அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் பொங்கல் தொகுப்பு: தமிழக அரசு உத்தரவு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் பொங்கல் தொகுப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல்தொகுப்பு மற்றும் முழு கரும்பை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்றும், பொருட்கள் இல்லை என திருப்பியனுப்பக் கூடாது என்றும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள அறிக்கை:

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், மளிகை என 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கரும்பு ஆகியவை 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வுமுகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.1,088.17 கோடியில் வழங்கப்படுகிறது. இப்பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர், மாவட்ட வேளாண்துறை இணைஇயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் உள்ள 20பொருட்களில் முந்திரி, திராட்சை,ஏலக்காய், கரும்பு ஆகியவை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்து விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள குடும்ப அட்டைகளின் பட்டியலைப் பெற்றுபச்சரிசி, சர்க்கரை மற்றும் துணிப் பை ஆகியவற்றை தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பழுப்பு நிற காகித உறைகளில் மட்டுமே பொட்டலமிட்டு, விநியோகிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்க வேண்டிய நாட்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டதும் அன்றிலிருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்க வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பைஒரே தவணையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும்பொருட்கள் இல்லை என அட்டைதாரர்களை திருப்பியனுப்பக் கூடாது. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆயிரம் குடும்ப அட்டைகள் வரை உள்ள நியாயவிலைக் கடைகளில் 2 பணியாளர்களும், அதற்குமேல் உள்ள கடைகளில் 3 பணியாளர்களும் பொங்கல் தொகுப்பைவிநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எவ்விதப் புகாருக்கும் இடமின்றி திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com