சேலம் சுபா
இயற்கையாக விளையும் காய்கறிகள் அனைத்திலும் சத்துக்கள் நிரம்பியவை என்றாலும் சில காய்களைப் பார்த்தால் ஒதுங்கிக் செல்வோம். அவற்றுள் ஒன்று தான் பெங்களூர்க் கத்திரிக்காய் அல்லது சீமைக் கத்திரிக்காய் எனப்படும் சௌசௌ.
கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்ப்பிரேதேச பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் இலைகள் பெரியதாக பிளவுபட்டும் இளம் காய்கள் வெளீர் பசுமை நிறத்திலும் காணப்படும்.
வெண்மையான விதைகள் காய்களின் உட்புறம் இருக்கும். இதன் முற்றிய விதைகளே பயிரிட பயன்படுகிறது. இந்த செடியின் இலைகள், காய்கள் மற்றும் விதைகளில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளது.
இதற்கும் நமது நாட்டுக் கத்திரிக் காய்க்கும் சம்பந்தமில்லை. ஆயினும் வெளி உருவத்தில் சற்றே கத்திரிக்காயை ஒத்து இருப்பதால் இதற்கு பெங்களூர் கத்தரிக்காய் என்று பெயர் உண்டாயிற்று. பெங்களூரில் இதையே சீமைக் கத்திரிக்காய் என்கின்றனர்.
சீமை எனப் பொருள்படும் வெளிதேசத்திலிருந்து இந்தக் காய் பெங்களூர் வந்து பரவியிருக்கும் எனலாம். இது குக்குர்பிடேசியே என்ற சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
நாம் புறக்கணிக்கும் சௌசௌவில் வைட்டமின் A,B,C,K போன்ற சத்துகள் நிரம்பி உள்ளன. புற்றுநோயை தடுக்கக்கூடிய அத்தனை வைட்டமின்களும் இந்த காயில் உள்ளது என்கின்றனர்.
மேலும் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் இதில் உள்ளன. குறிப்பாக சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை சௌசௌவை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிறு சம்மந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
இதிலுள்ள சத்துக்கள் குடல் பாதையை சுத்தம் செய்து பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்மந்தமான நோய்களைத் தடுக்கும்.
நீர்ச்சத்து அதிகமுள்ள காய், சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் செயலுடன் சிறுநீர் சம்பந்தமான பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.
இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமையை அதிகரித்து பலம் தருகிறது. மேலும் சௌசௌவில் உள்ள வைட்டமின் சி, பற்களின் உறுதிக்கு உதவும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தவும் சௌசௌ உதவுகிறது.
குறிப்பாக குறைந்த கலோரிகளும், அதிக நார்ச்சத்தும் கொண்டிருப்பதால் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடுகிறது. கல்லீரல் கொழுப்பு சேர்வதற்கு எதிராக செள செள ஜூஸ் செயல்படுவதாக ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. உடல் எடையை சீராக பராமரிக்க இது உதவுகிறது.
சௌசௌவை கூட்டு, பொரியல் செய்தோ அல்லது மற்ற காய்கறிகளுடன் மிளகு சீரகம் போட்டு சூப் செய்தோ சாப்பிட்டு வர பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இனி சீமைக் கத்திரிக்காயும் சமையலில் இடம்பிடித்து நலம் தரும் காய்கள் வரிசையில் இடம்பெறட்டும்.