
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் பல்வேறு காரணங்களால் உரிமை கோரப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த மார்ச் மாத வரையில வரையில் 16.79 கோடி வங்கி கணக்குகளில் 48,461 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத தொகை இருப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவைகள் ரிசர்வ் வங்கியினுடைய வைப்பாளர் கல்வி விழிப்புணர்வு நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ளது.
திடீர் மரணம், வாரிசுதாரரை நியமிக்காத நிலை, குறைவான இருப்புத் தொகை, இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால் உரிமை கூறப்படாத பணம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உரிமை கூறப்படாத அந்த நிதிகளை பயனாளர்கள் மற்றும் பயனாளர்களினுடைய வாரிசுகள் திரும்ப பெற்று பயனடைய புதிய வலைதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தற்போது உருவாக்கியுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் வங்கி சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு ஆகியவற்றில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கூறப்படாத தொகைகள் மற்றும் வைப்புக்காலம் முடிந்தும் 10 ஆண்டுகள் உரிமை கூறப்படாத தொகைகளை திரும்ப பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் எஸ்பிஐ வங்கியில் உள்ள 8,086 கோடி, பஞ்சாப் நேஷனல் பேங்கில் உள்ள 5,340 கோடி, கனரா வங்கியில் உள்ள 4,558 கோடி, பேங்க் ஆப் பரோடாவில் உள்ள 3,904 கோடி ஆகியவற்றை திரும்ப அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிய வலைதளத்தில் பதிவு செய்து கொண்டு, பிறகு வங்கி கணக்கு உரிமையாளரின் பெயர், அடையாள அட்டை ஆவணம், உரிமை கூறப்படாத தொகை விபரம், கடவுச்சொல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து எளிய முறையில் தொகையை திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கி கணக்குகளில் உரிமைக் கூறப்படாத தொகைகள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு சென்றடைய வழிவகுக்கும். இதன் மூலம் பயனாளர்கள் மற்றும் பயனாளர்களின் வாரிசுகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.