எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, பலரும் வங்கிகளில் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். இவ்வாறு 93 சதவீத நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு அவற்றை வங்கியில் செலுத்துவதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதிய நிறத்திலான ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது புதிதாக 2000 ரூபாய் நோட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும், அந்த நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாதவையாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை பலரும் வங்கிகளில் கொடுத்து மாற்ற முயற்சி செய்தனர். இதற்காக வங்கிகளில் டெபாசிட் செய்வது அல்லது 2000 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு 500, 100 ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை 93 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு இருக்கின்றன. இதன்படி, 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இதில் 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. 13 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் கொடுத்து மாற்றப்பட்டிருக்கிறது. அதேசமயம், 24 ஆயிரம் கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது’ என்று ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com