பத்மப்ரியா
பல் ஈறு வீங்கினால், சின்ன வெங்காயத்தை அரைத்து, ஈறு வீங்கிய இடத்தில் வைத்தால், வீக்கம் குறையும்.
கட்டிப் பெருங்காயத்தை வாணலியில் பொரித்து, தூள் செய்து, உப்பு கலந்து ஒரு சிட்டிகை வாயில் போட்டு மோர் குடித்தால், வாய்வு கோளாறுகள் நீங்கும். அடிக்கடி ஏப்பம் வருவதும் நீங்கும் .
ஓமத்தை வறுத்து, பொடித்துக் கொண்டு அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்தால், குழந்தைகளுக்கு வரும் வாந்தி நிற்கும். உணவு ஜீரணம் ஆகும்.
வெற்றிலையில் நான்கைந்து மிளகு, சீரகம், பூண்டுப் பல், இலவங்கம், உப்பு இவற்றை வைத்து சாப்பிட்டால், அஜீரணம் சரியாகும். சளி, இருமல் தொல்லையும் நீங்கும்.
கரப்பான் புண்களின் மேல் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து பூசி வந்தால், விரைவில் புண்கள் ஆறும்.
கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து, அதனைக் கொண்டு வாய் கொப்பளித்தால், பல் வலி தீரும்.
நோய் வாய்ப்பட்டு உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கு, கசகசாவை பசும்பாலில் போட்டு அரைத்து, சர்க்கரை, நெய் சேர்த்து அல்வா போன்று கிளறிக் கொடுத்தால், உடல் பலம் பெறும்.
நீரிழிவு ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், அரைக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், நோயை வளறாமல் கட்டுப்படுத்தலாம்.
ஜலதோஷத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், ஓமத்தை துணியில் முடிந்து மூக்கினால் உறிஞ்சினால் மூச்சு திணறல் நிற்கும். தலைவலியும் வராது.
இடுப்பு புண்களுக்கு பெருங்காயத்தை குழைத்து, எலுமிச்சம் பழச்சாறு கலந்து தடவி வர புண்கள் ஆறும்.
உப்பு, வெங்காயம், சூடான சாதம் சம அளவு கலந்து, நகச்சுற்றில் தடவி, கட்ட, நகச்சுற்று விரைவில் குணமாகும்.
காலையிலும் மாலையிலும் 10, 12 துளசித்தழைகளை வாயில் போட்டு மென்று தின்று, மோர் குடித்து வர, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
ஜாதிக்காய், கசகசா இரண்டையும் அரைத்து, பனங்கல்கண்டு பாலில் கலந்து சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் தணியும்.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
புது செருப்பு கடித்த புண் ஆற, மூங்கில் துண்டை சொரசொரப்பான கல்லில் தேய்த்து, விழுதை புண்ணின் மீது தடவி வர, புண் விரைவில் ஆறிவிடும்.
மாம்பருப்பை மணத்தக்காளி சாறு விட்டு அரைத்து, வாயில் அடக்கிக் கொள்ள வாய்ப்புண் விரைவில் ஆறிவிடும்.