அதிரசமும் ஆவணி அவிட்டமும்!

அதிரசமும் ஆவணி அவிட்டமும்!

"கமலி! கமலி! சித்த இங்க வர முடியுமா?"

லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த கமலி, மொபைலை அனைத்து, "என்ன விஷயம்? ரொம்ப குழையறாப்பல இருக்கே!"

"குழைசலும் இல்லை! வழிசலும் இல்லை! ஆவணி அவிட்டம் வரது!"

"ஆமா! வருஷா வருஷம் வரதுதானே. இந்த வருஷம் வராதா?"

"குதர்க்கமா பேசாதே! ஆவணி அவிட்டத்திற்கு அதிரசம் செய்யேன்."

"அதிரசமா? 64 வயசுல என்ன திடீர் மசக்கை?"

"மசக்கையை விட்டா வேறு தெரியாதா? உனக்கு 62. எனக்கு 64! நம்ம கல்யாணம் ஆன பிறகு வந்த முதல் ஆவணி அவிட்டம் சமயம் அதிரசம் பண்ணியது. அப்புறம் கிட்டத்தட்ட 35 வருஷமா அதிரசம் அம்பேல்!"

"அப்ப உங்க அம்மா கூட இருந்து செய்தாங்க. தனியா எனக்குச் செய்யத் தெரியாது. ஆஃபீஸ், வேலைன்னு நீங்க பிஸி. சமூக சேவை, லேடீஸ் கிளப்னு நான் பிஸி. சமையல் எல்லாம் ருசியாகத்தானே செய்யறேன். பட்சணம் இரண்டாம் பட்சம்தான்."

"சரி! சரி! ஏதோ ராத்திரி மனசுல தோனினதைச் சொன்னேன். நீதான் டெக்கி ஆச்சே! கூகுள்ல பாத்து…!"

"க்கும்! கடந்த ஒன்றரை வருஷமா கோவிட், லாக்டௌன்னு லேடீஸ் க்ளப்ல ஒரு ப்ரோகிராமும் நடத்த முடியலை."

"அதுக்கும் அதிரசத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"ம்! சம்பந்தமா? இருக்கே! இப்ப கொஞ்சம் கோவிட் ரிலாக்ஸ் ஆகியிருக்கறதாலே, அடுத்த மாசம் வரப்போற பிள்ளையார் சதுர்த்தி சமயம், பிள்ளையார் சுழி போட்டு ப்ரோக்ராம் ஆரம்பிக்கறதா ப்ளான்."

"பிள்ளையார் சுழிதானே! தாராளமா போடு! இன்னும் டைம் இருக்கே… அந்த அதிரசம்…!"

"அதெல்லாம் முடியாது. கமலி ஒரு தரம் சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி. வி.ஐ.பி. ஐ மீட் பண்ண அப்பாயிண்மென்ட் வாங்கி யிருக்கேன். zoom மீட்டிங். அது இதுன்னு எக்கச்சக்க வேலை. இன்னும் இருபது நாளும் பிஸிதான். உங்களுக்கு அதிரசம் சாப்பிடணும் போல இருந்ததுன்னா, க்ராண்ட்ஸ் ஸ்வீட்ஸ்ல வாங்கிச் சாப்பிடுங்க. நான் கிளம்பறேன். சமையல் ரெடி. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. பை! பை!"

கமலி சென்று விட்டாள். 'இவளைப் போய்த் தாங்கித் தடுக்கிடுவானேன்.' யோசித்தார். 'கமலியோ வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டு அனந்து, சொந்தக்காரர் வீட்டு விசேஷத்திற்காக ஒரு வாரம் வெளியூர் சென்றி ருப்பதால், அவர் வீட்டுச் சாவி என் கையில்தானே. அதிரசம் செய்யற தென்ன பெரிய வேலையா? கூகுளில் பார்த்து தேவையான சாமான் களை வாங்கி எடுத்துக்கொண்டு, அனந்து வீட்டுக் கிச்சனில் வைத்து செய்துவிடலாம்' என்று ப்ளான் போட்டார் கல்யாணம்.

அவர் வீடு சென்று அதிரசம் செய்ய ஆரம்பிக்கையில் கமலியிடமிருந்து ஃபோன் வர, தான் வெளியே சென்றிருப்பதாகவும், ஒருவேளை வர லேட்டாகும்" என்றும் கூறினார்.

சுமார் பத்து அதிரசங்களை எப்படியோ செய்த பின் ஒன்றை எடுத்து டேஸ்ட் செய்கையில் ருசியாகத்தான் இருந்தது. 'சபாஷ்டா கல்யாணம்!' எனத் தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக்கொண்டு, மற்றவைகளை டப்பாவில் போட்டு மூடி கைகளில் எடுத்துக்கொண்டு, "கல்யாணமா? கொக்கா" என சந்தோஷத்தில் குதித்ததில், கால் சுளுக்கிவிட்டது. மெதுவாக வீடு திரும்பியவர், அதிரச டப்பாவை அலமாரியினுள் ஒளித்து வைத்து, மீண்டும் அனந்து வீடு சென்று படுத்துத் தூங்கியவர், எழுந்திருக்கையில் மாலை மணி ஆறரை.

வெளியிலிருந்து அப்போதுதான் வருவதுபோல வீட்டுக்குள் நுழைந்தார். கமலி வீட்டில் இருந்தாள்.

''என்ன நொண்டியாட்டம்? பேட்மிண்டன் விளையாடினீங்களா? ஒலிம்பிக்ஸ் முடிஞ்சு போச்சே!" என்ற கமலியிடம், ''கேலியா இருக்கா? கல் கால்ல தடுக்கிடுத்து. அதான்…!"

மறுநாள் ஆவணி அவிட்டம். வடை, பாயசத்துடன் சமையல் செய்திருந் தாள் கமலி. கல்யாணராமன் கோயிலுக்குச் சென்று பூணூல் மாற்றி வந்த பிறகு, அதிரச டப்பாவை ஸர்ப்ரைஸாக எடுக்கலாமென எண்ணி யிருந்தார். ஆனால், வீட்டிற்குள் நுழைகையில், கமலியின் கல்லூரித் தோழி பத்மினியும் அவளது பேத்தியும் வந்திருந்த காரணத்தால் டப்பாவை எடுக்கவில்லை.

சாப்பிடுகையில், கமலி அனைவருக்கும் அதிரசத்தை இலையில் வைக்கையில் திடுக்கிட்டு நிமிர்ந்த கல்யாணம், கமலியை முறைத்தார். கமலி அதை கண்டுகொள்ளாமல், ''அதிரசம் எப்படி?" என கேட்டபோது, ''சூப்பர்" என்றாள் பத்மினி. வாயைத் திறக்காமல் சாப்பிட்டார் கல்யாணம்.

'அடிப்பாவி! சிரமப்பட்டு நான் செய்து ஒளித்து வைத்திருந்ததை எப்படியோ எடுத்து, தான் செய்ததாகக் காட்டிக் கொண்டுவிட்டாளே. தில்லாலங்கடிதான்!' மனதிற்குள் பொருமினார்.

அவர்கள் சென்றதும், அவசர அவசரமாக அலமாரியைத் திறந்து பார்க்கையில், அதிரச டப்பா அப்படியே இருந்தது. அப்ப அது…! க்ராண்ட் ஸ்வீட்ஸா?

பொறுக்க முடியாமல் கமலியிடம் கேட்க, ''நீங்க இவ்வளவு வருஷம் கழிச்சு ஆசைப்பட்டு கேட்டதால, என் ஃப்ரெண்ட் சியாமளா வீட்டிற்குச் சென்று பத்து அதிரசம், நானே உங்களுக்காகச் செய்துகொண்டு வந்தேன். சியாமளா இரண்டு மாசமா வெளிநாட்டுல இருக்கறதால, அவள் வீட்டுச் சாவி என் கையில்தான் உள்ளது."

பேசி முடித்த கமலியின் கைகளைப் பிடித்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, அன்புடன் முத்தமிட்ட கல்யாணம், மெதுவாக தான் செய்த அதிரசத்தை அவளிடம் கொடுத்தார்.

டபுள் அதிரச ஆவணியாவட்டக் கொண்டாட்டம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com