அன்று கட்டிடக் கலைஞர்.. இன்று மாநில முதல்வர்!

அன்று கட்டிடக் கலைஞர்.. இன்று மாநில முதல்வர்!

-ஜி.எஸ்.எஸ்.

குஜராத்தின் புதய முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார் பூபேந்திர படேல். பிஜேபி ஆட்சி செய்யும் குஜராத்தில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி விஜய் ரூபானி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, உடனடியாக அந்த பதவிக்கு இடத்துக்கு பிஜேபி-யில் பூபேந்திர படேல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து செப்டம்பர் 13-ம் தேதி முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றவரான படேல், ஒரு கட்டிடக் கலைஞர் அவரது வாழ்க்கையின் அனுபவங்களை ஊடகத்திற்கு விவரித்தபோது 'காந்திநகருக்கு (இது குஜராத்தின் தலைநகர்) செல்ல வேண்டுமென்றால் நமது ஈகோவை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும். அம்க்கு அரசுத்துறையில் வேலை நடக்க வேண்டும் என்றால் அதுதான் ஒரே வழி'' என்றார். அரசுத் துறைகளின் மெத்தனத்தை அப்படிச் சுட்டிக் காட்டியபோது அவர் ஒரு வணிகர்.

ஆனால் அப்போது பூபேந்திர படேலுக்குத் தெரிந்திருக்காது – பின்னர் தானே அந்த அரசுத்துறைகளின் தலைவராக வரப் போகிறோம் என்பது! அவர் இன்று குஜராத்தின் முதலமைச்சர்.

அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் உதவித் தலைவராக ஆனவர் பின்னர் நகராட்சித் தலைவராக ஆனார். 2015-லிருந்து 2017 வரை அவர் அகமதாபாத் நகர வளர்ச்சி வாரியத்தின் தலைவராகப் பணி செய்தார். பின்னர் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். 2017-ல் பாஜக சார்பாக கட்லோடியா தொகுதியில் சட்டசபை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளரை விட 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார்.

தேசிய அரசியலுக்கு வருவதற்கு முன் நரேந்திர மோடி தொடர்ந்து 12 வருடங்கள் குஜராத் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால் அதற்குப் பின் குஜராத் முதல்வராக விளங்கிய யாருமே தங்களது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுவதுமாக அனுபவிக்கவில்லை. குஜராத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போது முதல்வர் மாற்றப்பட்டிருக்கிறார். 2016-ல் கூட தனது முழுமையான ஐந்து ஆண்டு பதவிக் காலம் முடிவதற்கு முன்பே விஜய் ரூபானிக்கு வழி விட்டார் ஆனந்திபென் பட்டேல்.

நரேந்திர மோடி அளவுக்கு எதிர்க்கட்சிகளின் வாயடைக்கச் செய்யும் சாமர்த்தியம் இதற்கு பிறகு வந்த முதல்வர்களுக்கு இல்லை என்று இதற்கான காரணத்தை கூறுகிறார்கள். வேறு சிலரோ தன் அளவுக்கு வேறு யாரும் குஜராத்தில் புகழ்பெற்றுவிடக்கூடாது என்று மோடி நினைப்பதுதான் இப்படி முதல்வர்களை மாற்றுவதற்குக் காரணம் என்கிறார்கள். ஆனால் பாஜக ஆளும் கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள்.

பின் எதனால் இந்த திடீர் மாற்றம்?

குஜராத்தில் செல்வாக்குமிக்க படேல் இனத்தினர் தங்களுக்கு அரசு வேலையில் ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி வருகிறார்கள். குஜராத் மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர்தான். இந்த இனத்தவர்கள் பொதுவாக பாஜகவுக்குதான் வாக்களிப்பார்கள். ஆனால் சமீப காலமாக அரசுப் பதவிகளில் தங்களுக்கான பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்று இவர்கள் கருத்துகளை வெளிப்படையாக கூற தொடங்கிவிட்டார்கள். அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரை பாஜக முதல்வர் ஆக்கியதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.

எப்படியோ சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, லட்சத் தீவின் நிர்வாகி பிரபுல் போடா ஆகியோரில் ஒருவர்தான் முதல்வராவார் என்ற யூகங்களைப் பொய்யாக்கிவிட்டு 59 வயதான பூபேந்திர படேலை முதலவராக்கியிருக்கிறார்கள் மோடியும் அமித் ஷாவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com