

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana - APY) என்பது இந்திய அரசால் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். இத்திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களிடையே காணப்படும் நீண்ட ஆயுள் தொடர்பான இடர்களைக் கையாள்வதற்கும், அவர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக தாமாக முன்வந்து சேமிப்பதை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.
இத்திட்டம் முக்கியமாக ஏழைகள், நலிவடைந்தோர் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர் களை இலக்காகக் கொண்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஓய்வூதியத் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரிடப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் நபர்களுக்கு அவர்களின் 60 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் ரூ.1,000முதல் ரூ. 5,000 வரை உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
1) முக்கிய அம்சங்கள்:
18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் இதில் சேரலாம். வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தங்கள் பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும். செலுத்தும் பங்களிப்புத் தொகையின் அடிப்படையில் 60 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ. 5,000 வரை உத்தரவாதமான மற்றும் நிலையான ஓய்வூதியம் கிடைக்கும்.
2) திட்டத்தின் பலன்கள்:
வாழ்க்கை துணைக்கான பாதுகாப்பு:
சந்தாதாரர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தால் அவரது மனைவி/ கணவர் தொடர்ந்து ஓய்வூதியத்தைப் பெறலாம்.
குடும்ப ஓய்வூதியம்:
இருவரின் மறைவுக்குப் பிறகு அவர்கள் கட்டிய மொத்த மூலதனத் தொகை வாரிசுதாரர்களுக்கு(Nominee) முழுமையாக திரும்ப வழங்கப்படும்.
அரசு பங்களிப்பு:
அரசாங்கமும் சந்தாதாரர்களின் பங்களிப்பில் ஒரு குறிப்பிட்ட பங்கை செலுத்துகிறது.
3) எப்படி இணைவது?
சேமிப்பு கணக்கு வைத்துள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள்(Post Office) மூலம் இந்தத் திட்டத்தில் எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் சேமிப்பு கணக்குடன் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
APY பதிவுப் படிவத்தை நிரப்பவும்.
மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டுத் தவணைகளை உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும்.
தானியங்கிப் பற்று (auto-debit) பங்களிப்புகளுக்குப் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு பங்களிக்கிறீர்கள் என்பது, நீங்கள் விரும்பும் ஓய்வூதியத் தொகை மற்றும் நீங்கள் பங்களிக்கத் தொடங்கும் பொழுது உள்ள உங்கள் வயதை பொறுத்தது.
4) இதன் நன்மைகள்:
உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும்.
இத்திட்டத்தில் செய்யும் முதலீடுகளுக்கு வருமானவரிச் சட்டம் 80CCD(1)-ன் கீழ் வரி விலக்கு பெறலாம்.
வயதாகும் பொழுது வருமானம் குறைவதை சமாளிக்க உதவுகிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிரான பாதுகாப்பு அளிக்கிறது.
ஓய்வுக்குப் பிறகான உறுதியான மாதாந்திர வருமானம், கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்கிறது.
அரசு பங்களிப்பு:
நீங்கள் செலுத்தும் சந்தாத் தொகையில் 50% அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.1,000 வரை (எது குறைவோ) மத்திய அரசே உங்கள் கணக்கில் செலுத்தும். இது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தகுதியான நபர்களுக்கு மட்டுமே பொருந்தும்.