இந்திராணி தங்கவேல்
மழை வந்து விட்டால் கூடவே சளி, தொண்டை கட்டு, கரகரப்பு என்று சிறு சிறு உபாதைகள் வந்து போகும். அவற்றை சமாளிக்க கூடிய சிறு குறிப்புகள் இதோ..
அதிமதுரத்தை இடித்து சலித்து வைத்துக் கொண்டு இடைவிடாத இருமல் இருக்கும்போது கால் ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட குணமாகும்.
இரண்டு சிறிய வெங்காயத்தை தோலுரித்து அதனுடன் ஆறு மிளகையும் வைத்து மைய அரைத்து உள்ளுக்கு சாப்பிட்டு வர நீராக வடியும் சளித்தொல்லை தீரும்.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டே வந்தால் சளி, கபம் தொல்லை நீங்கும். சளி, கபம் உள்ள நாளில் கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தும்பைப் பூவை நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைப் பாரம் குறையும்.
யூகலிப்டஸ் மரக்கொழுந்து இலைகளை ஒரு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி அரை டம்ளராக சுண்டியதும் சாப்பிட சளி தொல்லை குணமாகும்.
தொடர்ந்து ஜலதோஷம் உள்ளவர்கள் திராட்சைப் பழம் சாப்பிட குணமாகும். அதிக சளி உள்ள போது சாப்பிடக்கூடாது.
கிராம்பை தண்ணீர் விட்டு மைய அரைத்து பற்று போட்டால் சளி, தலைபாரம் குறையும்.
சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலில் உள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.
ஒரு எழுமிச்சம் பழத்தை பிழிந்து அதனுடன் மூன்று ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும்.
வெண்டைக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அதனுடைய ஆவியை நுகர்ந்தால் தொண்டை வலி குணமாகும்.
ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெயும், சுண்ணாம்பையும் கலந்து அடுப்பில் வைத்து பொறுக்கும் பக்குவத்தில் எடுத்து தொண்டையில் தடவி வர தொண்டை வலி குணமாகும்.
கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் உப்பை போட்டு ஒரு துளி சுண்ணாம்பை கலந்து வடிகட்டி பின் அந்த நீரை வாய் கொப்பளிக்க தொண்டை கரகரப்பு உடனே சரி ஆகும்.