நம்பிக்கை

நம்பிக்கை
Published on

- சுவாமி பூர்மானந்த தீர்த்தா

நீங்கள் சாப்பிடும்போது உணவில் ஒரு தலைமுடி அகப்படுகிறது. உடனே தட்டில் உள்ள உணவு அவ்வளவையும் நீங்கள் தூக்கிக் கொட்டிவிடுவீர்களா? இல்லை. அந்த முடியை மட்டுமே எடுத்தெறிந்து விட்டு சாப்பிடுகிறீர்கள். உணவில் முடியோ, கல்லோ இருந்தால் அதை எடுத்துவிட்டு சாப்பிடுவீர்கள். அதற்காக உணவைச் சமைத்த உங்கள் மனைவி மீது பழியைப் போடவும் மாட்டீர்கள். அப்படி ஒரு மனப்பான்மையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றமும், வெகு விரைவில் சலிப்பும் ஏற்பட்டுவிடும்.

குழப்பத்தின் நடுவிலும் தெளிவு உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஆண்டவனிடம் வைக்கும் நம்பிக்கை உங்களுக்கு அந்தத் தெளிவை அடையாளம் காட்டிக் கொடுக்கும். குழப்பமோ, தெளிவோ உங்களுக்காக என்று தனியாக ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஆண்டவன் சிருஷ்டித்த உலகில் அவையும் சில அங்கங்கள். அவற்றை அப்படியே நீங்கள் சந்திக்கவும், ஏற்று முடிந்தவரை அதனால் நல்ல பயனைப் பெறவும் முடியும். ஒன்றில் தெளிவைக் காண்பதும், குழப்பத்தைக் காண்பதும் பெரும் அளவு நம் பார்வையில்தான் இருக்கிறது, நம்முடைய அனுமானத்தில்தான் இருக்கிறது. நீங்கள் மனதளவில் உயர்ந்து அதைப் பார்க்க முயன்றால் அது ஓர் உன்னதமான சூழ்நிலையை உங்களுக்கு அடையாளம் காட்டும்.

மலையின் மேலிருந்து நீங்கள் நோக்கினால் அழகான சமவெளி தெரியும். சிற்றாறு ஓடுவது மாலை போட்டது போலத் தோன்றும். மரங்களும், செடி கொடிகளும் பசும்புல் மெத்தைப் போலவே தோன்றும். கீழே இறங்கிவந்து பார்த்தால்தான் சமவெளியில் உள்ள மேடு பள்ளங்களும், அழகில்லாத பிரதேசங் களும் புலப்படும். அதைப்போல வாழ்க்கையை மேலே இருந்து பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

வெளியே இருப்பது எதுவானாலும் உள்ளொளி வீசும் மனத்தில் அழகானதும், இனிமையானதும் மட்டும் புலனாகும். இறைவனின் பேரழகில் சில பகுதிகளே உங்கள் மனத்தில் வெவ்வேறு விதமாகப் புலப்படும். 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com