
இந்திய பொருளாதாரம் என்பது ஒரு கலவையான பொருளாதாரமாக உள்ளது. இதில் தனியார் மற்றும் பொதுத்துறை இரண்டும் உள்ளன. இவை விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கியது. இந்திய பொருளாதாரம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. அதிக மக்கள் தொகை, விவசாயத்தை சார்ந்துள்ள நிலை, தனி நபர் வருமானம் குறைவு மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை போன்ற அம்சங்கள் இந்திய பொருளாதரத்தில் காணப்படுகின்றது.
இவற்றின் முக்கிய அம்சங்கள்:
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்:
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலக அரங்கில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. பெரிய சந்தை மற்றும் உழைக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய மக்கள் தொகை போன்றவை இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கான காரணமாகும்.
விவசாயத்தை சார்ந்துள்ள பொருளாதார அமைப்பு:
விவசாயம் என்பது இந்திய பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். இந்திய பொருளாதாரம் முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள் பெரும் பங்களிக்கிறது. இந்திய பொருளாதாரம் விவசாயத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதி விவசாயத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளது.
கலப்பு பொருளாதாரம்:
இந்திய பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரமாகும். அதாவது தனியார் மற்றும் அரசுத் துறைகளை உள்ளடக்கிய கலப்பு பொருளாதாரமாகும். தனியார் துறையில் வணிகர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழில்கள் உள்ளன. பொதுத்துறை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு பற்றாக்குறை:
இந்திய பொருளாதாரத்தின் முக்கிய சவால்களில் ஒன்று உள்கட்டமைப்பு பற்றாக்குறை. போக்குவரத்து, எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் இந்த பற்றாக்குறை உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. இதில் மூலதன உருவாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை தடுக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாதது பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய அரசு மற்றும் தனியார் துறையினர் இணைந்து முதலீடு செய்ய வேண்டும்.
தொழில்மயமாக்கல்:
இந்திய பொருளாதாரம் வேகமாக தொழில்மயமாகி வருகிறது. இது உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் உதவுகிறது. சாலைகள், ரயில் பாதைகள், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் தொழில்மயமாக்கலின் வளர்ச்சிக்கு அவசியமானவை. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. அத்துடன் புதிய தொழில்களை உருவாக்கவும் உதவுகிறது. தொழில்மயமாக்கல் மூலம் இந்திய பொருட்களை சர்வதேச சந்தையில் விற்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், அந்நிய செலாவணியை ஈட்டவும் உதவுகிறது. மொத்தத்தில் தொழில்மயமாக்கல் தேசிய வருமானத்தை அதிகரிப்பதுடன் நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கும் பங்களிக்கிறது.
வெளிநாட்டு முதலீடு:
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். வெளிநாட்டு முதலீட்டு வாரியம் 1968-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வாரியம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை எளிதாக்குவதற்கும், அத்தகைய முதலீடுகள் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுடன் ஒத்துப் போகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்டது.
சேவைத் துறை வளர்ச்சி:
இந்தியாவில் சேவைத் துறை என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இது தகவல் தொழில்நுட்பம், வங்கி, நிதி, சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கியது. இத்துறை இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக காணப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பெரும் பங்களிப்பை அளிக்கிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சேவைகள் உலகளவில் இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிக்கிறது.
அதிக மக்கள் தொகை:
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்குகிறது. அதிக மக்கள் தொகை என்பது ஒரு பெரிய சவாலாகவும், அதே நேரத்தில் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. மக்கள் தொகை திறன்மிக்க தொழிலாளர்களாக மாற்றப்பட்டால் அது பெருமளவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வறுமை மற்றும் சமத்துவமின்மை:
ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இருந்தபோதிலும், தனிநபர் வருமானம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இந்தியாவில் வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மை போன்றவை ஒரு முக்கியமான பிரச்சனையாகும். இந்தியாவின் தனி நபர் வருமானத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா அவர்களை விட மிகவும் பின்தங்கி இருப்பதைக் காணலாம். உதாரணமாக அமெரிக்காவின் தனிநபர் வருமானம் இந்தியாவை விட 15 மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.