திடீரென தங்கமாய் ஜொலித்த வேலூர் கோட்டை!

திடீரென தங்கமாய் ஜொலித்த                               வேலூர் கோட்டை!

-      ஜே.வி.நாதன்.

 இந்தியாவில் சரித்திர காலச் சான்றாக இன்னும் வாழும் கருங்கல் கோட்டைகளுள் ஒன்றான வேலூர் கோட்டை இந்த செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திடீரென்று ஒரு நாள் இரவு தங்கம் போல் ‘தக தக’வென்று ஜொலித்த காட்சியைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள்.

கோட்டையைச் சுற்றியுள்ள அகழிக் கரையில் 97 இடங்களில் தூண்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் 250 வாட்ஸ் கொண்ட மூன்று எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு, அந்த விளக்குகளில் இருந்து ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்டு, கோட்டை மதில் சுவர்களைத் தங்க மயமாய் வெளிச்சம் போட்டுக் காட்டின.

தொடர்ந்து பரீட்சார்த்தமாக, சில தினங்களாக விளக்குகளை ஒளிர வைத்து சோதனகள் நடந்து வருகின்றன.

விசாரித்தபோது, வேலூர் மாநகராட்சி பொலிவுறு நகர் (‘ஸ்மார்ட் சிட்டி’) ஆகி இருப்பதால், வேலூரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்  துவக்கப்பட்டுள்ளதாகவும் இதன் ஒரு பகுதியாகவே ரூ.12 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை அழகு படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வந்தது.

கோட்டையின் உட்பகுதியில் நடைபாதைகள் சீர் படுத்தப்பட்டு மார்பிள் கற்கள் பொருத்தப் பட்டுள்ளன. பழைமை மாறாத விளக்குகள் எங்கும் பொருத்தி அழகு செய்யப்பட்டுள்ளன. கோட்டைக்குள் இருக்கும் பழைமையான கட்டிடங்களை அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு, அந்தப் பணிகள் நடைபெற்று வருவதாக  அதிகாரிகள் சிலர் தெரிவித்தார்கள். 

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் நம்மிடம் சொன்னார்:

 ‘‘கோட்டையைச் சுற்றி நீர் சூழ்ந்த அகழியின் கரையில் மொத்தம் 293 எல்.இ.டி. மின் விளக்குகளும், 8 இடங்களில் ஹைமாஸ்ட் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சோதனை ஓட்டமாக  இரவு நேரங்களில் விளக்குகளை எரிய வைத்துப் பார்த்து வருகிறோம்.

மிக மிக அழகாக இரவு நேரக் கோட்டை காட்சியளிக்கிறது.  தொடர்ந்து மாலை முதல் இரவு பத்து மணி வரை ஒளிர விடலாமா அல்லது வாரத்தின் சனி, ஞாயிறு தினங்களில் மற்றும் விடுமுறை, விழாக் காலங்களில் மட்டும் ஒளிர விடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் இது பொது மக்கள் தினமும் கண்டு களிக்கும் அற்புதக் காட்சியாக வழங்கப்பட இருக்கிறது!’’  

வேலூர் கோட்டையினுள் இந்து மக்கள் வணங்கும் கலை நயம் மிக்க சிற்பங்கள், தூண்கள் மண்டபங்கள் அமைந்த ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், முகம்மதியப் பெருமக்கள் தொழும் மசூதி, கிறித்தவர்கள் வழிபடும் தேவாலயம், சில அரசாங்கக் கட்டிடங்கள், மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிறைக் கொட்டடிகள் யாவும் உள்ளன. இவையெல்லாம் சீர்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வேலுர்க் கோட்டை யாரால் எப்போது கட்டப்பட்டது?

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பழைமையான ஓலைச் சுவடி ஒன்றிலிருந்து பிரதி எடுத்துக் கொடுத்ததிலிருந்து கீழ்வரும் வாலாறு தெரிய வந்திருக்கிறது.

வேலூரை அடுத்த ஆறு வகை மரங்களைக் கொண்ட வனப் பகுதிகளை மக்கள்  ‘ஆறு காடு’ என்று அழைத்து வந்தனர்.  (ஆறு + காடு = ஆற்காடு). அங்கு மொத்தம் 7 ரிஷிகள் வசித்து வந்தனர். வசிஷ்டர், அகத்தியர், பரத்வாஜர், வால்மீகி, காச்யபர், கெளதமர் மற்றும் அத்ரி முனிவர்களே அவர்கள்.

இந்த முனிவர்கள் தனித் தனியாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். வேலூரில் அத்ரி முனிவர் அமைத்து வழிபட்ட லிங்கமே ஸ்ரீஜ்வரகண்டேஸ்வரர். ஆரம்பத்தில் ஸ்ரீஜ்வரகண்டேஸ்வரர் இன்று இருந்த பெயர், காலக் கிரமத்தில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் என்பதாக மருவி விட்டது.

முனிவர்கள் காலத்துக்குப் பிறகு ஒரு வெள்ளத்தில், அத்ரி முனிவர் வழிபட்ட லிங்கம் மண் மேடிட்டுப் புதைந்து விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவிலிருந்து வந்து வேலூரை ஆட்சி செய்த சின்ன பொம்மி ரெட்டி, திம்மி ரெட்டி ஆகியோருக்கு இந்த லிங்கம் கிடைத்தது.

சின்ன பொம்மி ரெட்டி மற்றும் திம்மி ரெட்டி எனப்பட்ட நாயக்கர் வம்சத்தவர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் தளபதியான சதாசிவ ராயரின் கீழ் சிற்றரசர்களாக இருந்தார்கள். கி.பி. 1566-ல் அகழியுடன் கூடிய கருங்கல் கோட்டையை திம்மி ரெட்டியும் பொம்மி ரெட்டியும் கட்டினார்கள்.

அப்போது அத்ரி முனிவர் வழிபட்ட சிவலிங்கமான ஸ்ரீஜ்வரகண்டேஸ்வரருக்கு பொம்மி ரெட்டி ஆலயம் எழுப்பினார் என்பது வரலாறு.

இந்தியாவில் இன்னும் சரித்திர காலக் கட்டிடக் கலை வரலாற்றுக்குச் சாட்சியமாய் நீர் நிரம்பிய ஆழமான அகழி சூழ்ந்த வேலூர் கருங்கல் கோட்டை திகழ்ந்து வருகிறாது. அதனுள் அழியாத ஆன்மிக சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும் ஆலயத்துள் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

 ‘‘இந்தப் புகழ் பெற்ற கருங்கல் கோட்டையை மின் விளக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டி, பொதுமக்களை மகிழ்வித்தால் மட்டும் போதாது… இங்கு வளர்ந்து பெருகும் புற்கள், செடி கொடிகள், மரங்கள் ஆகியவற்றை ஒன்றியத்  தொல்லியல் துறையும், தமிழக அரசும் சேர்ந்து உடனுக்குடன் அகற்றி, முறையாகப் பராமரித்து, இக்கோட்டையைக் கண்டு களிக்க வரும் பொதுமக்களுக்கு வேண்டிய சுற்றுலா வசதிகள் செய்து கொடுத்து உதவினால், பயணிகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இந்தக் கோட்டை ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழும் என்பதே, பல அறிஞர் பெருமக்களின் கருத்தாக இருக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com