மகாலெட்சுமி சுப்ரமணியன்
நமது சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே எளிய முறையில் செய்யக்கூடிய சில பயனுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகள் (Traditional home remedies) பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பூண்டு சாற்றில் சிறிது உப்பு கலந்து தடவி நீவி விட சுளுக்கு சரியாகும்.
ஓமத்தை ஊற வைத்து தண்ணீர் விட்டு அரைத்து விழுதை சூடான வாணலியில் இட்டு கிளறி பொறுக்கும் சூட்டில் வலியுள்ள இடத்தில் பற்று போட வீக்கம், வலி குறையும்.
வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுகளில் தடவி வர வாயுவால் ஏற்படும் மூட்டு வலி குறையும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து அதனுடன் கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள குடல் இயக்கம் சீராக இருக்கும். இதனுடன் உடல் தசைகள் வலுப்பெறும். தோல் நோய்கள் வராது.
தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
ரோஜா இதழ் குடிநீரை தொடர்ந்து குடித்து வர உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சி தரும்.
கொய்யா இலை குடிநீரை தொடர்ந்து குடித்து வர சர்க்கரை அளவை குறைக்கும்.
வெற்றிலை காம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட குமட்டல் வராது.
அருகம்புல் சாறில் தேன் கலந்து சாப்பிட ஊளை சதை குறையும்.
படிகார நீரில் முகத்தை கழுவி வர பருக்களால் உண்டான தழும்புகள் மறைந்துவிடும்.