அருளைப் பொழியும் பிந்துமாதவப் பெருமாள்!

அருளைப் பொழியும் பிந்துமாதவப் பெருமாள்!
Published on

மன்னை ஜி.நீலா

ம்பியவர்க்கு நற்கதி நல்கும் நாராயணன் கோயில் கொண்டருளும் திருத்தலங்களில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும்! அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வந்து அருளும் மாதவப் பெருமாள் அருளும் இக்கோயிலின் நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக விளங்குகிறது. கோயிலில் உள்ளே ஒரே கல்லால் ஆன அனுமன் உருவம் பொறித்த கல் தூண், கொடிமரம் காட்சியளிக்கிறது. ஒரே பிராகாரம் கொண்ட இந்தக் கோயிலில் மூன்று சன்னிதிகள் அமைந்துள்ளன.

மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளது. கொடி மரம் அருகே கருடாழ்வாரை தரிசித்து மகா மண்டபத்தைக் கடந்து மூலஸ்தானத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் பிந்து மாதவ பெருமாள் (வரதராஜர்) ஆறடி உயரம் கொண்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கதாயுதத்தை கையில் பிடித்தபடி அருள்பாலிக்கிறார்.

ஒருபுறம் பெருந்தேவித் தாயாரும் மறுபுறம் குமுதவல்லித் தாயார் பெருமாளுடன் அருளுகின்றனர். பெருமாள் சதுர்புஜதாரியாக மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் தரித்தும், கீழிரு கரங்களில் கதை, அபய முத்திரைகளுடனும் காட்சி தருகின்றார். உத்ஸவ மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னிதிக்கு மேலே தேஜோ விமானம் அணி செய்கின்றது. பெருந்தேவித் தாயாரும், ஆண்டாளும் தனித்தனி சன்னிதிகளில் கோயில் கொண்டுள்ளனர்.

இக்கோயிலில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஹயக்ரீவர், விஷ்ணு துர்கை ஆகியோர் பரிவார தெய்வங்களாக காட்சியளிக்கின்றனர். மஹாலட்சுமி மற்றும் ஆண்டாள் தனித்தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். தல விருட்சமாக மகிழ மரம் கோயிலில் ஆங்காங்கே ஓங்கி வளர்ந்து நிற்கிறது. இந்த மரத்தை அனுஷம் உட்பட பல்வேறு நட்சத்திரக்காரர்கள்

சுற்றி வந்து வணங்கினால், நோய்நொடி நீங்கி நலம் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை. கிபி 15ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் இந்த கோயில் கல்மண்டபங்கள் அமைத்து புனரமைத்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இக்கோயிலின் மண்டபச் சுவரில் தல வரலாற்றுத் தொடர்புடைய பிரதூர்த்தனின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. கோயில் இங்கு அமைந்த தல வரலாறு மிகவும் சுவாரசியமாக விளங்குகிறது.

முன்னொரு காலத்தில் ரோம மஹரிஷி எனும் முனிவர் வான்வழியே சென்றபோது பாலாற்றின் அருகில் இருந்த சென்னப்பமலையைக் கண்டாராம். ஆறும் மலையும் ஒன்றுசேர அமைந்த இந்த இடம் தனது தவத்திற்கு உகந்ததாகக் கருதி, அங்கேயே தங்கி கோவிந்தரை நோக்கி தவமியற்றினார். அந்த வனப்பகுதியில் வசித்து வந்த பிரதூர்த்தன் என்னும் அரக்கன் மகரிஷியின் தவத்திற்கு இடையூறு விளைவித்தான். இதனால் கடும் கோபம் கொண்ட முனிவர், அந்த அரக்கனை புலியாக மாற சாபமிட்டார். புலியாக மாறிய பின்பும் அந்த அரக்கன், மகரிஷியைக் கொன்று விடத் துரத்தினான். மிகவும் வருத்தமுற்ற மகரிஷி, இதுகுறித்து இந்திரனிடம் சென்று முறையிட்டார். இந்திரன் புலி உருவம் கொண்டு அரக்கனை எதிர்த்தார்.

இரண்டு புலிகளின் சண்டையில், இறுதியாக இந்திரனே வென்றார். அப்போது, தோல்வியைத் தழுவி காயங்களுடன் இருந்த பிரதூர்த்தன், "பெருமாளை வணங்கும் முனிவரின் தவத்திற்கு இடையூறு விளைவித்தேன். அதற்குப் பரிகாரமாக நானும் பெருமாள் சேவை செய்ய விரும்புகிறேன். அவரது திரு உருவத்தைக் காண எனக்கு ஆசி வழங்குங்கள்" என இந்திரனிடம் வேண்டினான்.

அந்த அரக்கனை மன்னித்ததோடு, அவனது பக்தியையும் ஏற்றுக்கொண்ட பெருமாள், அங்கே எழுந்தருளி அவனது கோரிக்கையை நிறைவேற்றினார். அதுமட்டுமன்றி, பிரதூர்த்தனின் பெயராலேயே அந்தத் தலமும், 'பிரதூர்த்தன்பட்டு' என வழங்கவும், அருளினார். 'பிரதூர்த்தன்பட்டு' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அப்பெயர் மருவி, துத்திப்பட்டு என ஆகிவிட்டது. அரக்கனின் ஆசையை நிறைவேற்றி வரம் தந்த இறைவன், தற்போது தன்னை நாடி வரும் பக்தர்களுக்குக் குறைவற்ற வரங்களை வாரி வழங்குகிறார். இந்தப் புண்ணியப் பதியில் விஷ்ணு புராணத்தை பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகின்றது.

இக்கோயிலில் சித்திரை முதல் நாள், புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகள், வைகாசி மாத பிரம்மோத்ஸவ கருடசேவை, பங்குனி உத்திரப் பெருவிழா, வரலட்சுமி விரதம் ஆகிய விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. அந்த சமயங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்து, பல்வேறு பாக்கியங்களைப் பெற்று மகிழ்கின்றனர். காணும் பொங்கலன்று அருகிலுள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி உத்ஸவர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த மலையில் ரோம மகரிஷி இன்னும் தவம் செய்வதாகவும், அவருக்குக் காட்சி கொடுக்கவே பெருமாள் மலையை வலம் வருவதாகவும் ஐதீகம்! உத்ஸவக் காலங்களில் இவ்வூரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களுக்கும் பெருமாள் செல்வது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம் : வேலூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com