எஸ்.ராஜம்
கோடை காலம் வந்துவிட்டது. வெயிலை எப்படி தாங்குவது என்று புலம்பாமல் அதை பல வகைகளில் பயன்படுத்தலாமே. பொழுதும் வீணாகாமல் நல்ல படி கழியும்.
நம் பரம்பரை வழக்கப்படி வித விதமான வடகங்கள், வற்றல்கள் வைக்கலாம். வருடம் முழுவதும் அவற்றை பயன்படுத்தலாம்.
காய்கறிகளில் வற்றல்கள் செய்து சாம்பார், குழம்புக்கு பயன்படுத்தலாம். தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.
முற்றிய தேங்காய் துருவல், மாங்காய் துருவலை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால், சமையலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இவற்றை வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால், சமையலில் தேவைப்படும்போது சேர்த்துக் கொள்ளலாம்.
மளிகை பொருட்களான பருப்புகள், மிளகாய் போன்றவற்றை வெயிலில் வைத்து எடுத்தால், கெட்டுப் போகாமல், பூச்சிகள் வராமல் இருக்கும்.
கடந்து போன குளிர்காலத்தில் பயன்படுத்திய உல்லன், கம்பளி உடைகளை அலசி, வெயிலில் உலர விட்டு எடுத்து வைத்தால், ஈர வாடை நீங்கி சுத்தமாக இருக்கும்.
மெத்தை, தலையணைகள், போர்வைகளை மொட்டை மாடியில் வெயிலில் போட்டு எடுத்து வைத்தால், சுத்தமாகவும் இருக்கும். சரும நோய்கள் அண்டாது.
வெயில் காலம் என்பதால் காலையில் சீக்கிரமே சுறுசுறுப்பாக விழித்து, எழுந்து விடலாம். எல்லா வேலைகளையும் நேரத்தில் முடிக்கலாம்.
வெயில் காலத்தில் சோலார் மூலம் மின்சாரத்தை உருவாக்கி மின் கட்டணத்தை சேமிக்கலாம்.