0,00 INR

No products in the cart.

“உலகத்திலேயே சுத்தமான போர் வீரன் ஆங்கிலேயன்தான்!

அது ஒரு கனாக் காலம் – 4

ஜெயராமன் ரகுநாதன்

 

ருடம் – 1943.

மைலாப்பூரில் ஒரு மாலை.

எஸ்.ராமச்சந்திரன் என்பவர் வீட்டுக்குள் வந்தவுடன் குரல் கொடுக்கிறார்.

“வாங்கோ வாங்கோ! எல்லோரும் வாங்கோ! நாளைக்கு ஒரு விசேஷம்!”

“என்ன மாமா? என்ன அத்திம்பேர்? என்னப்பா?”

பல குரல்கள் ஆவலுடன்.

“நாளைக்கு மத்தியானம் மூணு மணிக்கு நாம எல்லோரும் மொட்டை மாடிக்குப்போய்டணும்! அங்கேர்ந்துதான் ஒரு அதிசயத்தைப் பாக்கப்போறோம்!”

”அதிசயமா? அது என்ன?”

”ம்ஹும்! இப்ப ஒண்ணும் சொல்ல மாட்டேன்! நாளைக்கு மூணு மணிக்குதான்!”

அடுத்த நாள் அதிசயம் நடந்ததா?

நடந்தது!

மைலாப்பூர், திருவல்லிக்கேணி மக்கள் இன்னும் பலர் மெட்ராஸில் மூணரை மணி மாலை வெயிலில் கிழக்குப்பக்கம் அந்த அதிசயத்தைப்பார்த்து வாயைப்பிளந்தார்கள்.

ஒற்றை எஞ்சின் விமானம் கிட்டத்தட்ட ஆயிரம் அடி உயரத்தில் மெதுவாகப் பறக்க, அதன் வாலில் இருந்த மஞ்சள் துணி பானரில் ”சன்லைட் சோப், சுத்தமான சோப்” என்னும் வாசகங்களுடன் காற்றில் படபடத்துப் பறந்த அதிசயம்!

ஆம், லீவர் பிரதர்ஸ் கம்பெனி தங்களின் சன்லைட் சோப்பை விளம்பரப்படுத்திய புதுமையான முயற்சி.

ஆமாம், யார் அந்த ராமச்சந்திரன்?

பிற்பாடு சொல்கிறேன்.

உலகத்திலேயே முதல் முதலில் ஒரு பிராண்ட்டின் பெயரில் தயாரித்து விற்கப்பட்ட துணி தோய்க்கும் சோப் சன்லைட் என்னும் சோப்புதான்!

நடந்த வருடம்….?

மூச்சைப்பிடித்துக்கொள்ளுங்கள், 1884!

அந்த சோப்பின் மகோன்னத வெற்றியினால் யூனிலீவர் கம்பெனி இங்கிலாந்தில் தங்களுடைய மிகப்பெரிய தொழிற்சாலை இருக்கும் இடத்திற்கு “போர்ட் சன்லைட்” (Port Sunlight) என்றே பெயரிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

இந்த சோப்புக்கான ஃபார்முலாவைக் கண்டுபிடித்தவர் வில்லியன்        ஹௌ வாட்சன் என்னும் கெமிக்கல் ஆசாமி. இவர் லீவர் சகோதர்களான வில்லியம் டார்ஸி லீவர் மற்றும் ஜேம்ஸ் டார்ஸி லீவருடன் பார்ட்னராகி சன்லைட் தயாரிப்பு மற்றும் விற்பனையைச் செய்து வந்தார். வாட்சனின் புதுமையான ஃபார்முலா முந்தைய சோப் ஃபார்முலாவான மிருகக் கொழுப்பு இல்லாமல் தாவரக் கொழுப்பு மற்றும் கிளிசரின் கொண்டு தயாரிக்கும் முறையாக இருந்தது.

அப்போதெல்லாம் இங்கிலாந்தில் சோப்புகள் நீண்ட “பார்” வகையாக இருக்கும். கடைகளில் கேட்டால்  வேண்டும் அளவுக்கு எடைபோட்டு வெட்டிக் கொடுப்பார்கள். லீவர் சகோதர்கள்தான் அதற்கு ’சன்லைட்’ என்றொரு பெயர் கொடுத்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்யத் தொடங்கினர் .உலக யுத்தம் வந்தபோது “உலகத்திலேயே சுத்தமான போர் வீரன் ஆங்கிலேயன் தான்! அவன் உபயோகிப்பது சன்லைட்” என்று சுத்தமான என்னும் பதத்தை சிலேடையாகப்பயன்படுத்தி சன்லைட் சோப்பை விளம்பரம் செய்தனர்.

ஒவ்வொரு விளம்பரமும் சன்லைட் சோப் எப்படி மற்ற சோப்புக்களைவிட சுத்தமானது சுகாதாரமனது என்பதையே வலியுறுத்தி யூனிலீவர் விற்பனை செய்தது. ஒரு காலத்தில் சன்லைட் சோப் இல்லாத வீடே கிடையாது என்னும் அளவுக்கு சன்லைட் சோப்பின் மார்க்கெட் ஷேர் 75% வரை இருந்தாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

”பீலாவாலா சாபூன் தேதோ!”

“மஞ்சா கலர் சோப்பு தாங்க!”

சர்வ சாதாரணமாக கடைக்காரர் சன்லைட் சோப்பை எடுத்துத்தர, வாங்கின கிராமத்து ஆசாமி, ஆற்றங்கரைக்குப் போய் அதை சோப்பை வைத்து துணி தோய்த்துப் பிழிந்து உலர்த்திவிட்டு, அதையே தலைக்கும் தேய்த்துக் குளிப்பார்.

எண்பதுகளில் நானே வட இந்திய கிராமங்களில் கண்கூடாகப்பர்த்த சமாசசாரம் இது!

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தொன்றில் யூனிலீவர் கம்பெனி இதே சன்லைட் பிராண்டில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஒன்றைப் புகுத்தி “எலுமிச்சை சக்தி கொண்ட இந்த வாஷிங் லிக்விட் பாத்திரங்களை பளபளக்க வைக்கும்” என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால் இந்த திரவம் பார்ப்பதற்கு எலுமிச்சை ஜூஸ் போல இருப்பதால் சிறுவர்கள் தவறாக எடுத்துக் குடித்துவிடும் அபாயம் இருப்பதால் இதைத் ’தடை செய்யவேண்டும்’ என்ற விவாதம் லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸிலேயே நடக்க, யூனிலீவர் கம்பெனி அப்படிப்பட்ட அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் இனி பாக்கெஜிங்கையும் விளம்பரங்களையும் மாற்றி அமைப்பதாக வாக்களித்ததாம்!

எல்லா சரித்திரங்களும் ஒரு காலத்தில் மங்கிப்போய்விடுவதைப்போல யூனிலீவரும் இந்த சன்லைட் பிராண்டை வர்த்தகக் காரணங்களுக்காக 2003ஆம் ஆண்டு விற்றுவிட, அந்த பிராண்ட் இன்று பல கைகள் மாறினாலும் இன்னமும் சில நாடுகளில் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.

 

ஆமாம், முதலில் ஏதோ ஒரு ராமச்சதிரனைப் பற்றிச் சொல்கிறேன் என்றாயே?

அந்த ராமச்சந்திரன் அக்கால லீவர் பிரதர்ஸில் தென்னிந்திய விற்பனைப் பிரிவுக்குத் தலைவர். தொள்ளாயிரத்து நாற்பதுகளில் சோப் விற்பது பெரிய சவால். பெரிய நகரங்களில் மட்டுமே சோப் வாங்கிக்கொண்டிருந்தார்கள். கிராமங்களில் மக்கள் ஆற்றுக்கும் குளத்துக்கு போய்தான் குளிப்பதால் அங்கே இருக்கும் மணலைத் தேய்த்தே குளித்து விடுவார்களாம்.

“சோப்பா! அது எதுக்கு தண்டச் செலவு!”

சேலத்தில்  ராமச்சந்திரனால் ஒரு கேஸ்  சன்லைட் சோப் கூட விற்க முடியவில்லை.

“என்ன அய்யரே! இங்கல்லாம் ஆரு சோப் வாங்கறவங்க! நீங்க மெட்ராஸ், பங்களுர்ருன்னு விக்கப்பாருங்க!” – என்று கடைக்காரர்கள் சொல்லி அனுப்புவார்களாம்.

பார்த்தார் ராமச்சந்திரன், ஒரு நாள் காலை சுமார் பத்து மணிக்கு ஒரு கட்டை வண்டி ஏற்பாடு செய்துக் கொண்டார். இரண்டு கேஸ் சன்லைட் சோப்பை அதில் வைத்துக்கொண்டு, மெயின் பஜார் ரோடு பக்கம் இவர் முன்னே நடக்க, கட்டை வண்டி பின்னால் வருமாம். கடைசிவரை போய்விட்டு, இன்னொரு வழியாக தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுவார். இரண்டு மணி நேரம் இடைவெளி கொடுத்து… மீண்டும் அதே பஜார் ரோடு வழியாக கட்டை வண்டியோடு ஊர்வலம்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கே.ஏ.அண்ட் சன்ஸ் கடைக்காரர் கூப்பிடுவாராம்…

”என்ன அய்யரே! என்னமோ கேஸ் கேஸா எடுத்துட்டுப் போறே?”

“ஆமா கவுண்டரே! நீங்க வாண்டாம்னுட்டீங்க! அங்க பி.கே.வி. கடையில ரெண்டு கேஸ், கட்ட தொட்டி தெருவுல கனகசபை முதலியார் ஒரு கேஸ் கேட்டிருக்காங்களே!”

“அவங்கெல்லாம் வாங்கறாங்களா! சரி, அப்ப நமக்கும் ஒரு கேஸ் போட்டுட்டுப்போயேன்!”

இந்த ரீதியில் சன்லைட் சோப் விற்பனையை அதிகரித்த அந்த ராமச்சந்திரன்…..

என் தாத்தாவேதான்!

மூன்று தலைமுறைகளாக என் தாத்தா, அப்பா மற்றும் நான், இன்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் என்றும் சில வருடங்களுக்கு முன்பு வரை ஹிந்துஸ்தான் லீவர் என்றும் அதற்கு முன்பு லீவர் பிரதர்ஸ் என்றும் அழைக்கப்பட்ட கம்பெனியில் வெவ்வேறு காலகட்டத்தில் பணி புரிந்திருக்கின்றோம் என்பது உபரிச்செய்தி!

1 COMMENT

  1. ஆம்! சிறு வயதில் (இப்போது நான் சூப்பர் சீனியர் சிட்டிசன்) வானில் ஒரு ஜெட் விமானம் Pears Soap என்று வட்டமிட்டு தன் புகையால் வரைந்தது ஞாபகம் வருதே!

ரகுநாதன்
எழுத்தாளர் ஜெ.ரகுநாதன் வெற்றிகரமான சார்ட்டட் அக்கவுண்டண்ட் CA - இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்தவர். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் தமிழ் முன்னணி இதழ்களில் எழுதி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பம் குறித்து இரண்டு வருடங்கள் கல்கியில் கட்டுரைகளும், 108 திவ்ய தேசங்கள் குறித்தும், பொருளாதாரம் குறித்துப் பல கட்டுரைகளும், சுய முன்னேற்றக் கட்டுரைகளும் பல இதழ்களில் எழுதியுள்ளார். மூன்று மேடை நாடகங்களை ஜெ.ரகுநாதன் எழுதி அவை வெற்றிகரமான முறையில் தியேட்டர் மெரினாவால் பலமுறை அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன. சமூக நாவல், மாய யதார்த்த வகை நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

இந்தச் சிறுமி எதிர்காலத்தில்  இந்தியாவிற்காக செஸ் ஆடுவார்

0
வினோத்   அசத்தலான ஆரம்ப விழா, சிறப்பான ஏற்பாடுகளுக்காக அனைத்து நாட்டு வீர்களின் பாராட்டுகளைத்தாண்டி  இந்த ஒலிம்பியாட்டில் கவர்ந்த விஷயங்களில் ஒன்று சிறுவர் சிறுமியர் பெருமளவில் பங்கேற்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த எந்த...

சுதந்திர தினம் : இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15; பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14. என்ன காரணம்

1
  சுதந்திர தின ஸ்பெஷல்   – எஸ். சந்திரமௌலி இந்திய சுதந்திர சட்டத்தின்படி,  பிரிட்டிஷ் அரசாங்கம் 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான்...

வாசகர்களைக் கதைக்குள் அழைத்துச் செல்லும் ஒரு குரல் .

2
கா.சு.வேலாயுதன்   ‘‘நான் ஒரு குரல் கலைஞர்!’’ - ஆடியோ புத்தகங்களில் கலக்கும் மீனா கணேசன் சென்னை புழலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் ரெட்ஹில்ஸ். இங்கே ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறது அந்த வீடு. சின்னதாக ஒரு ஹால்,...

அண்டார்டிக்காவிலிருந்து 5000 கி.மீ., பறந்து வந்த பறவை

0
  இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் கடற்கரை பகுதிகளில் மாதந்தோறும் பறவைகள் கணக்கெடுக்க  ஆராய்ச்சி மாணவர்கள் செல்வது வழக்கம். அண்மையில் தங்கச்சி மடம் அந்தோணியார்புரம் மீன்பிடி இறங்குதளம் அருகே வனத்துறையைச் சேர்ந்தவர் மீனவருடன்...