
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்நிலையில், இருந்த இடத்திலேயே நம்மால் ஷாப்பிங் மற்றும் வங்கி சேவைகள் உள்பட பல சேவைகளை ஆன்லைனில் அணுக முடிகிறது. நமக்கான வசதிகள் எந்த அளவிற்கு எளிதாக கிடைக்கிறதோ, அதே அளவிற்கு ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது. ஏனெனில் மோசடி செய்பவர்களுக்கு சாதகமாகவும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆன்லைன் வசதி வந்தபின் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்துள்ளன.
ஏடிஎம், கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தெடர்பான மற்ற சேவைகளில் நமக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனே வாடிக்கையாளர்கள் சேவை மைய எண்ணைத் தொடர்பு கொள்வோம். இதில் சேவை மைய எண்ணை நாம் எங்கிருந்து எடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இதன் மூலமும் பண மோசடியில் சிக்கி விடுவோம். எப்படி எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்!
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும், அப்பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் சார்பாக ஒரு சேவை மையம் இருக்கும். நமக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், சேவை மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சில நிறுவனங்கள் பொருட்களின் லேபிளில் சேவை மைய எண்ணை சிறிய எழுத்துருவில் கொடுத்திருப்பார்கள். இதேபோல் மின்கட்டணம் தொடங்கி வங்கி சேவைகள் வரை அனைத்திற்கும் தனித்தனியாக சேவை மையங்கள் உள்ளன.
முன்பெல்லாம் வங்கி சேவைகளில் பிரச்னை ஏற்பட்டால், நேரடியாக வங்கிக்கு சென்று பிரச்னையை சொல்லி சரிசெய்து கொள்வோம். ஆனால் இன்றோ சேவை மைய எண்ணைத் தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வங்கி தொடர்பான சேவை எண்கள் தெரியவில்லை என்றால், உடனே பலரும் ஆன்லைனில் தான் தேடுகின்றனர். இதில் தான் ஒரு சிக்கல் உள்ளது.
நாம் ஆன்லைனில் சேவை மைய எண்ணைத் தேடும் போது, அங்கே வங்கிகளின் பெயரில் சில போலி இணையதளங்களும் இருக்கும். எது உண்மையான இணையதளம் என்பதைக் கண்டறியாமல், சேவை மைய எண்ணைத் தொடர்பு கொண்டால், உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு ஆபத்து தான்.
ஆன்லைனில் சேவை மைய எண்ணைத் தேடி, தொடர்பு கொண்டு பணத்தை இழந்தவர்களும் இங்கே இருக்கின்றனர். ஆன்லைனில் நல்ல விஷயங்கள் இருப்பது போலவே, இதுபோன்ற கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. ஆகவே நாம் தான் கவனமுடன் இருக்க வேண்டும்.
வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் எது என்பதை அறிந்து கொண்டு, அந்த இணையதளத்தில் இருக்கும் சேவை மைய எண்ணைத் தொடர்பு கொள்வது தான் நல்லது. அதிகாரப்பூர்வ இணையதளத்தை அறிந்து கொள்வதில் சிரமம் இருந்தால், வங்கிகளின் அதிகாரப்பூர்வ செயலிகளை பதிவிறக்கம் செய்தும் சேவை மைய எண்ணை எடுக்கலாம். அதே நேரத்தில் ப்ளே ஸ்டோரிலும் நிறைய போலி செயலிகள் இருப்பதை மறக்க வேண்டாம்.
ஆன்லைனே எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், நேரடியாக வங்கிக்கே சென்று பிரச்னையை சொல்லி தீர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம். அதோடு வங்கி ஊழியர்களிடம் சரியான சேவை மைய எண் எதுவென்பதை கேட்டு குறித்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு நாம் கவனமுடன் செயல்பட்டால், மோசடி வலையில் சிக்காமல் தப்பித்து விடலாம்.