0,00 INR

No products in the cart.

“எம்.ஜி.ஆர். எதுக்குடா சிவாஜியோட சண்டைபோட்டார்?”

– ஜெயராமன் ரகுநாதன்            

 

தொள்ளாயிரத்தி அறுபத்தைந்தாம் வருடம் என்று நினைவு.

சேலம் பக்கம் சங்கரி துர்க்கத்தில் சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த என் மாமாவின் வீட்டுக்கு லீவில் போயிருந்தோம். மதியம் சாப்பிட்ட பிறகு,  என்னைத் தவிர மற்றவர்கள் உறங்கி விட்டனர்.  நான் அந்த ஓட்டு வீட்டின் வாசலில் கல்லாங்கால் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேள தாள சப்தம் கேட்டு தெருப்பக்கம் ஓடினேன்.

ரோஸ் கலரில் குஞ்சம் எல்லாம் வைத்துத்தைத்த வண்ணத்துணிகள் கொம்புகளில் கட்டியிருக்க, இரண்டு மாடுகள் இழுத்து வந்த கூண்டு வண்டியில்தான் ஒரு ஆசாமி மோளம் அடித்துக்கொண்டிருக்க, பஞ்சு மிட்டாய் கலரில் ஏதோ பேப்பரை என்பால் எறிந்துவிட்டுப்போனான். அப்போது ஐந்தே வயதான, முழுக்க முழுக்க சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு, அந்த சப்தமும் மாட்டு வண்டியும் ஏற்படுத்திய ஆச்சரியம் கலைந்த பிற்பாடு அவன் எறிந்த காகித்தை எடுத்துப்போய் அப்பாவிடம் கொடுத்தேன்.

”சாமா! இங்க பக்கத்துல ‘டென்ட் கொட்டாய்’ இருக்காடா?”

ஆமாண்டா ஜேராமா! நோட்டீஸ்ல என்ன படம்னு பாரு! இன்னிக்கு போலாம்!”

இன்று வரை அவ்வப்போது என் வாய் முணுமுணுக்கும் “நான் ஆணையிட்டால்” பாட்டு வந்த ’எங்க வீட்டுப் பிள்ளை’ அந்த டென்ட் கொட்டாயில்தான் பார்த்தேன். முக்கால் மணிக்கு ஒரு தரம் சட்டென்று விளக்குகள் எரிந்து ரீல் மாற்றினதும் நான்கே நான்கு வரிசைகள் தப்பி, மற்றெல்லாம் மணல் குவித்த தரை டிக்கட்டும், நான்கு இடைவேளையிலும் கூடையில் வைத்து விற்ற முறுக்கும் கோலி சோடாவும் – “அதெல்லாம் கூடாது! வயித்தைக்கெடுத்துடும்” -அம்மாவின் கண்டிப்போடு கூடவே எனக்கு மகா ஆச்சரியம் ஏற்படுத்தின அனுபவம்.

போன மாதம் ஒரு சாயங்காலம் திருவான்மியூர் வரை போக வேண்டிய வேலை. ”என்ன வேலை” என்று கேள்வி கேட்கும் அன்பர்களுக்கு என் மௌனப்புன்னகையைப் பதிலாகத் தருகிறேன்.

என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?

ஓ திருவான்மியூர்!

டெர்மினஸ் சிக்னல் வரும்போது, அதான் நம் பனுவல் புக் ஷாப் தாண்டி கோணா மாணாவென தெருவை கெந்திப் போட்டிருக்கிறார்களே, அந்த சிக்னலில் சர்ரென்று கார் திரும்பும்போது, வலது பக்க ஹாட் சிப்ஸ் கடைக்கு பக்கமிருக்கும் சத்யம் சினிமாவிலிருந்து ஓடி வந்த ஒரு ஆசாமி, இல்லை அரை டிராயர் ஆரஞ்சுக்கலர் டீ – ஷர்ட் போட்ட பையன்
”டிக்கட் கெடச்சிருச்சி!” என்ற கத்தலுடன் பாய்ந்து ரோடைக் கிராஸ் செய்ய, எனக்கு முன் இருந்த டொயோட்டா இன்னோவா அடித்த ப்ரேக்கில் உள்ளிருப்பவருக்கு பிரசவம் ஆகியிருக்க வேண்டும். என் கார் அடித்த பிரேக்கில் நாங்கள் இன்னோவாவை முத்தமிடுவதில் ஓரிரு இஞ்சுக்கள் தவறினோம். பிறகு சிந்திய தூய தமிழ் வார்த்தைகளின் பொருளுக்குப் பொழிப்புரை பதவுரை தேடவேண்டும்.

நான் இந்தக் களேபரத்திலிருந்து விலகி இடது பக்கம் பார்த்தால் புத்தம் புது பெயிண்ட்டில் ஓங்கி உயர்ந்திருந்தது ஜெயந்தி காம்ப்ளெக்ஸ், முன்னாள் ஜெயந்தி தியேட்டர்!

வ.வே.சு. கதைகளில் வருவது போல என் சிந்தனை பின்னோக்கிப் பறக்க…….

”ரெண்டு சினிமாடா! இன்னிக்கு நைட் ஷோ போய்டுவமா?”

அனந்தராமன் வாலிபால் ஆட்டத்திற்கு முன்பே கேட்டான்.

”என்ன படம்?”

” ’எங்கிருந்தோ வந்தாள்’, ’இதயக்கனி’!”

அன்று ஆறு மணிக்கே ஆட்டத்தை முடித்துவிட்டு அவரவர் வீடுகளுக்கு மார்க்கெட்டிங் பண்ணக் கிளம்பினோம்.

“என்ன கெட்ட வழக்கம், நைட் ஷோவுக்குப் போறது? ஆறு மணி ஷோவுக்குப் போனால் போறாதா?”

“யார்ரா ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்து கதவத் தெறக்கறது?”

“ஒண்ணும் வேணாம்! நாளைக்கு முழுக்க தூங்கி வழிஞ்சுண்டு இருப்பே!”

வீடுகளில் வரும் இந்த வாக்குவாதங்களை தேர்ந்த பேச்சுத் திறமையினால் வென்று நைட் ஷோவுக்குப் பர்மிஷன் வாங்கிப் போனோம்.

“ஏண்டா… எம்.ஜி.ஆர். எதுக்குடா சிவாஜியோட சண்டைப்போட்டார்?”

பாதித் தூக்கத்தில் படம் பார்த்துக் கேட்ட குமாருக்குப் பதில் முதுகில் விழுந்த தர்ம அடிகள்தான்.

அதே மாதிரி ஒரே டிக்கட்டில், ’பட்டிக்காட்டு ராஜா’, ’ஆராதனா’ பார்த்தோம். வழி முழுக்க “உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்” என்று நட்ட நடு ராத்திரி இந்திரா நகர் தெருவில் நாராசமாக சேகர் பாடிக்கொண்டு வந்தான். அட்சரம் புரியாமல் ’ஆராதனா’ பார்த்துவிட்டு “மேரே சப்புனோங்கி ராணிக்கபு” ன்னு ஹிந்தி பாட்டு வேறு!

இதே ஜெயந்தி தியேட்டர் இன்னும் பல வருஷங்களுக்கு முன்னால் கீத்துக்கொட்டகையாக இருந்தபோது ’சாது மிரண்டால்’ படம் பார்த்துவிட்டு ராத்திரி வீட்டுக்குத் திரும்ப டாக்ஸியில் ஏற பயந்து நடந்தே வந்து சேர்ந்தோம்.

’மிட்லேண்டில்’ பார்த்திருந்தாலும் மறுபடி ’பார்த்தேயாக வேண்டும்’ என்ற வைராக்கியத்தில் அனந்தராமன், ”நான் கொடுக்கறேண்டா ட்ரீட்! ……………ழி! என்னமா எடுத்திருக்கான்!” என்று பார்த்த பதினாறு வயதினிலே!

அது அந்நாளைய ஸ்ரீதேவிக்காக என்று பிற்பாடுதான் புரிந்தது.

பஞ்சு மிட்டாய் கலர், அப்புறம் நாகப்பழ கலரில் எல்லாம் டிக்கட் கொடுப்பார்கள். சில சமயம் பாண்ட் பாக்கெட்டிலேயே இருந்து அடுத்த நாள் காலையில் வீட்டு வேலை செய்யும் ரத்தினம் அம்மாவிடம் கம்ப்ளெயின் பண்ணிவிடுவாள்.

“போன மாசம் தீவாளிக்கு வாங்கிக்குடுத்தியே ரகுவுக்கு, அந்த பாண்ட் போச்சு!இதப்பாரு, என்னத்தையோ கலர் பண்ணி இப்ப சாயம்!”

“கடங்காரா! வர்ர வழில டிக்கட்ட எடுத்து எறியறதில்லையா? இந்த சாயத்தோடவே நடமாடு!”

மாதாமாதம் சுற்றுவட்டார ஈராஸ், கபாலி, காமதேனு தியேட்டர்களில் சினிமா போனலும் ஓரிரு முறையாவது ஜெயந்தி டெண்ட்டுக்கு போகாமல் இருக்க மாட்டோம். அப்போதெல்லாம் ஈராஸ் தியேட்டரில் வெளிவருவதற்கு படம் ரிலீசாகி நூறு வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆனால் சிட்டி லிமிட்டுக்கு வெளியே இருப்பதால் டெண்ட் கொட்டகையில் புதுப்படங்களாகவே வந்துவிடும் சௌகரியம் இருப்பதால் பல புதுப்படங்களை மூட்டைப்பூச்சி கடிக்கு இலக்காகி ரசித்திருக்கிறோம்.

’நம்ம வீட்டு மஹாலட்சுமி’ என்று ஒரு கே.ஆர். விஜயா படத்தில் அம்மி குழவியெல்லாம் தானாகவே உருண்டு ஓடும் கேனத்தனமான நகைச்சுவை காட்சிகளுக்கு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம்.

படம் பார்ப்பதைவிட அதற்காகத் திட்டமிடுவது, நடந்தே போவது, திரும்பி வரும்போது பார்த்த படத்தை சுவாரஸ்யமாக விமரிசனம் பண்ணிக்கொண்டே வருவது, “இந்த வீடுதாண்டா! சீ! இது இல்லை, அது அடுத்த தெரு!” என்று போன வாரம் பஸ்ஸில் பார்த்த ஏதோ காலேஜ் பெண்ணின் நினைவில் வம்பளந்து கொண்டு வருவது, வீட்டோடு போகும்போது சமத்தாய்ப்போய் வருவது என்று பல நூறு அபார மணிகள்.

பின்னாளில் புதுசாக யாரையாவது சந்திக்கும்போது பேச்சுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

“எங்க இருக்கீங்க?”

“திருவான்மியூர்ல! முன்னாடி ஜெயந்தி தியேட்டர்னு ஒரு டெண்ட் இருந்ததே, அதே காம்ப்ளக்ஸில!”

என்னவோ அவர்தான் என் இளமைக்கால இனிமைகளைச் சீரழித்துவிட்டவர் போல அந்த ஆசாமியை எனக்குப் பிடிக்காமல் போகக்கூடும்.

தொழில் நுட்பமும் நாகரிகமும் பாதுகாப்பும் என பல காரணங்களால் டெண்ட் கொட்டகை வழக்கொழிந்து போயிருப்பது நியாயமானதுதான் என்றாலும் அவை தந்த சந்தோஷ மணித்துளிகளின் தாக்கம் இன்னும் மறையவில்லை என்பதுதான் நிதர்சனமான நிஜம்!

ரகுநாதன்
எழுத்தாளர் ஜெ.ரகுநாதன் வெற்றிகரமான சார்ட்டட் அக்கவுண்டண்ட் CA - இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்தவர். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் தமிழ் முன்னணி இதழ்களில் எழுதி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பம் குறித்து இரண்டு வருடங்கள் கல்கியில் கட்டுரைகளும், 108 திவ்ய தேசங்கள் குறித்தும், பொருளாதாரம் குறித்துப் பல கட்டுரைகளும், சுய முன்னேற்றக் கட்டுரைகளும் பல இதழ்களில் எழுதியுள்ளார். மூன்று மேடை நாடகங்களை ஜெ.ரகுநாதன் எழுதி அவை வெற்றிகரமான முறையில் தியேட்டர் மெரினாவால் பலமுறை அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன. சமூக நாவல், மாய யதார்த்த வகை நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

0
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...