
நமது முதலீட்டுக் கலவையானது எல்லா பருவங்களையும் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
எவ்வாறு பருவங்களில் வசந்தகாலம், கோடைக்காலம், மழைக்காலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என பல்வேறு பருவங்கள் உள்ளனவோ, பொருளாதாரத்திலும் பணவீக்க காலம் (Inflation), வளர்ச்சி காலம் (Growth), மந்த காலம் (Recession), பணவாட்ட காலம் (Deflation) என பல்வேறு பருவங்கள் உள்ளன. நமது முதலீட்டுக் கலவை எந்த ஒரு பருவமானாலும், பணத்தை இழக்கும் அபாயத்தைக் குறைவாக கொண்டிருக்க வேண்டும். மேலும், எல்லா பருவங்களிலும் அந்தந்த பருவங்களின் சாதகமான விஷயங்களைப் பயன்படுத்தி நன்றாக வளரவும் செய்ய வேண்டும்.
இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.
தகைவிலான் குருவி (Swallow) மற்றும் காகத்திற்கு இடையே தங்களின் சிறகுகளைப் பற்றிய ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. தகைவிலான் குருவி தனது சிறகுகள் தான் சிறப்பானது என்று கூறியது. அதற்கு காகம் பின்வருமாறு பதிலளித்தது....
'நான் உன்னை வசந்த காலத்தில் மட்டுமே காண்கிறேன். குளிர்காலத்தில் உன்னை நான் காணுவதில்லை. உனது சிறகுகள் வசந்த காலத்தில் நன்றாக உள்ளன. ஆனால், குளிர்காலத்தில் எனது சிறகுகள் என்னைக் காக்கின்றன' என்றது காகம்.
தகைவிலான் குருவி மற்றும் காகத்திற்கான வாக்குவாதம் காகத்தின் இந்த பதிலினால் முடிவுக்கு வந்தது.
இங்கு தகைவிலான் குருவி மற்றும் காகம் என்பவை இரண்டு வகையான முதலீட்டு கலவைகள் போன்றவை. தகைவிலான் குருவியின் முதலீட்டுக் கலவை பங்குகளைப் பிரதானமாக கொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட கலவை. காகத்தின் முதலீட்டுக் கலவை பங்குகள், கடன்பத்திரங்கள் என இரண்டையும் கொண்ட பன்முகமுடைய பரவலான கலவை. வசந்த காலத்தில், அதாவது பொருளாதார வளர்ச்சி காலத்தில் தகைவிலான் பறவையின் சிறகுகள் சிறப்பாக ஒத்துழைக்கின்றன. ஆனால், குளிர்காலத்தில், அதாவது பொருளாதார மந்த காலத்தில், தகைவிலான் பறவையினால் குளிரினைச் சமாளிக்க முடியாது. எனவே, அது மிதவெப்ப மற்றும் வெப்ப பகுதிகளை நோக்கி வலசை செல்கிறது. தகைவிலான் குருவியைப் போல, பங்குகளைப் பிரதானமாகக் கொண்ட முதலீட்டுக் கலவை, குளிர்காலத்தைப் போன்ற, பொருளாதார மந்த காலத்தில் வீழ்ச்சியை சந்திக்கும். இதற்கு மாறாக, காகத்தின் சிறகுகள் வசந்தகாலம், குளிர்காலம் என எந்த ஒரு பருவத்தையும் சமாளிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளன. காகம் குளிர்காலத்தில் வலசை செல்வதில்லை. ஏனென்றால், காகத்தின் முதலீட்டுக் கலவை பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் சார்ந்த பரவலான கலவையாதலால், குளிர்காலத்தினை, அதாவது, பொருளாதார மந்த காலத்தினை குறைவான பாதிப்புடன் தைரியமாக சந்திக்கிறது.
எந்த பருவகாலத்தையும் தாங்கும் முதலீட்டுக் கலவையை ஆங்கிலத்தில் All Weather Portfolio, அதாவது எல்லா பருவங்களுக்குமான முதலீட்டுக் கலவை என்று கூறுவர். இத்தகைய எல்லா பருவங்களுக்குமான முதலீட்டுக் கலவையை வடிவமைத்த முன்னோடி, உலகின் மிகப்பெரிய ஹெட்ஜ் நிதியான, பிரிட்ஜ்வாட்டர் அசோஸியேட்ஸ் நிறுவனத்தை தொடங்கியவரான ரே டாலியோ (Ray Dalio). அவரது முதலீட்டுக் கலவை பின்வருமாறு.
40% நீண்ட கால கடன் பத்திரங்கள்
30% பங்குகள்
15% நடுத்தர கால கடன் பத்திரங்கள்
7.5% தங்கம்
7.5% சரக்குகள்
இந்த முதலீட்டுக் கலவை, கிபி 1984 முதல் கிபி 2025 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவில் வருடாவருடம் 7.6% என பணத்தைப் பெருக்கியுள்ளது. அதே சமயத்தில் பங்குகளை மட்டும் கொண்ட S&P 500 குறியீட்டை விட, குறைவான ஏற்றத்தாழ்வை சந்தித்துள்ளது. இதனை அப்படியே நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நமது முதலீட்டுக் கலவையைப் பரவலாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை எல்லா பருவங்களுக்குமான முதலீட்டுக் கலவை நமக்குத் தெரிவிக்கிறது.
பங்குச்சந்தையில் ஏறுமுக பருவமான காளைச் சந்தை, இறங்குமுக பருவமான கரடிச்சந்தை என இரண்டு பருவங்கள் உள்ளன. காளைச் சந்தையில் பங்குகளும், கரடிச் சந்தையில் கடன் பத்திரங்களும் மதிப்பு கூடும். எனவே, நமது முதலீட்டுக் கலவை, பங்குகள், கடன்பத்திரங்கள் கலந்து பரவலாக அமைய வேண்டும்.
எனவே, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த எல்லா பருவங்களுக்குமான முதலீட்டுக் கலவையை நாம் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம் நமது முதலீடானது நீண்ட காலத்தில் பருவங்களினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சிறப்பாகக் கையாண்டு, நமது நீண்ட காலக் குறிக்கோளை அடைய உதவும்.