பத்மப்ரியா
தனியா 2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், பனங்கற்கண்டு 2 ஸ்பூன் இவற்றைப் பொடித்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு, அரை டம்ளராக சுண்டும் வரை காய்ச்சி பருகினால், வெயில் கடுமையினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பு பிரச்சனை தீரும்.
விளாம்பழத்தின் சதைப்பற்றை மசித்து, தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படும் நா வறட்சி தீரும். பித்தமும் தணியும்.
உலர் திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையும், நா வறட்சியும் அடங்கும்.
சீரகம், பனங்கற்கண்டுடன் நீரை கொதிக்க வைத்து ஆறியதும் குடித்து வர, வெயில் காலத்தில் மாதவிடாயின் போது வரும் தசை பிடிப்பு நீங்கும்.
எலுமிச்சம் பழத்தை சர்பத், சாதம், ரசம் என்று பல விதங்களில் சமையலில் பயன்படுத்தினால், வெய்யிலால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும். பித்தமும் தணியும்.
இப்போது எல்லோரும் மறந்து விட்ட பழைய சாத நீரில் சிறிது நல்லெண்ணெய் கலந்து பருகினால், உடல் உஷ்ணம் தணியும்.
ஐந்து ஸ்பூன் சீரகத்தை தேங்காய் பாலில் விட்டு, அரைத்து, வெயில் காலத்தில் வரும் கொப்புளங்களில் தடவினால், புண்கள் ஆறிவிடும்.
தயிர், மோரில் உள்ள சத்துக்கள், உடலுக்கும், சருமத்திற்கும் ஊட்டம் தரக்கூடியவை. தயிர், மோரை உணவில் பயன்படுத்தி எடுத்துக்கொண்டால், உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி கிடைக்கும்.
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால், வெயிலால் ஏற்படும் தொற்று நோய்கள் தடுக்கப்படும். ரத்தம் விருத்தி ஆகும்.
உஷ்ணத்தால் வரும் வயிற்று வலி தீர, வெந்நீரில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது தேன் கலந்து பருகினால் போதும். வயிற்று வலி நிற்கும்.
வெந்தயத்தை வறுத்து, பொடித்து, சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு, பிசைந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு பிரச்சனை தீரும். இந்த வெந்தயப் பொடியை மோரில் கலந்தும் குடிக்கலாம்.