ஓய்வு காலத்தில் எந்தவித பணக்கஷ்டமும் வரக்கூடாது என்பதற்காக பலரும் இப்போதே முதலீடு செய்வதுண்டு. ஆனால், சிலர் மட்டும் நாம் முதலீடு செய்த பணத்தில் இருந்து மாதாமாதம் ஒரு வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பார்கள். இவர்களுக்காகவே மாத வருமானம் தரும் 4 சிறப்பான திட்டங்களை இப்போது காண்போம்.
உங்களிடம் மொத்தமாக ஒரு பெருந்தொகை இருந்தால், அதனை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யவே விரும்புவீர்கள் அல்லவா. ஆனால், இதிலிருந்து மாதாந்திர வருமானம் பெற நினைத்தால், அதற்கென இருக்கும் சில திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (MIS):
முதலீட்டுத் திட்டங்களுக்கு அதிக வட்டியை அளிப்பவை அஞ்சல் அலுவலகங்கள் தான். மேலும், மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றன. மாதாந்திர வருமான திட்டத்தில் தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ.9 இலட்சமும், கூட்டுக் கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ.15 இலட்சமும் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. மாதாமாதம் இந்த வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். மாதாமாதம் அல்லது ஆண்டிற்கு ஒருமுறை இந்த வட்டித் தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். தனிநபர் கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ.5,550 மற்றும் கூட்டுக் கணக்கிற்கு ரூ.9,250 வரை மாதாந்திர வருமானம் கிடைக்கும்.
2. அடல் பென்சன் யோஜனா (APY):
கூட்டுறவுத் துறை அல்லாத தொழிலாளர்களுக்காக கொண்டு வரப்பட்டது தான் அடல் பென்சன் யோஜனா. 18 வயது முதல் 40 வயதுள்ள எவரும் இத்திட்டத்தின் கீழ் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கணக்கைத் தொடங்கலாம். உங்களின் முதலீட்டைப் பொறுத்து மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாத ஓய்வூதியம் கிடைக்கும்.
3. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):
ஒரு முறை மட்டும் முதலீடு செய்து 5 ஆண்டுகளுக்கு வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் காலாண்டுகளின் அடிப்படையில் வருமானம் கிடைக்கும். ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 இலட்சம் வரை முதலீடு செய்தால், ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ.61,500 வட்டியாக கிடைக்கும். 5 ஆண்டுகளின் முடிவில் மொத்தமாக வட்டி மட்டும் ரூ.12,30,000 கிடைக்கும்.
4. சிஸ்டமேடிக் வித்டிராவல் பிளான் (SWP):
ஓய்வுக்கு முன்னர் ஏதேனும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் SIP திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு குறிப்பிட்ட தொகையைத் திரும்பப் பெற SWP திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதலில் நீங்கள் ஒரு கார்பஸை உருவாக்க வேண்டும். ஓய்வுபெறும் காலத்தில் SWP திட்டத்தின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று, மாதாமாதம் ஒரு தொகையைப் பெறலாம்.