மகாலெட்சுமி சுப்ரமணியன்
கோடை ஆரம்பமாகி விட்டது. ஏதாவது ஒரு வகையில் நாம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முயல்வோம். மோர், வெள்ளரி, இளநீர், நுங்கு போல முலாம்பழமும் நாவறட்சி போக்கி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
முலாம் பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகச் சத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிபோபிளேவின், நியாசின், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
முலாம்பழம் உடலை குளிர்ச்சியூட்டி, பல்வேறு நோய்களைத் தீர்க்கிறது. தோலை பளபளப்பாக்கும், முகத்திற்கு அழகைத் தரும். உடலின் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும்.
ஜுஸாக, ஸ்மூதியாக அருந்தலாம். காயை கூட்டு, குழம்பு செய்யலாம். முலாம்பழத்தை இந்த கோடையில் உணவில் சேர்த்துக் கொள்ள மலச்சிக்கல் வராது. சிறுநீரகக் கோளாறுகள், நீர்க்கடுப்பு இவற்றை குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை கரைக்கும்.
பழச்சாறு தாகத்தை, தொண்டைவலியை போக்கும். பழ சர்பத்தோடு இனிப்பு சேர்த்து அருந்த சொறி, சிரங்கு மாறும்.
பழத்தை கூழாக்கி சரும நோய் வந்த இடத்தில் தடவி வர நோய் குணமாகும். பழத்தோடு பால், சர்க்கரை சேர்த்து அருந்த வெம்மை தணியும். தலை சூடு மாறும்.
விதைகளை பொடித்து உண்ண வயிற்று புழுக்கள் அழியும். விதைகளை அரைத்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மேல் பூசி வர கரும்புள்ளிகள் மறையும்.
முலாம்பழம் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கிறது. கீல் வாதத்தை குணப்படுத்த வல்லது.
கண் எரிச்சல், கண் சூடு மாறி கண் குளிர்ச்சி பெறும். வெப்பத்தினால் ஏற்படும் சிறுநீர் எரிச்சலை இப்பழம் குணப்படுத்தும்.
முலாம் பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், இது இரத்த அழுத்தத்தைக் சீராக வைக்க உதவுகிறது. இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முலாம் பழத்தில் சுமார் 90% நீர்ச்சத்து உள்ளது. கோடையில் வெயிலால் ஏற்படும் தாகத்தைத் தணிக்கவும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் (Dehydration) பார்த்துக் கொள்ளவும் இது உதவுகிறது.