பணப்பையினைக் கனமாக்க அர்கத் கூறும் 7 விதிகள்!

பணப்பையினைக் கனமாக்க அர்கத் கூறும் 7 விதிகள்!

லகின் தலைச்சிறந்த தனிமனித நிதி புத்தகங்களுள் ஒன்றாக, ‘பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்(The richest man in Babylon)’ கருதப்படுகிறது.

இதன் ஆசிரியர் ஜார்ஜ் எஸ். கிளாசன்(George S. Clason). இது 1927ம் ஆண்டு முதலில் புத்தகமாக வந்ததிலிருந்து, இன்றுவரை லட்சக்கணக்கில் விற்பனையாகி உள்ளது என்பதன் மூலம், இதிலுள்ள அறிவுரைகள் தலைமுறை தலைமுறையாக மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது என்பது தெளிவாகிறது.

கதைகள் மூலமாக, பல்வேறு தனிமனித நிதி கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்கிறது இந்தப் புத்தகம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகள், கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை செழிப்பாக இருந்த பாபிலோனைச் சார்ந்தவை. அவை, இன்றும் நமக்குப் பயன்தருபவை. இயற்பியலின் விதிகளைப் போலவே, தனி மனித நிதியின் அடிப்படை விதிகளும் மாறாதவை என்பது நமக்குத் தெளிவாகிறது.

புத்தகத்தில், அர்கத் என்ற பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர், தன்னுடைய தனி மனித நிதி சார்ந்த அறிவுரைகளை, அரசன் கேட்டுக் கொண்டபடி, பகிர்ந்துக் கொள்கிறார். இவை 7 நாட்களுக்கு ஒரு அறிவுரை வீதம் பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றன. பணப்பையினைக் கனமாக்க அர்கத் அவர்கள் அளித்த 7 ஆலோசனைகள் எவை என்று பார்ப்போம்:

1. நீங்கள் பணப்பையில் போடும் பத்து நாணயங்களில் ஒன்பதை மட்டும் செலவழியுங்கள். இவ்வாறு செய்து வந்தால், பணப்பையானது கனக்கத் தொடங்கும். இதில் மனிதன் குறைந்தபட்சம் 10% பணத்தை சேமிப்பதைக் குறிப்பிடுகிறார். சேமிப்பு இன்றி செல்வந்தன் இல்லை.

2. நாம் தேவையான செலவுகளுடன், ஆசைகளைப் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. பட்ஜெட் எது தேவை, எது ஆசை என்று பிரித்தறிய உதவுகிறது.தேவையற்ற செலவுகளைக் கட்டுக்குள் வைத்து, தேவையான செலவுகளை மட்டும் செய்ய வைக்கிறது. அத்தனை செலவுகளும் வருமானத்தின் ஒன்பது பங்குகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்; இதில் பட்ஜெட்டின் முக்கியத்துவம் விளங்குகிறது. கடன் கூடாது. முதல் விதியில் குறிப்பிட்டபடி, 10% சேமிப்பு போக, மீதமுள்ள 90% பணத்திற்குள்ளாக மட்டுமே செலவு இருக்க வேண்டும்.

3. உன்னுடைய ஒவ்வொரு நாணயத்தையும் வேலை செய்ய விட வேண்டும். அது தன்னைப் போன்ற இன்னொரு நாணயத்தை உருவாக்கும். இதில் முதலீட்டின் முக்கியத்துவம் தெரிய வருகிறது. முதலீடு இல்லாமல் பணமானது பெருகாது.

4. எங்கு மூலதனம் பாதுகாப்பாகத் திரும்பி வருமோ, அங்கு மட்டும் முதலீடு செய்ய வேண்டும். இது சம்பந்தமாக நிபுணர்களிடம், தங்கத்தினை லாபமான முறையில் கையாள்பவரிடம் அறிவுரை கேட்க வேண்டும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, பணத்தினை இழக்க கூடாது என்பது தெரிய வருகிறது.

5. சொந்தமாக வீடு வைத்திருங்கள். இதில் சொந்த வீட்டின் முக்கியத்துவம் விளங்குகிறது. சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வாடகை என்ற பெயரில் பணத்தினை இழப்பதில்லை. மேலும், அவர்கள் மனைவி, குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உணர்வதானது, மற்ற நிதி விஷயங்களில் முதலீட்டினைப் பெருக்க உதவுகிறது. மன நிம்மதியை அளிக்கிறது.

6. செல்வத்தின் விதிகளை அறிந்தவன், அதிகப்படியான பணம் உள்ளவன், தனது எதிர்காலத்தினைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். பல வருடங்கள் பாதுகாப்பாக வாழும் வகையில் சில முதலீடுகள் செய்ய வேண்டும்; இதில் எதிர்கால பணத்தின் பாதுகாப்பான, தனிமனிதக் காப்பீட்டினைக் குறித்த தீர்க்கதரிசனத்தினை, அர்கத் கூறுகிறார். நாம் காலவரையுள்ள காப்பீட்டுத் திட்டத்தினில்(term insurance) பணத்தினை முதலீடு செய்ய வேண்டும். திடீரென்று சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டால், அது குடும்பத்தினைக் காக்கும். மேலும், எதிர்காலத்தில் தொடர்ந்து ஆண்டுத்தொகை தருவதைப் போன்ற முதலீட்டிற்கு (pension plans), இப்போதே பணம் சேர்க்க வேண்டும்.

7. அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற வலுவான விருப்பம் இருக்க வேண்டும். தன்னுடைய தொழில் திறனை வளர்த்துக்கொள்பவனுக்கு, நிறைய வெகுமதிகள் கிடைக்கும்; இதில் சம்பாதிக்கும் திறனை வளர்த்துக் கொள்பவனுக்கு, அதிக பண வரவின் மூலமாக, பணக்காரன் ஆவது எளிதாகிறது.

அர்கத்தின் இந்த பணப்பையினைக் கனமாக்கும் ஏழு விதிகளைப் பின்பற்றி நாமும் பணக்காரர் ஆக முயற்சிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com