
உலகத்திலுள்ள 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிக சொத்து மதிப்பினைக் கொண்ட,மிகப்பெரிய பணக்காரர்களைக் குறித்து ஆராய்ச்சி செய்யும் லண்டனில் உள்ள அல்ட்ராடா நிறுவனம், தனது 2023 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய பணக்காரர்கள் அறிக்கையை (Altrata's World Ultra Wealth 2023 report) வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும் 3,95,070 மிகப்பெரிய பணக்காரர்கள் வசிக்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 5.4% ககுறைவாகும்.மேலும், இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.5% குறைந்து,45.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இது முதல் முறையாக குறைந்துள்ளது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வட அமெரிக்காவில் அதிகளவில் உள்ளனர் என்றும் அதாவது அங்கு 1,42,990 பேர்கள், வசிக்கிறார்கள். அடுத்தபடியாக ஆசியாவில் 1,08,370 பேர்கள் வசிக்கிறார்கள். மூன்றாவதாக ஐரோப்பாவில் 1,00,850 பேர்கள் வசிக்கிறார்கள். ஆசியாவில் மிக அதிக பணக்காரர்கள் எண்ணிக்கை 10.9% குறைந்து விட்டது. உக்ரைன் - ரஷ்யா போரும், சீனாவின் கோவிட் சம்பந்தமான கடுமையான கட்டுப்பாடுகளும், சீனாவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையும், சீனாவிற்கு உலகத்திலுள்ள நாடுகளுடான அரசியல் பிரச்சனைகளும் இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.
இதனால், பொருட்களின் நுகர்தலும், மூலப்பொருட்களின் கொள்முதலும் பாதிக்கப்பட்டன. இது தொழில்நுட்ப தயாரிப்பு சந்தைகளான தென்கொரியா, தைவான் போன்றவற்றை பெருமளவில் பாதித்தது. ஐரோப்பாவிலும் அடுத்தபடியாக 7.1% அதிக பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
மேலும், அந்த அறிக்கையின் படி, பின்வரும் நகரங்களில் அதிக அளவில் மிகப் பெரிய பணக்காரர்கள் வசிக்கின்றனர்.
ஹாங்காங் - 12,615
நியூயார்க் - 11,845
லண்டன் - 6,370
லாஸ் ஏஞ்சலஸ் - 6,205
சான் ப்ரான்சிஸ்கோ - 4,385
சிகாகோ - 4,235
சிங்கப்பூர் - 4,160
பாரிஸ் - 3,995
டோக்யா - 3,710
வாஷிங்டன் டிசி - 3,485
இதில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் ஹாங்காங்கின் மிகப்பெரிய பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கூடிய சீக்கிரம், நியூயார்க் முதலிடத்தை பிடித்துவிடும் போல் தோன்றுகிறது. இதில், ஒரு முக்கியமான விஷயம், இந்தியாவில் அதிக பணக்காரர்களின் எண்ணிக்கை வருடா வருடம் 3.2% அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
மேலும், இந்தப் பட்டியலில் இன்னும் சவுதி அரேபியா, பிரேசில் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த அதிக பணக்காரர்கள் சேர்ந்து வருவது, பரவலான பணப் பெருக்கத்தினை காட்டுவதாக உள்ளது. இத்தகைய பண வீழ்ச்சிகள் தற்காலிகமானவை என்று அறிக்கை கூறுகிறது.
2027 ஆம் ஆண்டு, உலகத்தின் மிகப் பெரிய பணக்காரர்கள் எண்ணிக்கை 5,28,100 என அதிகரிக்கும் என்று கணிக்கிறது. மேலும், அவர்களது மொத்த சொத்து மதிப்பு 60.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று கணிக்கிறது.
இந்த அறிக்கையிலிருந்து நாம் அறிந்துக் கொள்வது, உலகத்திலுள்ள பல நாடுகளிலும் அதிக பணக்காரர்கள் உருவாகின்றனர்.மேலும், பணக்காரர்கள் பரவலாக முதலீடு செய்வதால், போர் போன்ற சமயங்களில் கூட, அவர்கள் தொடர்ந்து பணக்காரர்களாக நீடித்து வருகின்றனர்.