அண்ணாத்தே வந்த பாதை

அண்ணாத்தே வந்த பாதை
Published on
புதிய தொடர்
  டைரக்டர் எஸ்பி. முத்துராமன்

1) பாஸ்…மொட்டை பாஸ்

மிக அதிகமன ரஜினியின் படங்களை இயக்கிய டைரக்டர் என்ற முறையில் ரஜினியுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் எனக்கு எப்போதுமே ஒரு தனி அன்பும், மரியாதையும் உண்டு.  தாங்கள் நடத்துகிற ரசிகர் மன்ற விழாக்கள் தொடங்கி, அவர்கள் வீட்டுத் திருமணம்,  காதணி விழா வரை தங்கள் 'தலைவரே' வந்து கலந்துகொண்டு, தங்களுக்கு மாபெரும் கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் அனைவருமே ஆசைப்படுவார்கள். ஆனால், அது பிராக்டிகலாக சாத்தியமா? எனவே, அவர்கள் என்னை  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பது பல வருட வழக்கம். அதுபோல  அண்மையில் ஒரு ரஜினி ரசிகர் தன்னுடைய திருமணத்துக்கு என்னை அழைத்திருந்தார்.  அவரது அழைப்பை ஏற்று, அந்தத் திருமணத்துக்கு நான் சென்ற போது, எனக்கு லேசான அதிர்ச்சி ஏற்பட்டது என்றால் துளியும் மிகை இல்லை.

யாராவது, தன் திருமண நாளன்று, தலைக்கு மொட்டை போட்டுக்கொள்ளுவார்களா? அந்த ரஜினி ரசிகர் அதைத்தான்  செய்திருந்தார். "என்னப்பா! கலியாண மாப்பிள்ளை மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்று நான் அவரிடம் கேட்கவும், அவர்," ஸ்டைலாக, தன் விரல்களால் மொட்டைத் தலையில் தாளமிட்டபடியே," சிவாஜி… தி பாஸ்…மொட்டை பாஸ்" என்று கூறினார்.  அந்த மணமகனிடம், "தம்பி!  வீட்டுல பெரியவங்க நீங்க 'மொட்டை போடக் கூடாது'ன்னு சொல்லலையா?" என்று கேட்டபோது, "எங்க வீட்ல எல்லாருமே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்தான் சார்! நீங்க வந்து கலியாணத்தை நடத்தி வைக்கறது, சூப்பர் ஸ்டாரே நேரில் வந்து வாழ்த்தினாப் போல சார்! அந்த சந்தோஷத்துலத்தான் இப்படி சிவாஜி கெட் அப்பிலேயே கல்யாணம் செய்துக்கறதுன்னு  முடிவு செய்தேன்" என்றார்.  மணமகளிடம், " என்னம்மா! மாப்பிள்ளை மொட்டை போட்டுக்கிட்டு வந்து நிக்கிறாரே! நீங்களாவது சொல்லி இருக்கலாமில்லையா?" என்று நான் கேட்டபோது, அந்தப் பெண் வெட்கம் மேலிட, என்ன பதில் சொன்னார் தெரியுமா? " நானும் சூப்பர் ஸ்டாரோட தீவிர ரசிகை சார்!"

நான் இந்த சம்பவத்தை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், இன்றைக்கு மக்கள் மத்தியில் ரஜினிக்கு இருக்கும் மகத்தான பாபுலாரிடிக்கு இது ஒரு உதாரணம். அதுவும் சூப்பர் ஸ்டார், இயக்குனர் ஷங்கர், ஏவி.எம். கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான சிவாஜிக்குப் பிறகு ரஜினி இதுவரை தொடாத ஒரு புதிய சிகரத்தைத் தொட்டிருக்கிறார். எந்த ஒரு வார்த்தையானாலும், எந்த ஒரு செயலானாலும் அது எத்தனை சாதாரணமானதாக இருந்தாலும் கூட, அந்த வார்த்தைகளை ரஜினி ஒரு படத்தில் சொன்ன பிறகு, செயலை ஒரு படத்தில் செய்துகாட்டிய பிறகு, தனியாக ஒரு அந்தஸ்த்தைப் பெற்று, ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகி விடுகிறது. 'பதினாறு வயதினிலே' படத்தில் சொன்ன 'இது எப்படி இருக்கு?',  பாட்ஷாவில் சொன்ன "ஒரு தடவை  சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி" தொடங்கி, சிவாஜியில் வரும்  " சும்மா அதிருதில்ல" வரை ஏராளமானவற்றை பட்டியல்  போடலாம்.

'சிவாஜி' படத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். எதிலுமே ரொம்ப ஃபாஸ்ட்டான ரஜினி, இந்த படத்துக்காக ஒண்ணே முக்கால் வருஷத்தில் இருநூறு, முன்னூறு நாட்கள் படத்துக்காக ஒதுக்கி வைத்து, உழைத்திருக்கிறார். சிவாஜி கேரக்டரை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்றபடி, தன் மனதை டியூன் அப் செய்துக் கொண்டு விட்டார்.  ரஜினி படங்களின் ஆக்‌ஷன், பஞ்ச் டயலாக் காட்சிகளின்போது, தியேட்டரே அதிரும். அதுபோலத்தான், காமெடி காட்சிகளும் என்பதால், சிவாஜி படத்தில் கலக்கலான காமெடி காட்சிகளை இடம்பெறச் செய்தார் இயக்குனர் ஷங்கர். அந்தக் காட்சிகளில், புதுமையாக, அனைத்து வயதினர் மத்தியிலும் மிகவும் பிரபலமான சாலமன் பாப்பையாவையும், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவையும் நடிக்க வைத்தது பெரிய பிளஸ் பாயிண்ட்.

சினிமா என்பது  நடிக, நடிகைகள், இசை அமைப்பாளர், பாடகர்கள், பாடகியர், கேமரா மேன், ஆர்ட் டைரக்டர், எடிட்டர் இப்படி பலபேருடைய டீம் ஒர்க். இத்தனை பேரும் முழுமையான ஈடுபாட்டுடன், புதுமையாக, வித்தியாசமாக சிந்தனை செய்து, தங்கள்  பங்களிப்பைக் கொடுத்தால்தான் ஒரு படம் வெற்றி பெருகிறது. சிவாஜி படத்திலோ,  தமிழ் நாட்டில், தென்னிந்தியாவில் என்று சொல்லுவதைவிட,  அகில இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் முத்திரை படைத்த டைரக்டர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற புதிய காம்பினேஷன். இசையமைப்பாளரோ இன்று உலக இசை சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான். கூடவே தேசிய விருதுகள்  பெற்ற ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், பத்மஸ்ரீ தோட்டா தரணியைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆர்ட் டைரக்‌ஷன் என்பது அவரது ரத்தத்தில் ஊறிவிட்ட ஒன்று, பல முறை தேசிய விருதுகள் பெற்றவர். படத்தின் எடிட்டர் ஆண்டனி, புதிய தலைமுறை. படத்தில் பணியாற்றிய அத்தனை டெக்னிஷியன்களும் இன்றைக்கு சினிமாத்துறையில் திறமையும், அனுபவமும் நிறைந்தவர்கள். இத்தனை பேரும் இணைந்து ஒரு படம் உருவாகிறதென்றால், அதற்கு ஏற்றபடி ஒரு தயாரிப்பாளர் அமைய வேண்டுமல்லவா? அதற்கு இன்று தமிழ்த்திரையுலகில் ஏவி. எம். தான்! இது ஏவி.எம். நிறுவனத்துக்கு அறுபதாவது ஆண்டு. ஏவி.எம். ஐயாவுடைய நூற்றாண்டு. இப்படிப்பட்ட ஒரு பெருமை மிகு தருணத்தில், 'சிவாஜி' போன்ற ஒரு மிகப் பிரம்மாண்டமான படம் எடுப்பது எவ்வளவு பொருத்தமானது?

'சிவாஜி' படத் தயாரிப்பின்போது, சூப்பர் ஸ்டார்  அடிக்கடி," சார்! நாளாகிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை; ஏகமாக பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை; ஆனால் கடைசியில், படம் எடுத்து முடித்தவுடன், பார்க்கிறபோது,  இப்படிப்பட்ட ஒரு சிறந்த படத்துக்காக இவ்வளவு நேரத்தையும், பணத்தையும் செலவழித்தது தகும் என்று சொல்லுவீர்கள் பாருங்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர்  மிகச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று படத்தை முதல் தடவையாகப் பார்த்தபோது, எல்லோருமே தவறாமல் சொன்னார்கள்.  வினியோகஸ்தர்களுக்காக பாடல்காட்சிகளை மட்டும் திரையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாடல்களைப் பார்த்த வினியோகஸ்தர்கள். மீண்டும், மீண்டும் அந்தப் பாடல்களைப் போட்டுக் காட்டும்படி சொல்லி, பார்த்துப் பார்த்து  ரசித்தார்கள்.

இப்படி ஒரு அதிரும் படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது முதலே, பலரும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், கொடுத்து வாங்குவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், திரு.ஏவி. எம். சரவணனும், அவரது மகன் திரு. குகனும், மிகப் பொறுமையாக இருந்து, மொத்த படப்பிடிப்பும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முடிந்து, படத்தின் முதல் பிரதி தயாரனவுடந்தான் பிசினஸ் பேசினார்கள். அதனால்தான் இதுவரை திரை உலகம் கண்டிராத வகையில்  எண்ணூறு பி¡¢ன்ட்கள் எடுக்கப்பட்டு சிவாஜி படம் உலகமெங்குமாக ஒரே நாளில் ரிலிசானது. மலேசியா, சிங்கப்பூர், அமொ¢க்கா என்று பல்வேறு நாடுகளிலும் முன்னெப்பொதுமில்லாத வரவேற்பு கிடைத்தது.லண்டனில், டாப் 10 வா¢சையில் இடம் பிடித்த முதல் தமிழ்ப்படம் சிவாஜிதான்!

சிவாஜியின் சூப்பர் டூப்பர் வெற்றியை அடுத்து  அனைவருடைய மனதிலும் எழுந்துள்ள ஒரு கேள்வி : இத்தனை பொ¢ய வெற்றியை கொடுத்துள்ள ரஜினியால் அடுத்த படத்தை இதைவிடப் பொ¢யதொரு வெற்றிப்படமாகக் முடியுமா?  என்பதுதான். ரஜினியின் இருபத்தைந்து படங்களை இயக்கிய டைரக்டர் என்ற முறையிலும், ரஜினியுடன் இணைந்து பல வெற்றிப்படங்க¨ள் அளித்த டைரக்டர் என்ற முறைலும் இந்தக் கேள்விக்கு நான்  அளிக்கும் பதில் இதுதான் : படையப்பா  படத்துக்குப் பிறகு, சந்திரமுகி பெரும் வெற்றி பெற்றது. சந்திரமுகிதான் 800 நாட்களுக்கும் அதிகமாக ஓடி, சரித்திரம் படைத்தது. அந்த வெற்றிக்கு மேல் வெற்றியாக அமைந்தது சிவாஜி. ஆகவே, ரஜினியின் அடுத்த படம் சிவாஜியைவிட பெரிய அளவில் வெற்றிபெறும் என்பது நிச்சயம்.

சிவாஜி படத்தின் மிகப் பெரிய ஹைலைட்களின் ஒன்று கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை  அபாரமாகப் பயன்படுத்தியது. ரஜினியின் கறுப்பு நிறத்தை, சிவப்பு நிறம் கொண்ட ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மாற்றிய கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பார்த்து உலகமே பாராட்டியது! படத்தின் இன்னொரு ஸ்பெஷாலிடி ரஜினியின் இளமை துடிப்பான தோற்றம்.  ரஜினி இளமையாகத் தோன்றுவது புதுமை என்றால், இளம் வயதில் ரஜினிக்கு  முதிய வயது கதாபாத்திரத்தைக் கொடுத்து நடிக்க வைத்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்?

'எங்கேயோ ஒரு குரல்' எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு?

எழுத்து வடிவம்: எஸ். சந்திர மௌலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com