இந்திராணி தங்கவேல்
சின்னச் சின்ன நோய்களுக்கான வைத்தியக் குறிப்புகளை தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள், பெரியவர்களுக்கு, சில நேரங்களில் நமக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனால், முன்னேற்பாடாக நமக்குத் தெரிந்த வைத்தியங்களை செய்து சமாளிக்கலாம். அதற்கான குட்டி குட்டி வைத்தியக் குறிப்புகளை இதில் காண்போம்!
பஸ்ஸில் பயணம் செய்யும்பொழுது எலுமிச்சை வற்றலை வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் வாந்தி வராது.
தினசரி சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர தொண்டைப் புண் வராது. மேலும் துளசி இலைகளை தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்தம் சுத்தமாகும் .
கோதுமை மாவு சிறிது எடுத்து அதில் சிறிது பாலும், தேங்காய் எண்ணெயும் சேர்த்து குழைத்து கால்களில் பூசி அரை மணி நேரம் ஊறிய பிறகு குளித்தால் ஒரு வாரத்தில் கால்களில் உள்ள மாசு மருக்கள் நீக்கி பளபளப்பாகிவிடும்.
காலை எழுந்தவுடன் ஒரு மடக்கு தயிர் சாப்பிட்டால் அதில் இருக்கும் ஒரு வகை பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு சக்தியால் பற்கிருமிகள் கொல்லப்பட்டு பற்கள் பாதுகாக்கப்படும்.
துளசி, இஞ்சி கலந்த சாற்றுடன் தேங்காய் பால் சிறிது சேர்த்து மூன்று வேளை குடிக்க ஜலதோஷத்தால் ஏற்படும் மூக்கு வடிதல் நின்றுவிடும்.
தேனையும் நெல்லிக்காய் பொடியையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பொன்னாங்கண்ணி இலையை சூப் செய்து குடித்தால் உடல் வலிமை பெறும். அரைக் கீரையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் டயபடிஸ் கட்டுப்படும்.
புடலங்காயைப் பிஞ்சில் பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும். சொறி, சிரங்கு, அரிப்பு நீங்கும்.
தென்னங் குருத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் அல்சர், கல்லடைப்பு குணமாகும்.
வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு குடித்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வலியும் நிற்கும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண், ரத்த சீதபேதி, தலைவலிக்கு முருங்கை கீரை, பட்டை, பிசின், காய் நல்லதாகும்.
வயிற்றுப் புண்கள், மூத்திரப்பை கோளாறுகள் மற்றும் கர்ப்ப நோய்களுக்கு பதநீர் சிறந்த குணமளிக்கும்.
சில அத்தி இளந்தளிரை மென்று வந்தாலும் வாய்ப்புண், வாய் நாற்றம் போய்விடும். அடிக்கடி அத்திப்பழத்தை தின்று வந்தாலும் சத்து குறைவால் வரும் வாய்ப்புண்கள் ஓடிவிடும்.
வாய்ப்புண், நா வறட்சி, வெடிப்பு வந்தால் தேனை சிறிது நேரம் வாயில் வைத்து கொப்பளித்தால் நீங்கிவிடும்.
வயிற்றில் புண்கள் ,பூச்சிகள் இருந்தால் முள்ளங்கியை அடிக்கடி சாப்பிடவும்.
ஓம நீர் ஒரு ஸ்பூன் சாப்பிட உடனே பசி எடுக்கும்.