இன்றைய முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. இருப்பினும் சிறிய அளவில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில்லை. ஏனெனில், இதில் மொத்தமாக தான் முதலீடு செய்ய வேண்டும். ஆகையால் சிறு முதலீட்டாளர்கள் கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய கொண்டுவரப்பட்ட திட்டம் தான் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP). எஸ்ஐபி திட்டத்தின் வருகைக்குப் பின், பல நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறு தொகையில் முதலீட்டை அறிமுகப்படுத்தின. அவ்வகையில் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமானது, வெறும் 100 ரூபாயில் எஸ்ஐபி முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்ஐசி ஏற்கனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய எஸ்ஐபி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், சிறு முதலீட்டாளர்களை ஈர்க்க தற்போது அதன் தவணைக் தொகையை குறைத்து 100 ரூபாயாக மாற்றியுள்ளது. மேலும் சிறு முதலீட்டாளர்களின் பணத்தை பெருக்கும் விதமாக, லிக்விட் ஃபண்டிலும் எஸ்ஐபி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் மீது அதிக ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு இது நல்வாய்ப்பாக அமையும்.
இதுதவிர்த்து, சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர எஸ்ஐபி வரம்பை ரூ.200 ஆகவும், காலாண்டுக்கான மாதாந்திர எஸ்ஐபி வரம்பை ரூ.1,000 ஆகவும் குறைத்துள்ளது எல்ஐசி. எஸ்ஐபி முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, ஸ்டெப் அப் வசதி மாற்றியமைக்கப்பட்டு, குறைந்தபட்ச தொகை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 இல் தொடங்கப்படும் எஸ்ஐபி முதலீடுகள், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கும் பொருந்தாது. எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் இணைக்கப்பட்ட காப்பீடுத் திட்டம் மற்றும் ELSS வரி சேமிப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு 100 ரூபாய் எஸ்ஐபி பொருந்தாது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். புதிதாக வேலைக்குச் செல்பவர்கள், குறைந்த ஊதியம் வாங்குபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இந்த மைக்ரோ எஸ்ஐபி உதவியுடன் முதலீட்டைத் தொடங்கவதற்கு நல்வாய்ப்பாக இருக்கும்.
குறைந்த தொகையில் புதிய வரம்புகளுடன் அறிமுகமான எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், இளைய முதலீட்டாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே இத்திட்டத்தில் அதிக முதலீடுகள் கிடைக்கும் என எல்ஐசி நம்புகிறது.
புதிய வரம்புகள்:
தினசரி எஸ்ஐபி: ரூ.100 செலுத்தி எஸ்ஐபி முதலீட்டைத் தொடங்கலாம். அதன்பிறகு தவணைகத் தொகையை அதிகரித்துக் கொள்ளவும் வசதிகள் உள்ளன. இதன் குறைந்தபட்ச தவணைகள் மொத்தம் 60 ஆகும்.
மாதாந்திர எஸ்ஐபி: 200 ரூபாயில் தொடங்கப்படும் எஸ்ஐபி திட்டம் மாதாந்திர திட்டமாகும். இதில் குறைந்தபட்ச தவணைகள் 30 ஆகும்.
காலாண்டு எஸ்பிஐ: காலாண்டுக்கு ஒரு முறை ரூ.1,000 செலுத்தி தன் முதலீட்டை தொடங்கலாம். இதில் குறைந்தபட்ச தவணைகள் 6 ஆகும்.
குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடுகள் பொருளாதார உலகில் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதா இல்லையா என்பது குறித்து தெரிந்து விடும்.