இளமையில் நிதி சுதந்திரம்  அடைய 7 வழிகள்!

7 Ways for financial independent
7 Ways for financial independent

நிதி சுதந்திரம் என்பது தற்போது பார்க்கும் வேலையினால் வரும் சம்பளத்தை நம்பி இராமல், ஏற்கனவே சேர்த்து வைத்த சேமிப்பு மற்றும் முதலீட்டினைக் கொண்டே, காலம் முழுவதும் வாழும் வகையில் பணத்தை சேமித்துவிடுவது. இத்தகைய நிதி சுதந்திரம் கிடைத்து விட்டால், சம்பளத்திற்கான வேலை பிடிக்காவிட்டால், பிடித்த வேறொரு வேலைக்கு தைரியமாக மாறிவிட முடியும். நிதி சுதந்திரம் வாழ்க்கைக்கான சுதந்திரத்தை அளிக்கிறது.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் கூட, ஓய்வு காலத்தில் கூட கட்டாயமாக வேலைபார்க்கும் நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம், சரியான நிதி திட்டமிடல் இல்லாதது தான்.

சீக்கிரமாக நிதி சுதந்திரத்தினை அடைய 7 வழிகளைப் பார்ப்போம்.

1. அவசர கால நிதி(Emergency Fund) வைத்திருக்க வேண்டும்

குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான செலவுகளுக்கு சமமான அவசர கால நிதி வைத்திருக்க வேண்டும். எவ்வளவு அதிகம் வைத்திருக்கிறோமோ அவ்வளவு நல்லது. இதன் மூலம், அவசரத் தேவைகளுக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும். முதலீடுகளை நடுவில் எடுப்பதை தவிர்க்க முடியும். முதலீடுகளை நடுவில் எடுப்பதென்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமம்.

2. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு போன்ற காப்பீடுகளை வைத்திருக்க வேண்டும்:

காப்பீடு என்பது சம்பாதித்த பணத்தை காப்பதற்கு உதவும். நம்மால் தாங்க முடியாத பெரிய செலவுகளை எளிதில் கையாள காப்பீடு உதவுகிறது. முதலீடுகளில் நடுவில் கை வைப்பதை காப்பீடு தடுக்கிறது.

3. சீக்கிரமாக முதலீடு தொடங்க வேண்டும்:

எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்குகிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக நம்மால் கூட்டுவட்டியின் பயனை அடைய முடியும். தங்க விதி 72 எவ்வளவு வருடங்களில் பணம் கூட்டு வட்டியில் இரட்டிப்பு ஆகுமென்று கூறுகிறது. உதாரணமாக, 9% வட்டி விகிதம் என்றால், 8 வருடங்களில் பணம் இரட்டிப்பு ஆகும். எனவே, சீக்கிரமாக முதலீடு தொடங்க, 32 வருடங்களில், 16 மடங்கு பணம் பெருகும். இதற்கு மாறாக, தாமதமாகத் தொடங்கினால், இவ்வளவு பெரிய பணப் பெருக்கத்தை அடைய காலமெடுக்கும்.

4. கடன்களைத் தவிர்க்க வேண்டும்:

கடனில் பணம் விரயமாகும். கடனட்டைப் போன்ற கடன்களில் சில சமயங்களில் வட்டி விகிதம் 50% கூட இருக்கும். பெரிய கடன் குழியில் மாட்டிக் கொள்ளநேரலாம். தனிநபர் கடன் உட்பட, எந்த ஒரு கடனையும் தவிர்க்க வேண்டும். வீட்டுக் கடன், தொழில் தொடங்க கடன் போன்றவை விதி விலக்குகள். வீடு அத்தியாவசியத் தேவை. தொழில் பிற்காலத்தில் பணத்தைப் பெருக்கிக் கொடுக்கும். அவற்றைக் கூட, சீக்கிரம் அடைத்து விட வேண்டும். கடன் இல்லாத போது, பணவரவு அதிகரிக்கும்.

5. மாத வருவாயில் குறைந்தபட்சம் 20% முதலீடு செய்ய வேண்டும்:

மாதம் சம்பளத்தில் 80% பணத்தை முதலீடு செய்பவர்கள் உள்ளனர். முதலீட்டின் மூலமே பணத்தைப் பெருக்க முடியும். பணவீக்கத்தினைச் சமாளிக்க முடியும். மேலும், அதிக வருவாய் ஈட்ட பார்க்க வேண்டும். வேறொரு வகையிலும் பக்க வருமானம் (side job), ஈடுபாடற்ற வருமானம் (passive income) மூலம், அதிக வருமானம் ஈட்ட பார்க்க வேண்டும்.

6. குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்:

குறிக்கோள்களைக் குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என்று பிரித்துக் கொண்டு, அதற்கேற்ற முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் பணத்தை இழக்க நேரலாம். உதாரணமாக, குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் சிறப்பானவை. நடுத்தர காலக் குறிக்கோள்களுக்கு கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. சரியான சமயத்தில் முதலீட்டினை விட்டு வெளியேற (Exit strategy) வேண்டும். உதாரணமாக, நீண்ட காலக் குறிக்கோள் எனில், குறிக்கோளுக்கு முன்கூட்டியே பங்குசந்தை எழுச்சியின் போது, வெளியேறினால், லாபத்துடன் வெளியேறலாம்

7. பரவலான முதலீடுக் கலவையை வைத்திருக்க வேண்டும்:

முதலீட்டுக் கலவையில் பங்குசந்தை, கடன் பத்திரங்கள், தங்கம், நிலம் என பரவலான முதலீட்டுக் கலவையை வைத்திருக்க வேண்டும். வயது கூடக் கூட, நமது முதலீட்டுக் கலவையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, (110 - வயது) சாம்யத்தின் படி, வயது 30 என்றால், 80% பங்குச்சந்தை பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். மீதம் 20% கடன்பத்திர பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். வருடா வருடம், முதலீட்டுக் கலவையின் வருடாந்திர சமன்படுத்துதல்(annual rebalancing) செய்ய வேண்டும். இதன் மூலம், பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களில் வரும் லாபத்தை, மறுமுதலீடு செய்து, முதலீட்டினை வளர்க்க முடியும்.

இவ்வாறு, பணத்தை பெருக்கி, பணத்தின் இழப்பைக் குறைப்பதன் மூலம் சீக்கிரமாக நிதி சுதந்திரத்தை அடைய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com