்.
இதில் உள்ள லிமனாய்ட் என்ற வேதிப்பொருள் தோல், நுரையீரல், மார்பகம் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது.
இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரகக் கல் உருவாவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
இதயத்தின் செயல்பாட்டிற்கு உதவும் பொட்டாசியம் தாதுப்பு இதில் அதிகமாக உள்ளது.
ஆரஞ்சு சாறை லேசாக சூடாக்கி குழந்தைகளுக்கு கொடுக்க சளி பிடிக்காது.
சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள ஆரஞ்சு உதவுகிறது. தோலில் ஏற்படும் கருமையை போக்க வல்லது. ஆரஞ்சு பழச்சாறை தொடர்ந்து தடவினால் படைகள் மறையும்.
கமலா ஆரஞ்சு சாறுடன் தக்காளி சாறு, பசு நெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், கருமை நிறம் மறைந்து முகம் பொலிவடையும். முகச்சுருக்கம், கரும்புள்ளிகள், தேமல் மறைந்து பிரகாசமாக வைக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தின் தோல், காய்ந்த மிளகாய், பூண்டு, சோம்பு லவங்கம் இவற்றை சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி , அரைத்து சாப்பிட வாந்தி, குமட்டல், விக்கல், பித்த மயக்கம் சரியாகும்.
இதைத் தவிர காய்ந்த தோலைக் கொண்டு வீட்டில் புகை மூட்டு வதன் மூலம் வீட்டில் கொசு வராமல் தடுக்கலாம்.
ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். பேன், பொடுகுத் தொல்லை நீங்கும்.
இதன் எண்ணையில் இருந்து வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.
இவ்வாறு எளிய வகையில் ஆரோக்யத்தைக் காக்கும் கமலாஆரஞ்சு சாப்பிட்டு உடல் நலம் பேணுவோம்.