வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு: வட்டியை மிச்சப்படுத்த இதோ ஒரு ரகசியம்!

Home loan money saving tips
Home loan
Published on

சொந்த வீடு வேண்டும் என்ற நடுத்தர மக்களுடைய ஆசையை நிறைவேற்றும் ஒன்றாக வீட்டுக் கடன்(Home loan) இருந்தாலும், இதில் மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி இ.எம்.ஐக்காக சென்று விடுகிறது. நிதிநிலையில் நெருக்கடியை உண்டாக்குகிறது. இதனால் வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் பலரும் அந்தக் கடனை விரைவாக அடைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகின்றனர்.

வீட்டுக் கடனை விரைவாக அடைக்க, கூடுதல் இஎம்ஐ செலுத்துதல், போனஸ் போன்ற கூடுதல் வருமானத்தை முன்கூட்டியே செலுத்துவது, குறுகிய கால தவணைத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது போன்ற பல யுக்திகளைக் கையாண்டு, கணிசமான வட்டிச் செலவை மிச்சப்படுத்தலாம்.

1. தானியங்கி முறையில் செலுத்துதல்:

EMIகளை குறிப்பிட்ட தேதியில் செலுத்துவது அபராதங்களை தவிர்க்கவும், கடன் மதிப்பீட்டை பாதுகாக்கவும் உதவும். இல்லையெனில் இது அபராதத்துடன், நம் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் என்பதால், வேறு கடன்களை பெற முடியாத சூழலுக்கு தள்ளும். எனவே, தவணைத் தொகையை தவறவிடாமல் இருக்க வங்கியின் 'Auto-debit'வசதியை பயன்படுத்துவது அபராதத்தை தவிர்ப்பதுடன் CIBIL ஸ்கோரையும் சீராக வைக்கும். 

2. முன்கூட்டியே செலுத்துதல் (Pre-payments):

கிடைக்கும் சிறிய தொகைகளைக் கூட அவ்வப்போது அசலுக்காக செலுத்துவதன் மூலம் வட்டிச் சுமையை குறைக்கலாம். ஒவ்வொரு மாதமும் EMIயுடன் சிறிய தொகையை சேர்த்தோ, போனஸ் வரும் பொழுது பெரிய தொகையை செலுத்தியோ அசல் தொகையை குறைக்கலாம். இதனால் வட்டி குறையும்.

3. அதிக EMI:

வீட்டுக்கடன் வாங்கும்பொழுது பொதுவாக வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதம், குறைந்த இஎம்ஐ தொகையை தேர்வு செய்கின்றனர். இதனுடன் குறைந்த இஎம்ஐ தொகைக்கு பதிலாக சற்று அதிக இஎம்ஐ தொகையை தேர்வு செய்வதன் மூலம் விரைவாக கடனை முடிக்கலாம். வருமானம் அதிகரிக்கும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் இஎம்ஐ தொகையையும் அதிகரிக்கலாம். இது கடனை வேகமாக முடித்து வட்டி சுமையை குறைக்க உதவும்.

4. குறுகிய தவணை (Shorter Tenure):

ஆரம்பத்தில் இஎம்ஐ அதிகமாக இருந்தாலும், குறுகிய தவணைத் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மொத்த வட்டி குறையும். கடனை சீக்கிரமாக முடிக்க விரும்பினால், தவணைக் காலத்தை(tenure) குறைத்து அதிக இஎம்ஐ செலுத்தலாம். இது மாதத் தவணை தொகையை அதிகரிக்கும், ஆனால் மொத்த வட்டியைக் குறைக்கும்.

5. அதிக முன் பணம் (Higher Down Payment):

வீட்டுக் கடன் வாங்கும் பொழுதே அதிகமாக முன்பணம் செலுத்தினால் கடன் தொகை குறைந்து வட்டியும் குறையும். 

6. Balance Transfer:

உங்கள் வங்கியில் குறைந்த வட்டி விகிதம் கிடைக்க வாய்ப்புள்ளதா என ஆராய்ந்து, தேவைப்பட்டால் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது குறித்து யோசிக்கலாம். குறைந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிக்கு கடனை மாற்றினால் வட்டிச் செலவு கணிசமாகக் குறையும்.

7. வரிச் சலுகைகளை பயன்படுத்துதல் (Tax Benefits):

வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி, வருமான வரிகளை குறைக்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் சேமிக்கும் பணத்தை கடனை அடைக்கப் பயன்படுத்தலாம்.

8. முதலீடுகளை பயன்படுத்துதல்: 

மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றை சரியான முறையில் நிர்வாகித்து, அதிலிருந்து வரும் லாபத்தைப் பயன்படுத்தி கடனை அடைக்கலாம். ஆனால் சந்தை அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பெரிய தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்வதை விட, தொடர்ச்சியான முதலீடுகள் நல்லது.

இதையும் படியுங்கள்:
தங்கம் மட்டுமல்ல, வெள்ளியும் ஒரு பொக்கிஷம்!
Home loan money saving tips

9. இதில் கவனிக்க வேண்டியவை:

கடனை விரைவாக அடைக்கும் பொழுது நம் பட்ஜெட் மற்றும் பிற நிதி இலக்குகளை பாதிக்காதவாறு திட்டமிட வேண்டியது அவசியம். முன்கூட்டியே செலுத்தும் தொகைக்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணங்கள்(Prepayment Penalty) குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com