0,00 INR

No products in the cart.

சென்னையிலிருந்து இலங்கைக்கு  ரயில் விட்டிருக்கிறார்கள்

அது ஒரு கனாக் காலம் – 5

– ஜெயராமன் ரகுநாதன்

 

“என்னது ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் நின்னு நின்னு போகுமா?”

“கரி எஞ்சினா? வீட்டுக்கு வந்து குளிச்சாத்தான் உள்ள சேர்ப்பாங்களா?”

“டிரெயின்ல பாண்ட்ரியெல்லாம் இருக்காதா? ஸ்டேஷன்ல இறங்கி அவசர அவசரமா சாப்பிடணுமா?”

இதுபோன்ற கேள்விகள் இன்றைய தலைமுறையிடமிருந்து எழுகின்றதைப் பார்க்கிறோம்.

ஆம்… அந்தக்கால ரயில் பிரயாணங்களில் இன்றுபோல வசதிகள் இல்லைதான். ஆனால், அந்தப் பிரயாணங்களில் இருக்கும் சந்தோஷமும் குதூகலமும் கொண்டாட்டமும்  இன்றைய ரயில் பிரயாணங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஏறி உட்காரும்போது ஜன்னல் சீட்டுக்கும் லக்கேஜைப் பத்திரப்படுத்துவதற்கும் உண்டாகும் பேச்சுக்கள் சில சமயம் ஏச்சுக்கள், கோபதாபங்கள் எல்லாம் ரயில் கிளம்பின சில நிமிடங்களிலேயே காணாமல் போய்விடும்.

“வீட்டையே காலி பண்ணிட்டு ரயில்ல வருவாங்க போல!” என்று எதிர்சாரிக் குடும்பத்தை திட்டின மாது, தன்னுடைய பையிலிருந்து திராட்சைப் பழங்களை எடுக்கும்போது எதிர் குடும்பத்துக்கு நீட்டுவார்.

“நல்ல  கும்மிடிப்பூண்டி திராட்சை! கொட்டை இருக்கறதே தெரியாது! சாப்பிடுங்க…!”

எதிர்சாரி மாமி தன் சம்புடத்திலிருந்து ரவா உருண்டையை எடுத்து “இந்தாங்கோ! நல்ல நம்பீசன் நெய்ல பண்ணினேன்! சாப்பிடுங்க…!” என்று உபசரிப்பதும் சகஜபாவமாக நிகழும்.

ஜன்னல் சீட் மாது சீர்காழியில் இறங்கும்போது அவர்கள் குடும்பம் நெருங்கின பந்துக்கள் ஆகியிருப்பார்கள்.

“ஜானகி!  தலைய அப்பப்போ சுத்தறதுன்னியே! வீட்டுக்குப் போனவுடனே வெதுவெதுப்பான வெந்நீர்ல ரெண்டு சொட்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு  நாலே நாலு கல் உப்பைப் போட்டு ஆத்தி ஆத்திக்குடி, மறந்துராத!”

எதிர் சீட்டு மாமி வைத்தியம் சொல்லுவார்.

ரயில் பிரயாணங்களில் நிகழும் வேடிக்கையான நிகழ்வுகள் வாழ்க்கையில் எளிதில் காணக் கிடைக்காதவை.

நான் ஏழாவது படிக்கும்போது குடும்பமாக திருப்பதிக்கு ரயிலில் போனோம். அப்போதெல்லாம் ரேணிகுண்டாவுக்குத்தான் ரயில். அங்கிருந்து பஸ் பிடித்து திருப்பதி போக வேணும். சாமிதரிசனம் முடிந்து மதியம் மூணு மணிக்கு ரேணிகுண்டாவில் ரயில் ஏறினோம். நல்ல கூட்டம் என்பதால் அம்மாவும் தங்கையும் கிடைத்த சீட்டில் உட்கார, நான் அப்பாவுடன் பெரிய மனுஷத்தனமாய் கதவுக்குப் பக்கத்தில் பேப்பர் போட்டு உட்கார்ந்து வந்தேன். ஏதோ ஒரு சின்ன ஸ்டேஷனில் வண்டி நின்றது. எஞ்சினுக்கு அடுத்தப் பெட்டி எங்களுடையது. நான் வேடிக்கைப் பார்த்தபடி இருக்கும்போது அது நிகழ்ந்தது. எஞ்சின் அந்த ஸ்டேஷனில் நின்ற இடம் பிளாட்ஃபாரத்தில் பாத்ரூம் இருந்த இடத்துக்கு நேரே பக்கவாட்டில். ஏதோ கோளாறினால் நீராவியைக் கிளப்பும் தொட்டி பட்டென்று வெடிக்க, பெரும் புகையாய்ப் புறப்பட்ட அந்தச் சூடான நீராவி, நேர் எதிரே இருந்த பாத்ரூமில் வாரி அடிக்க, உள்ளே அல்பசங்கை செய்துக்கொண்டிருந்த சிலர் நீராவிச்சூடு தாங்காமல் அரைகுறையாய் வெளியே அலறிக்கொண்டு ஓடி வந்த நிகழ்ச்சி இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது. நல்லவேளை, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை!

மெட்ராஸ் ரயில்வே கம்பெனி 1845ஆம் வருடம் தொடங்கப்பட்டு முதல் ரயில் வண்டி ராயபுரத்திலிருந்து அன்றைய ஆற்க்காட்டுக்கு விடப்பட்டதாம்! முதல் முதல் பயணிகள் வண்டி மும்பையின் சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனிலிருந்து தானேவுக்கு 1853ஆம் வருடம் ஏப்ரல் 16ஆம் தேதி சாஹிப், சிந்த், சுல்தான் என்னும் பெயர்கள் கொண்ட மூன்று எஞ்சின்களால் இழுக்கப்பட்டு பதினாலு பெட்டிகளுடன் பயணித்ததாம்!

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா?

சென்னையிலிருது இலங்கைக்கு  ரயில் விட்டிருக்கிறார்கள்!

என்னது இலங்கைக்கா?

ஆமாம்! அப்போதெல்லாம் அதற்கு ’இண்டோ சிலோன்’ அல்லது ’போட் மெயில்’ என்றுப் பெயர். அது சென்னை எக்மோரிலிருந்து கிளம்பி செங்கல்பட்டு, விழுப்புரம் சிதம்பரம் வழியாக மாயவரம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை என்று தனுஷ்கோடியை அடையும். அங்கிருந்து இலங்கைக்கு படகில் அழைத்துச் செல்வார்களாம்!

1964ஆம் ஆண்டு அடித்த மிகப்பெரிய புயல் மழையில் தனுஷ்கோடியில் ஒரு பாசஞ்சர் ரயிலே அடித்துச்செல்லப்பட்டது. தனுஷ்கோடி அழிந்ததும் அப்போதுதான். அந்த ரயிலில் தனுஷ்கோடி செல்லவிருந்த, ஆனால் கடைசியில் பிரயாணம் கான்சல் செய்தவர்கள் லிஸ்டில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இருந்தார்கள் என்று அப்போது பேச்சு உண்டு!

அடித்த புயலில் தனுஷ்கோடி ஊரே அழிந்துபோய், 1800க்கு மேற்பட்டோர் இறந்து, அந்த ஊரே  ’இனி வாழ்வதற்குத் தகுதியில்லை’ என்று அறிவிக்கப்பட்டது பெரும் சோகம். மிஞ்சி இருந்த பாழடைந்த சர்ச் ஒன்றைப் படத்தில் காணலாம்.

பாசஞ்சர் ரயில் என்பது மிக மெதுவாகத்தான் போகும். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்று நின்று போக, பயணிகள், முக்கியமாக இளைஞர்கள் இறங்கி இறங்கி ஏறிப் பயணிப்பார்கள். ஒவ்வொரு ஸ்டேஷனிலும், அந்தந்த ஊர்களின் ஸ்பெஷல் தின்பண்டங்கள் விதவிதமாக விற்பனைக்கு வரும். பண்ருட்டி முந்திரி, பேரளம் வடை, திண்டுக்கல் மாம்பழம்,  திருநெல்வேலி அல்வா, கும்பகோணம் காஃபி,  பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை பர்பி,  மணப்பாறை முறுக்கு,  மங்களூர் போளி …..

பிரயாணத்துக்கு தயார் செய்யும்போதே வழியில் வரும் ஊர்களின் ஸ்பெஷல் ஐட்டத்துக்கு அந்தந்த ஊர்களில் காத்திருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே பயணம் போவது மிகப்பெரிய சந்தோஷம்.

அந்நாளைய பாசஞ்சர் ரயில் பிரயாணம் என்பது நம்மை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இட்டுச்செல்வது மட்டுமின்றி, சில இனிய அனுபவங்களையும் புதிய நட்புக்களையும் உருவாக்கி வாழ்க்கையையே மலரச் செய்த பிரயாணங்கள்!

1 COMMENT

  1. ஆமாம்! போட்மெய்லில் போய் மாட்டிக் கொண்ட எங்கள் வீட்டு மாப்பிள்ளை பத்திரமாக திரும்பி வரும் வரை என் பெற்றோர்கள் தவித்து ஞாபகம் வருதே!
    எல்லார் கையிலும் பித்தளை கூஜா சொம்பில் குடிக்க தண்ணீர் வைத்து இருப்பார்களே!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

1
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...