மகாலெட்சுமி சுப்ரமணியன்
முருங்கை ஈர்க்குகளை மிளகு சேர்த்து ரசம் வைத்து அருந்த உடல் அசதி போகும்.
ஆவாரை இலையை சாறு எடுத்து அருந்தி வர நீரிழிவு கட்டுப்படும். மேனி பளபளப்பை கொடுக்கும்.
வெந்தயத்தை நெய்விட்டு வறுத்து அதனுடன் சிறிது சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர வயிற்று உப்புசம், வயிற்று பொருமலையும் சரிசெய்யும்.
மாதுளம்பழ சாற்றுடன் கற்கண்டு சேர்த்து அருந்த உடல் உஷ்ணத்தை குறைக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
இஞ்சிச் சாறுடன் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி ஏலம், கிராம்பு, ஜாதிக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். இதை ஒரு டீஸ்பூன் அளவு உண்டு வந்தால் வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.
அகத்தி இலையை எடுத்து அரிசி கழுவிய நீரில் போட்டு அவித்து, அதனுடன் உப்பும், சீரகமும் பொடி செய்து கலந்து பருக ரத்தக் கொதிப்பு மட்டுப்படும்.
பெருங்காயம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலின் படபடப்பை, வாயுவை அகற்றி வயிற்று வலியைப் போக்கும். மூச்சுத்திணறல், வாயுக்கோளாறுகள், சுவாச நோய்களை குணப்படுத்தும் எளிய பொருளாக உதவுகிறது.
துளசி இலை, தும்பை இலை, கார வெற்றிலை, மிளகு ஆகியவற்றை கஷாயம் செய்து காலையில் குடித்து வர மார்புச்சளி வெளியேறும். மூச்சுத்திணறல் குணமாகும்.
மாதவிடாய் தொந்தரவுகளை குணப்படுத்தவும், உடல் உறுப்புகளை பலப்படுத்தவும் சாமை அரிசி நல்லது. சாமை குருணையில் கஞ்சியாகவோ, கிச்சடியாகவோ செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
ஜாதிக்காய், சுக்கு தலா 20கிராம் எடுத்து சீரகம் 50கிராம் கலந்து பொடித்து ஒரு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து உணவுக்கு முன் சாப்பிட செரிக்கும் திறன் அதிகரித்து வயிற்றில் உள்ள வாயு அகலும்