நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் ஒவ்வொன்றும் நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. நாட்டில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டு சரித்திரத்தில் இடம்பிடித்த 5 பட்ஜெட் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
1.செல்வ வரி அறிமுகமான 1957-58 பட்ஜெட்
தனி நபர்களின் சொத்துக்களின் மதிப்பீடு அடிப்படையில் விதிக்கப்பட்ட செல்வந்த வரி என்ற செல்வ வரி, டிடி கிருஷ்ணமாச்சாரி 1957-1958-ல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வரித்துறை வரலாற்றில் இது மிகவும் முக்கியமானதாகவும் பார்க்கப்பட்டது. 1990களில் தாராளமயமாக்கல் அறிமுகமான பின்னர் செல்வந்த வரியில் மாற்றங்கள் ஏற்பட்டு 2015-ல் இந்த நடைமுறையே கைவிடப்பட்டது என்பது வரலாறு.
2.தாராளமயாக்கல் தொடக்கம் 1991-92
1991ல் மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அன்னிய முதலீடுகளுக்கான கதவுகளை முழுமையாக திறந்துவிடக் கூடிய அளவுக்கு உதாரணமாக சுங்கவரி 220% என்பதை 150% ஆக அதிரடியாக குறைத்தார். தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை இந்தியா ஏற்றுக் கொண்டு சர்வதேச வர்த்தக உலகில் இணைந்து கொள்வதற்கும் இன்று உலகப் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுப்போம் என பேசுவதற்கும், அத்தனைக்கும் அடித்தளம் போட்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.
3.பெரும் பாராட்டு பெற்ற கனவு பட்ஜெட் தாக்கல் செய்த சிதம்பரம் 1997-98
1997-98-ல் ப.சிதம்பரம் தாக்கல் செய்த கனவு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி ஆகியவற்றை கணிசமான அளவு குறைத்து, தனிநபர் வரியை 40%-ல் இருந்து 30% ஆக குறைத்து அறிவித்தார். உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதத்தை 40%-ல் இருந்து 35% ஆகக் குறைத்தார். சுங்க வரி 50%-ல் 40% ஆக குறைக்கப்பட்டது. கலால் வரி குறைக்கப்பட்டது. கூடுதல் வரி (surcharge) விதிப்பு நிறுத்தம், ராயல்டி விகிதங்கள் குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு உயர்வு அதிரடி காட்டியதால் கனவு பட்ஜெட் என காலந்தோறும் போற்றப்படுகிறது.
இந்த கனவு பட்ஜெட் 1997-ஆம் ஆண்டில் ரூ. 18,700 கோடியாக இருந்த வருமான வரி வசூல் 2013-ஆம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கோடியாக உயர்ந்தது என்றது போர்ப்ஸ் அறிக்கை.
4.ஐடி புரட்சிக்கு வித்திட்ட யஷ்வந்த் சின்ஹாவின் 2000-01 பட்ஜெட்
இன்றைக்கு ஐடி உலகில் இந்தியா அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பதற்கு யஷ்வந்த் சின்ஹாவின் 2000-01 பட்ஜெட் மிக முக்கிய காரணம். அன்று கம்ப்யூட்டர்கள் விலை சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. இதனால் கம்ப்யூட்டர்கள் உட்பட 21 ஐடி துறை பொருட்களின் சுங்க வரியை வெகுவாகவே குறைத்து அதிரடி காட்டியதுதான் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட்.
5.சரித்திரத்தை மாற்றிய அருண்ஜேட்லி பட்ஜெட் 2016-17
இந்தியாவில் ரயில்வே பட்ஜெட், மத்திய பொது பட்ஜெட் என இரண்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தன. 92 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்ததை 2016-17 பட்ஜெட்டில் மாற்றி ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்தார் அருண்ஜேட்லி. இந்திய பட்ஜெட் வரலாற்றில் இது திருப்புமுனை. அன்று முதல் இன்று வரை மத்திய பட்ஜெட்டிலேயே ரயில்வே திட்டங்களும் இடம் பெறுவது தொடருகிறது.
மேற்கண்ட, காலத்தால் அழியாத பட்ஜெட்டுகளாக இன்றளவும் கருதப்படுகின்ற பட்ஜெட்டுகள் 5ம் ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன.